PUBLISHED ON : ஜூன் 27, 2016

அறிவிப்புப் பலகைகள், பெரிய கடைகள், கடிகாரங்கள், சிக்னல்கள் (Signals), ஃபிரேம் (Frame) செய்யப்பட்ட படங்கள் ஆகியவற்றில் மின்மினிப்பூச்சி ஒளி போல அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த விளக்குகள் 'ஒளி உமிழ் இருமுனைய விளக்கு' (லைட் எமிட்டிங் டையோடு விளக்கு -/ Light- Emitting- Diode Lamp) எனப்படும். சுருக்கமாக, எல்ஈடி - LED விளக்கு. 'ஒளி உமிழ் டையோடு' (லைட் எமிட்டிங் டையோட்- / Light- Emitting- Diode) குறைவாக மின் கடத்தும் பொருட்களால் செய்யப்பட்டது. குறைவாக மின் கடத்துதல் என்றால் என்ன? மிகக் குறைந்த மின்னோட்டத்தில் இவற்றை ஒளிரச் செய்யலாம். இந்த பல்புகளின் ஒரு முனையில் கண்ணாடிக் குமிழும் மற்றொரு முனையில் கால்கள் போன்ற மெல்லிய இரு கம்பிகள் சிறிய அளவில் காணப்படும்.
இந்தக் கம்பிகள் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருக்கும். சிறிய கம்பி எதிர்மின் முனையுடனும் (கேதோடு - Cathode) (-), பெரிய கம்பி நேர்மின் முனையுடனும் (அனோடு -- Anode) (+) இணைக்கப்பட வேண்டும். இந்த ஒளிஉமிழ் இருமுனைய விளக்குகள் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த வகையான விளக்குகள் குறைந்த மின்சாரப் பயன்பாட்டில் நீண்ட காலம் செயல்படுபவை என்பதால் அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன.
