தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முடியாது என்பதே கிடையாது

முடியாது என்பதே கிடையாது

முடியாது என்பதே கிடையாது


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிடிவாதம்

ஓவியாவுக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு. முன்பு பரதநாட்டியம் கற்றுக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் படிப்பு அதிகமானவுடன், பரத வகுப்புகளுக்குப் போவதை நிறுத்திவிட்டாள். ஆனால், எப்போதும் அதைப் பற்றிய ஒரு குற்றவுணர்ச்சி ஓவியாவுக்கு உண்டு. பள்ளிக்கூட ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டு இருந்தது. உமா மிஸ், ஓவியாவை மேடையில் பரதம் ஆட முடியுமா என்று கேட்டபோது, அவளது வலி சட்டென வெளியே வந்தது.

“முடியல மிஸ். பிராக்டீஸே இல்லை.”

அவளது குரலில் தொனித்த வருத்தம், சுற்றி இருந்த எங்களையும் பாதித்தது. உமா மிஸ் தான் சமாதானப்படுத்தத் தொடங்கினார்,

“சனி, ஞாயிறுகளில் தானே டான்ஸ் கிளாஸ்? போக வேண்டியதுதானே?”

“இல்ல மிஸ். படிக்கணும், எழுதணும், அம்மா நிறைய வேலை சொல்றாங்க. எல்லாத்துக்கும் நேரம் பத்தமாட்டேங்குது.”

“நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. சர் ரிச்சர்ட் பிரான்சன் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”

இல்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது.

“இன்னிக்கு, உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில் இருக்கும் முக்கியமான பிரிட்டிஷ்காரர் ரிச்சர்ட் பிரான்சன். வர்ஜின் குரூப்ங்கறது அவரோடு நிறுவனங்கள்.”

“வர்ஜின் ரெகார்ட்ஸ்னு கேள்விப்பட்டிருக்கேன். இவருடையதா மிஸ்?” நான் தலையை நுழைத்தேன்.

“கரெக்ட். அவரேதான். பதினாறு வயசுல படிப்பு நின்னுபோச்சு. அவருக்கு டிஸ்லெக்சியா வேற. பள்ளிக்கூடத்துல படிப்பைத் தொடர முடியல. அப்போ ஆரம்பிச்சதுதான், 'ஸ்டூடண்ட்'ங்கற பத்திரிகை. பின்னாடி, லண்டன்ல ஒரு இசைத்தட்டு விற்பனை கடை வெச்சாரு. இசை ஆல்பம்கள் வெளியிடத் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, உலகத்தின் முதல் ஆறு இசை ஆல்பம்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்ல ஒண்ணாக ஆச்சு வர்ஜின் மியூசிக்ங்கற நிறுவனம்.

அத்தோட அவர் நிக்கல. ஒரு டிராவல் நிறுவனம், விமான நிறுவனம், மெகாஸ்டோர்கள் என்று தொடர்ச்சியாக பல தொழில்களில் முதலீடு செஞ்சுக்கிட்டே இருந்தார்.

எல்லாமே வெற்றின்னு சொல்ல முடியாது. ஏராளமான தோல்விகளும் உண்டு. உதாரணமாக, வர்ஜின் கோலா, வர்ஜின் பப்ளிஷிங், வர்ஜின் குளோதிங்க்னு பல நிறுவனங்கள் தோல்வியைச் சந்திச்சது. அவ்வளவு ஏன், அவருடைய ஆரம்ப கால நிறுவனமான வர்ஜின் ரெகார்டுகள் நிறுவனம் கூட, ஆப்பிள் ஐபாட் வந்தவுடனே, சந்தையிலிருந்து காணாமல் போச்சு.

ஆனால், மனுஷன் அசரல. 'முடியாது என்பதே கிடையாது' என்பதுதான் அவரோட தாரகமந்திரம். தான் நினைச்சதைச் சாதிச்சே ஆகணும்ங்கற உறுதிதான் அவரை இயக்கிக்கிட்டே இருக்கு.

இப்போ கூட, சமீபத்துல மும்பை வந்திருந்தார் ரிச்சர்டு பிரான்சன். மும்பைக்கும் லண்டனுக்கும் இடையே திரும்பியும் ஒரு விமான சேவையைத் தொடங்கணுங்கறதுதான் அவரோட நோக்கம். ஏற்கெனவே இரண்டு முறை இதே முயற்சியைச் செஞ்சார். வர்ஜின் அட்லான்டிக்ங்கற அவரோட விமான நிறுவனம், முன்பு நஷ்டத்தைச் சந்திச்சது. வேற வழியில்லாமல் விமானச் சேவையை நிறுத்திட்டார். இப்போ திரும்பியும் ஆரம்பிக்கறார்.

இது மட்டுமல்ல, மும்பைக்கும் பூனேவுக்கும் இடையே 'ஹைப்பர்லூப்'ங்கற துரித சேவையைத் தொடங்கவும் முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கார் ரிச்சர்ட். இதில்லாமல், அவர் ஒரு கனவுத் திட்டத்தோடவும் இருக்கார். விண்வெளி சுற்றுலாவை உருவாக்கணுங்கறதுதான் அவரோட கனவு. அதாவது, நாம பக்கத்து ஊர்கள், நாடுகளுக்குச் சுற்றுலா போறா மாதிரி, விண்வெளியிலும் சுற்றுலா போகமுடியும். அதற்கான வாய்ப்பையும் வழியையும் உருவாக்கணுங்கறதுதான் திட்டம்.

இதையெல்லாம் கொஞ்சம் நிதானமா பார்த்தா ஒரு விஷயம் புரியும்.

அவர் தன்னோட தோல்விகளைப் பத்தி கவலையே படலை. ஒரு முயற்சி தோற்றுப் போச்சுன்னா, துவண்டு போகலை. அடுத்த திட்டம், அடுத்த முயற்சின்னு ஓடிக்கிட்டே இருக்கார்.

இதுக்குப் பேர் உறுதி, பிடிவாதம். தான் நினைச்சதைச் சாதிக்கும்வரை ஓடிக்கொண்டே இருந்தால் தான், சாதனை செய்ய முடியும். எவ்வளவு பண நஷ்டம், மனக்கஷ்டம், அவமானங்கள், பின்னடைவுகள் வந்தாலும் பரவாயில்ல. எதிலிருந்தும் பின்வாங்கப் போவதில்லை. நீ என்னடான்னா, சும்மா டான்ஸ் கிளாஸுக்குப் போகமுடியலைங்கறே? போக முடியாதுங்கறதுக்கு வரிசையாக காரணங்களை அடுக்கறே. போக முடியுங்கறதுக்கு ஒரு வலுவான காரணத்தைக்கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா?”

ஓவியாவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவள் பேசவில்லை. விடாப்பிடியாக இருப்பதும் பிடிவாதமாக இருப்பதும் எவ்வளவு நல்லது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us