தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பசுமை பூத்த பள்ளி

பசுமை பூத்த பள்ளி

பசுமை பூத்த பள்ளி


PUBLISHED ON : ஏப் 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியே கோடை வெயில். மே மாதம் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிடும் என்று அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார். 'வெளியே போகாதே. வீட்டுக்குள்ளேயே விளையாடு' என்று அட்வைஸ். மாலை மூன்று, நான்கு மணியானாலும் காற்று வீச மறுக்கிறது. வெக்கை.

யாரோ நல்ல புண்ணியவான், யோசித்துத்தான் கோடை விடுமுறை என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் பள்ளிக்குப் போனால், வேர்த்து வேர்த்து, உருகியே நலியவேண்டியதுதான். கோடையில் மழைபெய்ய வாய்ப்புண்டு என்று ஒருமுறை உமா மிஸ் சொன்னார். அதேபோல், இந்த ஆண்டும் பெய்யுமா என்று 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜானைத்தான் கேட்கவேண்டும்.

“இதெல்லாம் நம்ம தப்பு இல்ல. கோடையிலகூட ஸ்கூல் வெக்கலாம். ஆனால், அதுக்கேத்தா மாதிரி கட்டடங்கள் இருந்தா போதும். மரம், செடி, கொடி எல்லாத்தையும் வெட்டித் தள்ளி, காங்கிரீட் காடுகளை எழுப்பினா கோடை மட்டுமல்ல; மத்த மாசங்கள்லகூட ஸ்கூலுக்குப் போறது கஷ்டம்தான்.” என்று பேச ஆரம்பித்தார் உமா மிஸ்.

மிஸ்ஸுடைய வீடு அடக்கமாக தரைதளத்தில் ஓரமாக இருந்தது. மேலே இரண்டு மாடிகள். அதனால், மிஸ்ஸுடைய வீட்டில் வெப்பம் அதிகமாகத் தெரியாது. மேலும் மிஸ் வீடு முழுக்க செடிகளாக வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மூலையிலும் ஒரு மணி ப்ளான்ட். அழகழகான தொட்டிகளில் அலங்காரச் செடிகள். பார்க்க அழகாக இருக்கும்; பசுமையாகவும் இருக்கும்.

“வேற மாதிரி கட்டடம் கட்டினா, ஸ்கூல் நடத்தலாமா மிஸ்?”

“தாராளமா நடத்தலாம். பாலின்னு ஓர் ஊர் கேள்விப்பட்டிருக்கியா கதிர்?”

“நிறைய டூரிசம் வெப்சைடுகள்ல பாலி பார்த்திருக்கேன் மிஸ்.”

“ஆமாம். இந்தோனேசியாவுல இருக்கு. டூரிசத்துக்கு ரொம்பவும் புகழ்பெற்றது. அதைவிட, அங்கே புகழ்மிக்க ஒரு ஸ்கூல் இருக்கு. அதுக்கு கிரீன் ஸ்கூல்னே பேரு. ஒரு பெரிய நகை டிசைனர் தன் சொத்தையெல்லாம் வித்துட்டு, ஸ்கூல் கட்டினார். அதுதான் இன்றைக்குப் பசுமைவழிப் பள்ளிகளுக்கு வழிகாட்டியா இருக்கு.”

கிடுகிடுவென இணையத்தில் அந்தப் பள்ளியின் புகைப்படங்களை மிஸ் தேடி எடுத்துக் காண்பிக்க ஆச்சரியம் பொங்கியது. எல்லாமே மூங்கில். எல்லாமே இயற்கை. 20 ஏக்கரில் பெரிய பள்ளி. வகுப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது. எல்லா பக்கங்களில் இருந்தும் காற்று வீசும்.

செயல்வழிக் கல்விதான். செய்து பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு தான் அடிப்படை. சேறில் புரண்டு விளையாடுவது உட்பட அனைத்து விளையாட்டுகளும் உண்டு. மாணவர்களே காய்கறி பயிரிட வேண்டும். நெல் நாற்றுவிடக் கற்கவேண்டும். ஆடு, மாடு போன்ற விலங்கினங்களை வளர்க்கத் தெரியவேண்டும்.

