PUBLISHED ON : ஜூன் 27, 2016

சமையலுக்கு அம்மா வாங்கி வரும் காய்கறிகளில், உருளைக் கிழங்கு முறைத்துப் பார்க்கும், தக்காளி சிரிக்கும், கேரட் டான்ஸ் ஆடும் இப்படி ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதமாக நமக்குத் தெரியும். வெண்டைக்காய்களின் தலைப் பகுதியை வெட்டி, முகத்தில் ஒட்டி யாரையாவது பயம் காட்டி இருப்போம். இப்படி, காய்கறிகளை வைத்து சமையலைத் தவிர எல்லாமே செய்திருப்போம். அப்படி ஒன்றை இன்று நாம் செய்து பார்க்கலாம்!
முதல்ல இதுக்கு ஒரு பேரு வைக்கணுமே. தக்காளி வாத்து, உருளைக்கிழங்கு வாத்து, கத்திரிக்காய் வாத்து இப்படி உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே வச்சுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு : 2 (பெரியது 1, சிறியது 1)
தக்காளி : 1 (தக்காளி விலைதான் இப்போது குறைந்துவிட்டதே... அப்படியும் தக்காளி கைவசம் இல்லை என்றால், கத்தரிக்காயைக்கூடப் பயன்படுத்தலாம்.)
பச்சை மிளகாய்: 2
கேரட் : 1
பட்டாணிப் பருப்பு : 2
பல் குத்தும் குச்சிகள்: 3
பசை: கொஞ்சம்
முதலில், பெரிய உருளைக் கிழங்கைப் பாதியாக வெட்டி உடல் போன்ற பகுதியை நிற்க வைக்கவும். சிறிய உருளைக் கிழங்கை, பல் குத்தும் குச்சியில் குத்தி, தலைப் பகுதியில் இணைக்கவும். இப்போது பாதி உருவம் வந்துவிட்டது.
பச்சை மிளகாய் இரண்டையும் பல் குத்தும் குச்சி உதவியுடன் கைகளாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.
கேரட் துண்டு ஒன்றை பசையால் தடவி, வாய்ப் பகுதியில் கவனமாக ஒட்டவும். (கேரட்டை, வாத்து சாப்பிடாது என்று நம்பி ஒட்டவும்!)
தலைக்குத் தொப்பி தேவைப்படுவதால், தக்காளியைப் பாதியாக வெட்டி அதன் உள்பகுதியை நீக்கிவிட்டு தலையில் வைக்கவும். (அல்லது கத்தரிக்காயின் பாதியை தலையில் பொருத்தவும்.)
ஏதோ ஒண்ணு குறையுமே. அட! கண்ணை இன்னும் ஒட்டவே இல்லயே... இது சிற்பிகளின் டெக்னிக், எல்லாமே முடிஞ்ச அப்புறம்தான் கண்ணைத் திறப்பார்கள்...
பட்டாணிகளைக் கண்களாக ஒட்டிவிட்டு, கறுப்பு ஸ்கெட்ச் வைத்து, நடுவில் புள்ளி ஒன்றை வரைந்தால் வாத்து வந்துவிடும்! (நீங்களும் இப்போது சிற்பிதான்!)
நீங்கள்தான் இதை உருவாக்கியவர் என்பதால் உங்கள் கற்பனையில் தோன்றும் பெயரை இதற்கு வைத்துக்கொள்ளுங்கள்.
அப்புறம் என்ன... என்னைப் போலவே நீங்களும், இதனுடன் செல்ஃபி எடுத்து நண்பர்களுடன் பகிர ஆரம்பித்து இருப்பீர்களே...
