PUBLISHED ON : ஜூன் 27, 2016

நம் ஊரில் வெயில் காலம் என்றால்தான் தொப்பியைப் பற்றி யோசிப்போம். மேலை நாடுகளில் தொப்பி அணியாமல் வீட்டைவிட்டு ஒருவர் வெளியேறுவது அவமானத்துக்கு உரிய செயலாகப் பார்க்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தொப்பி என்பது உடையின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. காலப்போக்கில் ஹாலிவுட் சினிமா நடிகர்களும், பாப் பாடகர்களும், தொப்பி அணிவதைக் கைவிட்டு, சிகை அலங்காரங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அவ்வளவுதான் பிரபலங்களைப் பின்பற்றி பொதுமக்களும் தொப்பி அணியும் பழக்கத்தைக் கைவிடத் தொடங்கினார்கள்.
தொப்பியைப் பற்றி சில தகவல்கள்...
உலகம் முழுவதும் எல்லா பிரதேசங்களிலும் மனிதர்கள் காலங்காலமாகத் தொப்பிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். செய்யும் வேலைக்குத் தகுந்த மாதிரியும், அந்தஸ்துக்காகவும், தொப்பிகளும், தலைக்கவசங்களும் அணிந்துகொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது.
தொப்பியில் நான்கு முக்கியப் பாகங்கள் இருக்கின்றன. தலை மேல் கவிழ்க்கும் பாகத்துக்கு கிரவுன் (Crown) என்று பெயர். கிரவுனைச் சுற்றி இருக்கும் வளையத்துக்குப் பிரிம் (Brim)என்று பெயர். முகத்தின் முன்பகுதியில் இருக்கும் பகுதிக்குப் பீக் (Peak)என்று பெயர். தொப்பிகளில் நிறைய வகைகள் இருக்கின்றன.
இதற்குப் பெயர் ட்ரைகோன். பிரிம் பகுதி மூன்று கூம்புகளாக மடிக்கப்பட்டு இருப்பதால் ட்ரைகோன் என்று இதற்குப் பெயர். தோலில் செய்யப்படுகிறது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகமானது. கண்பார்வையை மறைக்காது. மழைக்காலத்தில் மடிக்கப்பட்ட வளைவுகள் தண்ணீரைப் பக்கவாட்டில் வழியவிட்டுவிடும்.
இதன் பெயர் போட்மேன் தொப்பி (Boatman hat). 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமானது. பாரம்பரியமாக வெனிஸ் நகரப் படகுக்காரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது பவுலர் ஹேட் (Bowler Hat). 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிமுகமானது. இதைக் கணக்கர்களும், வங்கி அதிகாரிகளும் அணிந்தார்கள். சார்லி சாப்ளின் இந்தத் தொப்பியைத் தான் அணிந்தார்.
இதற்குப் பெயர் டாப் ஹேட் (Top hat). 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. ஆப்ரகாம் லிங்கன் இந்தத் தொப்பியைத்தான் அணிந்தார்.
இதற்குப் பெயர் ஃபேடோரா (Fedora).18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகமானது. ஹாலிவுட் திரைப்படங்களில் இதைப் பார்த்திருப்போம்.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் துணியால் செய்த தலைப்பாகைதான் தொப்பி. இதை அணிவது சமூக அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டது. சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களுக்குத் தலைப்பாகை அணியும் உரிமையில்லை. வெயிலில் வேலை செய்யும் போது, முண்டாசு கட்டிக்கொண்டு வேலை செய்யலாம்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வின் அடையாளமாகக் கதர் குல்லாய் இருந்தது. வடக்கிலிருந்து தெற்குவரைக்கும் இந்திய தேசியத்தில் ஆர்வம் இருந்தவர்கள், இதை அணிந்தார்கள்.
