தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முதல் ராணுவப் புரட்சி

முதல் ராணுவப் புரட்சி

முதல் ராணுவப் புரட்சி


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வட இந்தியாவில் 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய வீரர்கள் புரட்சி செய்தார்கள். 'சிப்பாய் கலகம்' என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த எழுச்சியை, 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்' என்று நமது வரலாற்று நூல்கள் சொல்கின்றன. இந்தக் கலகம் நடப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழகச் சிப்பாய்கள் வேலூர் கோட்டையில் வெள்ளையர்களுக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள். 'வேலூர் புரட்சி' எனப்படும் இந்த நிகழ்வு வரலாற்றில் அதிகம் பதிவு செய்யப்படவில்லை.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில், 1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மரணம் அடைந்தார். ஆங்கிலேயர்கள் அவரது வாரிசுகளை வேலூர் கோட்டையில் சிறை வைத்தார்கள். காவலில் இருந்தாலும், இளவரசர்கள் என்ற அந்தஸ்துடன் கோட்டைக்குள் வசிக்கும் அளவுக்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருந்தது. கோட்டைக்கு உள்ளும், வெளியும் அவர்களுடைய விசுவாசிகள் ஆயிரக்கணக்கில் வசித்து வந்தார்கள். 'சந்தர்ப்பம் அமைந்தால், திப்புவின் வாரிசுகளை ஆட்சியில் அமர வைத்துவிட வேண்டும்' என்பது அவர்களது திட்டம்.

இந்நிலையில், ஆங்கிலேய அரசு தங்களது படைகளில் இருந்த இந்திய வீரர்கள், தாடி வைத்துக் கொள்ளக் கூடாது; குறிப்பிட்ட வடிவில் மட்டுமே மீசை வைத்திருக்க வேண்டும்; கடுக்கன் அணியக் கூடாது; விபூதி, குங்குமம் வைக்கக்கூடாது; தோல் குல்லாய்கள் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மத நம்பிக்கை சார்ந்த அலங்காரங்கள் செய்துகொள்வதை ஆங்கிலேயர்கள் தடை செய்ததால், இந்தியச் சிப்பாய்கள் ஆத்திரம் அடைந்தார்கள். இந்த விதிகளைப் 'பின்பற்றமாட்டோம்' என்று பல வீரர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களுக்குக் கசை அடி தண்டனை வழங்கினார்கள். பல பேருக்கு வேலை பறிபோனது.

இது, வீரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலேய வீரர்களை ஒழித்துக்கட்டி, கோட்டையை கைப்பற்ற திட்டம் தீட்டினார்கள். இவர்களோடு திப்புவின் ஆதரவாளர்களும் இணைந்து கொண்டார்கள். 1806ஆம் ஆண்டு, ஜூலை 10 அன்று நள்ளிரவு 2 மணி அளவில், துப்பாக்கிச் சத்தம் விண்ணைப் பிளந்தது. சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம் போன்ற இந்திய வீரர்கள் தலைமையில் சிப்பாய்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். கோட்டைக்குள் இருந்த பெரும்பாலான ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக்கொன்று 4 மணி நேரத்தில் கோட்டையைக் கைப்பற்றினார்கள். பொழுதுவிடிந்தபோது, ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டுத் திப்புவின் புலிக்கொடியை ஏற்றினார்கள். அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணி, கோட்டைக்கு வெளியே இருந்த மக்களை ஒன்று திரட்ட வேண்டியதுதான். அதற்குள் ஆர்க்காட்டில் இருந்து ஆங்கிலப் படைகள் வந்து கோட்டையை வசப்படுத்தின. தோல்வியில் முடிந்தாலும் இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த முதல் இராணுவப் புரட்சி இதுதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us