PUBLISHED ON : அக் 23, 2017

செட்ஜஸ் (Sedges) தாவரவியல் பெயர்: 'சைப்பரேசி' - (Cyperaceae) என்னும் கோரைப் புற்கள், 'போயேசி' (Poaceae) விறைப்புப் புல் வகைகள், 'ரஷ்ஷஸ்' (Rushes) குடும்பத்தைச் சேர்ந்த 'ஜன்கேசி' (Juncaceae) புற்கள், 'கிராமினாய்ட்' (Graminoid) புற்கள் போன்ற தாவரங்கள் முதல் வெப்பமண்டலக் காடுகளில் வாழும் நெடிய முதிர்ந்த மரங்கள் வரை, பல்வேறு தாவரங்களில் அயல்மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுப்பது காற்று.
காற்று வழி அயல்மகரந்தச் சேர்க்கை (Anemophily - அனிமோபைலி) பெரும்பாலான இருபால் மலர்களை உருவாக்கும் தாவரங்களில் அதிகமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இருபால் மலர்களை ஒரே தாவரத்தில் அல்லது இருவேறு தனித்தனி பாலின தாவரத்தில் உருவாக்குவதால் தன்கருவூட்டல் நடைபெறும் வாய்ப்புக் குறைவு. ஆண் பூவின் மகரந்தம், பெண் பூவில் சேர்ந்துதான் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டி வரும்.
விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலும் காற்றுவழி மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் மலர்கள், பொதுவாக நுண்ணியவைகளாக இருக்கும். வண்டு, தேனி போன்ற பூச்சிகளை, பூந்துகள் செர்பிகளாக (Cerbi) சேர்த்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பதால், இந்த வகை மலர்களுக்கு பகட்டான நிறம், மணம் இல்லை. பெரும்பாலும் தேனும் இருப்பதில்லை. ஏன் சில சமயம் பூவிதழ்கள்கூட இருப்பதில்லை. எனவே, பார்வைக்கு இவை மலர்கள் என நாம் கருதுவது இல்லை. காற்றை நம்பித்தான் மகரந்தச் சேர்க்கை என்பதால், இவை பெருமளவில் மகரந்தத்தை உற்பத்தி செய்து காற்றில் வீசுகின்றன. இந்த மகரந்தம் நீரில் அல்லது காற்றில் உள்ள நீர்ப்பசையில் ஈரமாகி விடாதபடி உலர்ந்து இருக்கும். காற்றில் மிதக்கும்படி இலகுவாக இருக்கும்.
இந்த வகைத் தாவரங்கள் பூக்கும் சமயத்தில், பல கோடி நுண் மகரந்தத்தைக் காற்றில் தூவுகின்றன. இதன் காரணமாகத்தான் மரங்கள் பெருமளவு பூக்கும் காலமான வசந்தம் வந்ததும், ஆஸ்துமா மற்றும் தூசியால் வரும் சளிக்காய்ச்சல் போன்ற நுரையீரல் சார்ந்த ஒவ்வாமை நோய்கள் மக்களிடம் பெருகுகின்றன.
த.வி.வெங்கடேஸ்வரன்
