
உங்கள் கனவு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கடிதங்கள் இவை. வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு 5 அம்சங்கள்
ஒரு சில ஆசிரியர்கள், பாடத்தைத் தொடங்கியது முதல் முடியும் வரை மூச்சு விடாமல் நடத்துகின்றனர். இதனால் அவர்கள் மீது வெறுப்பு வருகிறது.
கணித ஆசிரியர்கள் ஒரு பாடத்திட்டத்தை (syllabus) குறைந்தது 5 வருடமாவது நடத்துகின்றனர். அது தவிர, அவர்கள் கணிதத்தில் முதுகலைப் பட்டதாரிகளாகத் திகழ்கின்றனர். இதனால் கணிதம் அவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் மாணவர்களாகிய நாங்கள், ஒரே வருடத்தில் எப்படி கை வந்த கலையாக்குவது? எங்களுக்கு ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி பாடம் நடத்த வேண்டும்.
ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 நிமிடம் மட்டும் அறிவுரை கூறுவது போதுமானது. ஆசிரியர் என்பவர் அனைத்து மாணவர்களிடமும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியாகப் பார்க்க வேண்டும். தோழமையுடன் பேச வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தேவையான 5 அம்சங்கள்
ஒரே இடத்தில் நின்று பாடம் நடத்தக் கூடாது. வகுப்பறையில் நடந்து கொண்டே பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும். சொல்லியதை திரும்பத் திரும்பச் சொல்லக் கூடாது. ஒரு மாணவனை மற்றொரு மாணவனுடன் ஒப்பிடக் கூடாது. பாடத்தை ஒரே மாதிரி வாசிக்காமல் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க வேண்டும். பாடத்தில் உள்ளவை நச்சென்று புரியும்படி நடத்த வேண்டும்.
பி.வி. சுந்தரவல்லி
12 ஆம் வகுப்பு, செளராஷ்ட்ர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், அனுப்பானடி, மதுரை.
கலைத்திறமையை வளர்க்க வேண்டும்
சமூகத்தில் நிறைய பிரச்சனைகளுக்குக் காரணம் சாதியாக இருக்கிறது. ஆகையால் ஆசிரியர்கள், மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது. கிளிப்பிள்ளை பண்புடைய மாணவர்களை இயல்பான ஆற்றல் கொண்ட தலைமுறைகளாக உருவாக்க வேண்டும். திறமை குன்றியவர்கள், திறமை உள்ளவர்கள் என பார்க்காது அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
எங்களுக்கு கல்வி மட்டுமின்றி கலைத்திறமைகளையும் அளித்து, சிறந்த சிற்பிகளாக செதுக்க வேண்டும். கல்வி என்பது வாழ்வை வளர்க்க; கலைத்திறமை என்பது வாழ்வை வசப்படுத்த என்பதை புரிந்து, மாணவர்களை அதன்படி நடத்திச் செல்ல வேண்டும்.
அ.கரியமாணிக்கம்,
9 ஆம் வகுப்பு 'அ'
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை
உண்மை நிகழ்வை வாசித்துக் காட்டுவார்
எனது கனவு ஆசிரியர், 1) துரித வகை உணவுகள் 2) பாரம்பரிய வகை உணவுகள் 3) ஆவியில் வேக வைத்த உணவுகள் 4) உடலுக்கு நன்மை தரும் சரிவிகித உணவுகள் 5) கேடு விளைவிக்கும் எண்ணெய் வகை உணவுகள் 6) நன்மை தரும் கீரை வகை உணவுகள் அடங்கிய பட்டியலைக் குழுவாக தயாரித்து வகுப்பறையில் ஒட்டுவார்.
பூவின் பாகங்கள் பாடத்திற்கு எனது கனவு ஆசிரியர் வகுப்பறைக்கு செம்பருத்தி அல்லது பூவரசம் பூவைக் கொண்டு வருவார். அல்லி வட்டம், புல்லி வட்டம், சூலக வட்டம், மகரந்த வட்டம் என தனித்தனியாக பூவைப் பிரித்துக் காட்டி பாடம் நடத்துவார். ஊரும் பேரும் பாடத்துக்கு, எனது கனவு ஆசிரியர் தமிழ்நாடு வரைபடத்தைக் கொண்டு வருவார். தேனி மாவட்டம்: 1) குறிஞ்சி நில ஊர்கள் - மேகலை 2) முல்லை நில ஊர்கள் - அம்மாபட்டி, ஆண்டிபட்டி 3) மருத நில ஊர்கள் - பெரியகுளம் 4) அரசும் ஊர்களும் - மார்க்கையன் கோட்டை 5) வித்தியாசமான ஊர்கள் - திருநெல்வேலி - காக்காச்சி 2) தூத்துக்குடி - எப்போதும் வென்றான். ஊர்களின் பெயர் காரணத்தை விளக்குவார்.
பு. கோகுல் மித்ரன்
7ஆம் வகுப்பு, சிம் மேல்நிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.
வீட்டின் பின்புலம்...
ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுடைய வீட்டின் சூழலையும், அவர்களின் பின்புலத்தையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு ஆசிரியர் குயவர் போன்று செயல்பட வேண்டும். குயவர் எவ்வாறு தன் கையில் கிடைத்த களிமண்ணை கொண்டு அழகான பொருட்களை செய்கிறாரோ அது போல் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு, மாணவர்கள் அனைவரும் ஒன்றுதான். எனவே ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் ஒழுக்கம், கல்வி, இவற்றில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டும்.
மாணவர்களின் லட்சியம் நிறைவேற ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது.
அ.பரமேஸ்வரி, 8ஆம் வகுப்பு,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி
தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.
வேப்பங்குச்சி வாத்தியார் வேண்டாம்...
ஒரு தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டால், ''ஏன்டா மார்க் குறைஞ்சது'' என்று வேப்பங்குச்சியை வைத்து அடிக்காமல் ''கண்ணா நீ மதிப்பெண் எடுப்பதற்கு தடையாக இருந்தது எது? உன் லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் குறுக்கிடும் முள் எதுவென்று கூறு'' என்று நல்வழிப்படுத்தும் அரிய முத்தாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
சந்தேகம் கேட்கச் சென்றால், ''பாடம் நடத்தும்போது என்ன பண்ணிட்டு இருந்தே முட்டாள்?'' என்று திட்டாமல் சந்தேகத்தை நீக்கும் உயர்ந்த வைரமாக இருத்தல் வேண்டும்.
எப்போது பார்த்தாலும் பாடம் நடத்திக் கொண்டிருக்காமல் அவர்களது அனுபவம், நகைச்சுவை, நாட்டு நடப்பு செய்திகளை இரண்டு நிமிடமாவது பேச வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தோழனாகவும், மாணவிகளுக்கு தோழியாகவும் இருந்தால், எப்போதும் எங்கள் கண்களுக்கு தெய்வமாகப் புலப்படுவார்கள்.
எல்லோரிடமும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும். எங்களுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் தேவதையாக இருக்க வேண்டும்.
பா. வர்ஷினி, பத்தாம் வகுப்பு,
பாரி வள்ளல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,
சிங்கம்புணரி.

