PUBLISHED ON : நவ 21, 2016

இனி வானவேடிக்கைகளை காட்ட, பட்டாசுகள் தேவைப்படாத காலம் விரைவில் வரலாம். அதற்கு பதிலாக, அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னி( Disney) மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் (Intel) நிறுவனங்கள், டிரோன்கள் எனப்படும் ஆள் இல்லாத குட்டி விமானங்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. புளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி வேர்ல்டு கேளிக்கை பூங்காவில், 'ஸ்டார்பிரைட் ஹாலிடேஸ்' (Starbright Holidays) என்ற பெயரில் டிரோன்களை பயன்படுத்தி வானவேடிக்கை காட்டப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 280 கிராம் எடை கொண்ட 300 ட்ரான்கள் பயன்படுத்தி, வானில் பிரம்மாண்ட வண்ண ஒளிவடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. 300 டிரோன்களும், ஒரே கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இன்னும் நுட்பமாக வளரும்போது, வானவேடிக்கையில் பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்கள் நிகழும் என்று டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.

