PUBLISHED ON : ஜன 13, 2020

நிறைய நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் நஞ்சை நிலங்கள். உதாரணமாக நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்களுக்கு நிறைய தண்ணீர் தேவை. ஆக இவை விளையும் நிலம் எல்லாமே நஞ்சை நிலம்தான்.
பெரும்பகுதி ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எல்லா நிலங்களுமே நஞ்சை நிலங்களாகத்தான் இருக்கும். இப்ப புஞ்சைன்னா என்னன்னு நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நீங்க நினச்சது சரிதான். குறைந்த நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யப்படும் நிலங்கள் எல்லாம் புஞ்சை நிலங்கள்.
புஞ்சை நிலங்கள்ல என்னவெல்லாம் விளையும்னு சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோங்க. பருத்தி, கடலை, சோளம், பீன்ஸ், துவரை, எள், உளுந்து, கம்பு, வரகு, சாமை, தினை, மொச்சை, காய்கறிகள், பழங்கள், கீரைகள் இது எல்லாமே புஞ்சை நிலங்களில் விளையும்.
இதுல கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி, புதினா போன்ற கீரைகள் மட்டும் நஞ்சை மற்றும் புஞ்சை ஆகிய ரெண்டு நிலங்களிலும் வளரும்.
அடுத்து முக்கியமான ஒரு விசயம் சொல்லப்போறேன். பூமி உருவானப்போ நஞ்சை புஞ்சைன்னு தனித்தனியாவா உருவாச்சு? இல்லவேயில்ல. எல்லாமே ஒரே புழுதிக்காடாத்தான் இருந்துச்சு. மனுசன் தன்னோட உழைப்பைப் பயன்படுத்தி, காடுமேடுகளையெல்லாம் சமன்படுத்தி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தினான். கொஞ்சம் கொஞ்சமா அந்த நிலங்களை நஞ்சையாகவும் புஞ்சையாகவும் மாற்றி, உணவு உற்பத்தியில தன்னிறைவு அடைஞ்சுட்டான்.
இரண்டுமே சாத்தியம்!
அதிக நீர் பாய்ச்சினா, அது நஞ்சை. குறைந்த நீர் பாய்ச்சினா, அது புஞ்சை. அப்படீன்னா, நஞ்சை நிலத்துல அதிக நீர் பாய்ச்சாம விட்டா அது புஞ்சை நிலமாக மாறிவிடுமா? அதேபோல, புஞ்சை நிலத்துல அதிகமா நீர் பாய்ச்சினா அது நஞ்சை நிலமாக மாறிவிடுமா?
அருமையான கேள்வி. நிச்சயம் ரெண்டுமே நடக்கும். ஆனா, ஒரு விவசாய நிலத்தை நஞ்சை நிலமா மாத்திட்டா, நாள் ஆக ஆக அதுல களிமண் அதிகம் சேர்ந்துடும். அது திரும்ப புஞ்சை நிலமா மாற அந்த மண்ணின் தன்மையைப் பொறுத்து பல ஆண்டுகள் ஆகும். அதேபோல, ஒரு புஞ்சை நிலத்தில் நெல், கரும்பு, வாழை என பயிர் செஞ்சு அதிக நீர்பாய்ச்சி விவசாயம் செய்யச் செய்ய, நாளடைவில் அதுவும் நஞ்சை நிலமாக மாறிவிடும்.
நிலத்தில் பல வகைகள் இருக்கின்றனவா?
பொதுவா மண்ணோட தன்மைய வச்சு சொல்லலாம். செம்மண் நிலம், கரிசல் நிலம், களிமண் நிலம். உவர் நிலம், சதுப்பு நிலம், வண்டல் நிலம்னு நிறையச் சொல்லலாம்.
சங்க காலங்கள்ல முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலைன்னு பிரிச்சாங்களே... அதெல்லாமே மண்ணோட தன்மைய வச்சுத்தான் பிரிச்சாங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, சதுப்பு நிலத்தில் வளரும் பயிர், செம்மண்ணில் நட்டுவச்சா வராது.
* கரும்புக்குக் களிமண் நல்லாருக்கும்.
* கடலைய கொண்டுபோய் களிமண்ணில் நட்டா மகசூல் பிடிக்காது.
* பருத்திக்குக் கரிசல் மண்தான் சிறந்தது.
* நெல்லுக்கு களியும் வண்டலும்தான் சிறந்தது.
* இப்படி ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற மண்ணைக் கண்டுபிடித்துத்தான் நம்ம முன்னோர்கள் விவசாயத்தை சிறப்பா செஞ்சுட்டு வந்தாங்க.
* மண்ணுக்கு ஒவ்வாத பயிர்களை நட்டுவச்சுட்டு, அதுங்களை நல்லபடியா வளர்க்க இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள்னு போடுறது நிலத்தையே மாத்திடும்.
- கே.குணசீலன்
19வது வயதில் 'தமிழகத்தில் அதிக விளைச்சல் பெற்ற கரும்பு விவசாயி'.
மானாவாரியா சொல்லுங்க
மானாவாரி நிலம் என்றால் என்ன?
இந்த வார்த்தையைப் பல இடங்கள்ல கேள்விப்பட்டிருப்போம். மழைய மட்டுமே நம்பி இருக்கும் நிலம்தான், மானாவாரி நிலம். இந்தப் பெயர்க் காரணம் என்னன்னு தெரியுமா உங்களுக்கு? வானவாரி நிலம் என்பதே சரி. வானம்னா ஆகாயம். வாரின்னா நீர்னு ஓர் அர்த்தம் உண்டு. ஆக, வான வாரியை ஆதாரமாகக் கொண்ட நிலம்தான் கொஞ்சம் கொஞ்சமா மருவி மானாவாரி ஆகியிருக்கு. வானத்தை நம்ம கிராமத்துல மானம்னு சொல்றத கேட்டுருக்கீங்களா? அந்த மானத்தை அதாவது வானத்தை மட்டுமே நம்பி உள்ள நிலம்தான் மானாவாரி.
குதிர், பத்தாயம், குலுக்கை இதெல்லாம் என்ன?
இது எல்லாமே ஒண்ணுதான். தானியங்களைக் கொட்டிவைக்கும், மண்ணால் செய்யப்பட்ட ஒரு பெட்டகம்னு வச்சுக்கோங்க. எல்லா தட்பவெப்பநிலைகளையும் தாங்கும். தானியம் கெட்டுப்போகாது. சொல்லப்போனா ஒரு குட்டியான தானியக் கிடங்குன்னு சொல்லலாம். இப்பல்லாம் யாரும் அந்த குதிர உபயோகப்படுத்துறதே இல்லங்க. எல்லாமே நெகிழிப்பை மற்றும் சாக்கு மூட்டைல போட்டு வச்சிடுறாங்க.

