தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எம்மொழி செம்மொழி - 'சே' என்றால் என்ன?

எம்மொழி செம்மொழி - 'சே' என்றால் என்ன?

எம்மொழி செம்மொழி - 'சே' என்றால் என்ன?


PUBLISHED ON : செப் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓரெழுத்து ஒருமொழி என்பது, தமிழின் மிகச்சிறந்த சொல்லமைப்பு ஆகும். ஓர் எழுத்தே சொல்லாகவும் தோன்றும், பொருள் தரும். ஆங்கிலத்தில்கூட A, I போன்ற ஒற்றை எழுத்துகள் தனிச்சொல்லாகவும் பயில்கின்றன.

'நீ' என்பது ஓர் எழுத்து. ஆனால், இது முன்னிலையில் உள்ள ஒருவரைக் குறிப்பிடும் பெயர்ச் சொல்லாகவும் வருகிறது.

ஓரெழுத்துச் சொல்லாகவே பயில்வதைப் பயன்படுத்தி, எண்ணற்ற சொற்றொடர்கள் தோன்றியுள்ளன. அவற்றின் பொருளை உணர்ந்தால் வியப்படைவோம்.

ஆவின் பால் என்பது, நாம் நன்கறிந்த சொற்றொடர். ஆவின் என்பது, தமிழ்நாட்டு அரசின் பால்வழங்கும் நிறுவனமாகும். ஆவின் பால் என்பது, என்ன பொருள் தருகிறது? 'ஆ' என்றால் பசு. பசுவின் பால் என்னும் பொருளுடையதுதான் ஆவின் பால். அந்தத் தொடரின் முதற்சொல்லான 'ஆவின்' என்பதே நிறுவனத்திற்குப் பெயராகிவிட்டது.

'ஐ' என்பதற்குத் தலைவன் என்று பொருள். அதனோடு அன் விகுதி சேர்த்து ஐ + அன் = ஐயன் என்கிறோம். அழைப்பதற்கு 'ஐயா' என்று பயன்படுத்து கிறோம். ஐயா எனில், 'தலைவரே' என்று உயர்வாகவும் சிறப்பாகவும் அழைப்பதாகும். இதையே பெண்பாலருக்கு 'ஐயை,' 'ஐயள்' எனலாம்.

'பை' என்றால் மிகவும் இளமை. அன் என்பது ஆண்பால் விகுதி. இளமை மிக்க ஆண்பிள்ளைகளைப் 'பையன்' என்பதும் இவ்வாறே.

'கா' என்றால் சோலை. செல்லும் வழிதோறும் சோலைகளை விரித்துச் செல்வதால்தான் 'காவிரி' என்ற ஆற்றுப் பெயர் வந்ததாகக் கூறுவர். அதனால்தான் பூஞ்சோலைகளைப் 'பூங்கா' என்று கூறுகிறோம்.

'தே' என்றால் இறைவன். ஆரம் என்றால் மாலை. இறைவனின் மீது பாடப்பட்ட பாமாலைகள் 'தேவாரம்' எனப்பட்டது.

'சே' என்பதற்குக் காளை என்பது பொருள். நிலத்தை உடைமையாக வைத்திருப்பவர் நிலக்கிழார். மாடு, மனைகளை வைத்திருந்தவர் 'சேக்கிழார்.'

ஓரெழுத்தே சொல்லாகிப் பயில்வதால், எண்ணற்ற சொற்றொடர்கள் தோன்றி, நம் பயன்பாட்டுக்கு உலவுகின்றன. அவற்றின் பொருளை உணர்ந்ததும், பெருமகிழ்ச்சி உண்டாவதும் உண்மையே.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us