PUBLISHED ON : ஜன 28, 2019

முடிவு பெறாமல் எஞ்சி நிற்கும் வினைச்சொல், தன்னை அடுத்தொரு பெயர்ச்சொல்லை வரவழைத்துக் கொண்டால், அது பெயரெச்சம்.
முழுமை பெறாமல் எஞ்சி நிற்கும் வினைச் சொல்லையடுத்து, மேலும் ஒரு வினைச்சொல் வந்தால் அத்தொடருக்கு வினையெச்சத் தொடர் என்று பெயர்.
'ஒடிந்த கிளை' என்பது பெயரெச்சத் தொடர். ஒடிந்த என்ற எச்சவினையை அடுத்தொரு பெயர்ச்சொல் வந்தது.
'ஒடிந்து கிடந்தது' என்னும் தொடரைப் பாருங்கள். ஒடிந்து என்பது முழுமை பெறாத வினைச்சொல். அதனால் அதுவும் எச்சவினைச் சொல்தான். அந்தச் சொல்லை அடுத்து வந்திருப்பது 'கிடந்தது' என்னும் வினைச்சொல். இங்கே எச்சவினையை அடுத்து பெயர்ச்சொல் வரவில்லை. வினைச்சொல் வந்திருக்கிறது. ஓர் எச்ச வினை, தன்னை அடுத்தொரு வினைச்சொல்லைக் கொண்டு அமைந்தால், அதுதான் வினையெச்சத் தொடர். 'ஒடிந்து கிடந்தது' என்பது வினையெச்சத் தொடர்.
எந்தத் தொடருக்கும் பெரும்பாலும் வலி மிகாது என்னும் அடிப்படையை மறக்கக்கூடாது. அதன்படி, பெரும்பாலான வினையெச்சத் தொடர்களில் வலி மிகாது. ஆனால், வினையெச்சத் தொடரில் உள்ள சிறப்பு நிலைகளைப் பார்ப்போம்.
குற்றியலுகர வகைகளில் அமையும் வினையெச்சச் சொற்கள் ஒரு வகை.
ஒரு வினையெச்சச் சொல், மென்தொடர்க் குற்றியலுகரத்தில் அமைந்தால், அங்கே வலி மிகாது. ஒரு மெல்லின மெய்யெழுத்தை அடுத்து 'கு சு டு து பு று' ஆகிய ஈற்றெழுத்துகளில் ஒன்றைக் கொண்ட சொல்லே மென்தொடர்க் குற்றியலுகரச் சொல்லாகும். மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொற்கள் 'ந்து, ண்டு, ன்று' என்று அமையும்.
எ.கா:
பணிந்து சென்றான்
கண்டு தெரிவித்தான்
மென்று தின்றான்
மேற்சொன்ன வாக்கியங்களில் அமைந்துள்ள முதற்சொல்லான, வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரங்களாக இருக்கின்றன. அதனால் வலி மிகவில்லை.
இடையின மெய்யெழுத்தை அடுத்து வரும், குற்றியலுகர எழுத்தையுடைய சொல், இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லாகும்.
செய்து காட்டினான்
கொய்து தந்தான்
பெய்து கெடுத்தது
இத்தொடர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ய் என்ற இடையின மெய்யை அடுத்து து என்ற குற்றியலுகர ஈற்றெழுத்து வந்தது. இவையே இடைத் தொடர்க் குற்றியலுகர ஈற்றையுடைய வினையெச்சத் தொடர்கள். இடைத்தொடர்க் குற்றியலுகர ஈற்றையுடைய வினையெச்சத் தொடருக்கும் வலி மிகாது.
- மகுடேசுவரன்
