PUBLISHED ON : ஜூன் 27, 2016

ஆந்திரப் பிரதேசம், வாரங்கல் மாவட்டத்தில், லக்னேபல்லி என்ற கிராமத்தில் ரங்கா ராவ் மற்றும் ருக்மிணியம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். என் 3ஆம் வயதில், எங்கள் குடும்பம் வங்காரா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தது. அதன்பிறகு, ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் மும்பைப் பல்கலையின் கீழ் வரும் ஃபெர்குசன் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். என் தாய்மொழி தெலுங்கு என்றாலும், மராத்தி உட்பட எட்டு இந்திய மொழிகளை என்னால் பேசமுடியும். அதுமட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ஜெர்மன், பாரசீகம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தேன். என் உறவினர்களுடன் இணைந்து 1940ல் 'ககாதியா பத்ரிகா', என்ற தலைப்பில் வெளியான தெலுங்கு வார இதழில் பிழை திருத்தும் பணியை மேற்கொண்டேன்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றி, சுதந்திரத்திற்குப் பின் முழு நேர அரசியலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் 1951ல் உறுப்பினராகி, 1957ல் மாநில சட்டமன்ற உறுப்பினரானேன். சட்டம் மற்றும் தகவல் அமைச்சர் (1962 -- 1964), சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சர் (1964 -- 1967), உடல்நலம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் (1967 -- 1968), ஆந்திரப் பிரதேசத்தின் கல்வி அமைச்சர் (1968 -- 1971) என பல அமைச்சர் பதவிகளில் பணியாற்றினேன்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதால், 1985ல் இந்தியா முழுவதும் புகழ் பெற்றேன். இந்தியாவின் 9ஆவது பிரதமராக 1991ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அணு பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டேன். மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளை ஒப்பந்தங்கள் மூலமாக இணைத்தேன். செபி சட்டம் மற்றும் பல பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகம் செய்தேன். தேசிய பங்குச் சந்தையை (NSE) 1994ல் தொடங்கிவைத்து, 1996ல் இந்தியப் பிரதமர் பதவியை நிறைவு செய்தேன். என்னை 'இந்திய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தந்தை' என்றும் 'அரசியல் சாணக்கியர்' என்றும் அழைக்கிறார்கள்.
பி.வி. நரசிம்ம ராவ் என்ற பமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ்
பிறப்பு: ஜூன் 28, 1921
மறைவு: டிசம்பர் 23, 2004
