PUBLISHED ON : ஏப் 30, 2018

மேடையில் தனியே பாடுவது கச்சேரி. அனைவரும் ஒருங்கிணைந்து பாடுவது சேர்ந்திசை. உங்களுக்குச் சேர்ந்திசையில் பாட விருப்பமா? உங்களுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கப் போகிறது 'மெட்ராஸ் யூத் காயர்.' குழுவைச் சேர்ந்த நீலா நட்ராஜனிடம் பேசினோம்:
“சென்னையில் 47 ஆண்டுகளுக்குமுன் 'காயர்', அதாவது சேர்ந்திசையை எம்.பி. ஸ்ரீநீனிவாசன் தொடங்கினார். ஐரோப்பா, அமெரிக்காவில் காயரில் பாடுவது மிகவும் பிரபலம். மெட்ராஸ் யூத் காயரில், அனைவரும் பாட வேண்டும், ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். காயர் தொடங்கப்பட்டபோது, எம்.பி.ஸ்ரீனிவாசன் பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இசை அமைத்தார் என்றால், கூட்டாக எப்படிப் பாடுவது, குழுவில் பாடல்களுக்கு எப்படி வரிகளைப் பிரித்துக்கொடுப்பது என்று காயருக்கு ஒரு நல்ல வடிவத்தை வழங்கினார்.
இது ஒரு ரிலே விளையாட்டு. அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் இதை எடுத்துச் செல்ல வேண்டும். அதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க இருக்கிறோம்.”
பலரும் வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ளத்தானே போவார்கள்? காயரில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது?
நான் என்ற எண்ணத்தைச் சேர்ந்திசை உடைத்துவிடும். அனைவரும் குழுவாகப் பாடல்களை கற்றுக்கொள்வார்கள். தன்னைப்பற்றி மட்டும் யோசிக்காமல், அடுத்தவர் பற்றியும் யோசிக்கும் பண்பு இதில் வளரும். குழுவாகப் பாடும் அனைவரும் நன்றாகப் பாட வேண்டும் என்ற மனநிலை உருவாகும். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு இந்தப் பண்பை வளர்க்கும்போது, பாட்டில் மட்டுமல்லாமல், எந்தவொரு விஷயத்தையும் அடுத்தவர் பார்வையிலும் பார்க்கும் பண்பு வளரும். தேசப்பற்றுப் பாடல்கள், சமூக ஒற்றுமைப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பெண்கள் முன்னேற்றப் பாடல்கள், நல்ல கருத்துள்ள தமிழ் மற்றும் பிறமொழிப் பாடல்களைச் சொல்லித் தருகிறோம்.
ஒவ்வொரு குரல் ஒவ்வொரு மாதிரி இருக்குமே. எப்படி இணைப்பீர்கள்?
ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு மாதிரியான குரல்தான் இருக்கும். குரல் எப்படி இருக்கிறது, அவர்களுடைய குரலுக்கு ஏற்றமாதிரியான பாடல்கள் எவை, வரிகளைப் பிரித்துக்கொடுப்பது எப்படி போன்றவற்றை, பாடல் சொல்லித்தருபவர் பார்த்துக்கொள்வார். 'ஹைபிட்ச்' குரல் இருப்பவர்களுக்கு ஒருசில வரிகளும், 'பேஸ்வாய்ஸ்' இருப்பவர்களுக்குத் தகுந்த மாதிரியான வரிகளும் பகிர்ந்து அளிக்கப்படும். அதனால்தான் அனைவராலும் பாட முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
சேர்ந்து பாடுவதால் என்ன பலன் கிடைக்கும்?
சேர்ந்திசையில் சில பண்புகளை மாணவர்களிடத்தில் வளர்க்க முடியும், மாணவர்கள் பள்ளி என்ற சூழலை மறந்து, பலரோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கும். வெவ்வேறு வயதினரின் நட்பைப் பெறுவார்கள். போட்டிகள், மதிப்பெண்கள் என கவலைத்தரும் விஷயங்கள் இருக்காது.
வரவேண்டும், பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். நேரம் இருந்தால் வீட்டில் அதை பாடிப் பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். யாரும் மார்க் போட்டு மதிப்பீடு செய்யப்போவதில்லை. அனைவரோடும் சேர்ந்து பாடி, வேறு ஓர் உலகத்தை உணரும் தருணத்தை ஒவ்வொரு முறையும் பெறுவார்கள்.
மே 5ஆம் தேதி (சனிக்கிழமை) கோடை பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. 25 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் இதில் பங்கேற்கலாம். பாரதியார் பாடல்கள், தாகூர் பாடல்கள் என பல கவிஞர்களின் பாடல்கள் சொல்லித்தரப்படும்.
- விவரங்களுக்கு
தேதி: 5.5.2018
நேரம்: மாலை 4-5 மணி வரை
இடம்: சில்ரன்ஸ் கார்டன் ஸ்கூல், மைலாப்பூர், சென்னை
தொடர்புக்கு: 9940075919, 9840410033
