PUBLISHED ON : செப் 19, 2016

கல்கியின் எழுத்துகள் அலாதியான சுவை கொண்டவை. அவர் ஒரு கட்டுரையில் எழுதியது இது:
வாஸ்கோடகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப்பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்த தடியன் இப்போது என் முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு மறு காரியம் பார்ப்பேன். ஆனால் அவன் இறந்து தொலைத்துவிட்டான். இறந்து போனவர்களின் விஷயத்தில் அகிம்சையைக் கைக்கொள்வது அவசியமில்லை என்பது என்னுடைய கொள்கை.
உயிரோடு இருப்பவர்களிடம் அவசியம் அகிம்சா தர்மத்தை அனுசரிக்க வேண்டியதுதான். ஏனெனில் நாம் அவர்களுடைய கன்னத்தில் நாலு அறை கொடுப்பதற்கு முன்னால் அவர்களும் நம்மோடு ஒத்துழைப்பது என்று தீர்மானித்துவிடக் கூடும். இறந்து போனவர்களின் விஷயத்தில் அத்தகைய கவலை இல்லை.
பள்ளிக்கூடத்தில் நான் படித்துக்கொண்டிருக்கும் போது இந்திய தேசத்துக்கு ஒரு ஆபத்து வந்தது. 'இந்தியா கிணற்றில் விழுந்துவிட்டது என்று ஒரு பரிதாபமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் ஓடிப் போய்ப் பார்த்தோம்.
கிணற்றின் அருகே நெருக்கடியான நிலைமையில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் விழித்துக்கொண்டு இருந்தார்கள்.
நான் அந்த நாளில் கேட்ட சில தேசியப் பிரசங்கங்களில், 'தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டதுண்டா?' என்று நம் தலைவர்கள் அலறியது என் காதில் விழுந்தது. அது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது. உடனே இந்தியாவுக்காக ஒரு துரும்பை எடுத்துப்போடுவது என்ன ஒரு கல்லைத் தூக்கியே போடலாம் என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவின் பேரில் ஒரு கல்லைத் தூக்கிப்போட்டேன். உடனே இந்திய தேசம் ஒரு கீச் சத்தம்கூடப் போடாமல் தண்ணீரில் மூழ்கிப் போய்விட்டது.
இவ்வாறு இந்தியாவுக்கு சேவை செய்ததினால் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நஷ்டங்களை சொல்லி முடியாது. அன்று முழுவதும் ஆசிரியர் கட்டளைப்படி பெஞ்சின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்தியா தேசப்படம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருந்தது. இதன்மூலம் மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
- எஸ்.கே.