சாப்பாடும் சாதா விறகடுப்பில்தான். சூரிய மின் உற்பத்தி மூலம் விளக்குகள் எரியும். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளும் பயிற்சிதான் முக்கியம்.

அதைவிட முக்கியம், பசுமைச் சூழலும், அதில் தாம் ஒரு பகுதி என்பதும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறதாம். வகுப்பில் பாம்பு வந்தால் பயம் வேண்டாம். அதுவும் நம்மைச் சுற்றி வாழும் ஓர் உயிரினம்தானே.

பசுமைச் சூழலில், இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்வது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்கவே இந்த ஏற்பாடு. அழுத்தம் கிடையாது. சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எந்த துரத்தலும் கிடையாது.

“அப்படி படிச்சா நல்லா படிப்பு வருமா மிஸ்?”

“பாடப் புத்தகத்தைவிட, இயற்கையான படிப்பு இருக்கே, அது அதிகம் வரும். மழை 'ஜோ'ன்னு பெய்யும்போதும் கிளாஸ் நடக்கும். கூரை மேல் விழும் மழையோட சத்தம் ஓயறவரைக்கும் ஆசிரியர் கொஞ்சநேரம் இடைவெளி விடுவாங்க. எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்…”

பசுமைப் பள்ளியின் படங்களெல்லாம் என் மனத்தில் ஒட்டிக்கொண்டன. வெயிலையும் மழையையும் மட்டுமே பார்த்துவளர்ந்த எனக்கு, காட்டின் நடுவே பள்ளி, அதுவும் பசுமை பூத்துக் குலுங்கும் பள்ளி என்பது கற்பனையைத் தூண்டிவிட்டது.

“இது ஏதோ, பெரிய இடம் இருக்கற காடு மாதிரியான இடங்களில்தான் நடக்கும்னும் நினைக்கவேண்டாம். அமெரிக்காவுல, நியூயார்க் நகரம் இருக்கு. அங்கே தெற்கு பிராங்க்ஸ்னு ஒரு சின்ன மாவட்டம் இருக்கு. அதுல இருக்கிற ஒரு பள்ளிக்கூடத்துல பெரிய பசுமைப் புரட்சியே நடந்துக்கிட்டு இருக்கு, தெரியுமா?”

ஸ்டீஃபன் ரிட்ஸ் என்ற ஆசிரியர் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் உமா மிஸ். வழக்கமான அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு பெரிய ஈர்ப்பே இல்லை. ஸ்டீஃபன் செய்த மாற்றம்தான், அங்கே குதூகலத்தைக் கொண்டுவந்தது. தன்னுடைய வகுப்பறை முழுவதும் சுவர்களிலும் தூண்களிலும் செடிகளை வளர்க்கத் தொடங்கினார். அவற்றைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுடையது.

“நாம் செடிகளை வளர்க்கிறோம், செடிகள் பிள்ளைகளை வளர்க்கின்றன'' என்பது ஸ்டீஃபனோட புகழ்பெற்ற வரி. இன்னிக்குப் பள்ளிகள் தோறும் பசுமைச் செடிகள் வளர்ப்பதை ஒரு இயக்கமாகவே மாத்திக்கிட்டு வரார் ஸ்டீஃபன்…

உமா மிஸ் இதைச் சொல்லிவிட்டு, இணையத்திலிருந்து ஸ்டீஃபன் படங்களை எடுத்துக் காண்பித்தார். உடம்புக்குள் செடி வளர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தார் ஸ்டீஃபன். நெடுநெடுவென. பளபளவென… ஸ்கூல் திறந்தவுடன், யார் கிளாஸ் டீச்சரோ அவர்களிடம் சொல்லி, செடிகளை வாங்கி வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us