PUBLISHED ON : செப் 26, 2016

அழகான ஓர் ஏரி. அதன் கரையில் வண்ண வண்ணமாய் மலர்ச் செடிகள்.
ஆனந்தமாய்த் திரிகிற பட்டாம்பூச்சி. அதன் பெயர் 'பட்டு'.
ஏரிக்கரையில் பறந்து மகிழும். மலர்ச் செடிகளில் அமர்ந்து ஏரியை வேடிக்கை பார்க்கும். இதெல்லாம் பட்டுவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஏரியிலிருந்த ஒரு அழகிய சிறு மீன் 'ஜிலேபி'. பட்டுவுடைய நண்பன். நீரிலிருந்து துள்ளி எழும்பிக் குதிப்பது அதற்குப் பிடித்தமான விளையாட்டு.
நீரில் நீந்தி, துள்ளிக்குதிக்கும் ஜிலேபியைப் பார்த்து பட்டுவுக்குப் பொறாமை. தானும் அதுபோல் நீரில் குதித்து நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது.
ஜிலேபிக்கோ, பட்டாம்பூச்சி போல காற்றில் பறந்து திரிய கொள்ளை ஆசை.
இவ்வளவு ஆசையிருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தங்கள் ஆசையைச் சொல்லிக் கொள்ளவில்லை. தானும் ஒரு நாளைக்கு பட்டாம்பூச்சி போலப் பறக்க வேண்டும் என்று அதற்கு ரொம்ப நாளாக ஆசை.
ஒரு நாள் ஜிலேபி தன் அம்மா மீனோடு ஏரியின் தூரமான பகுதிக்குச் சென்று விட்டது.
இதுதான் நாம் நீந்திப் பழக சரியான சந்தர்ப்பம். ஜிலேபிக்குத் தெரியாமல் நீந்தக் கற்றுக்கொண்டு, அது திரும்பி வரும்போது அதன் முன் நீந்திக் காட்டி அசத்த வேண்டும் என்று, பட்டு மனதுக்குள் நினைத்துக்கொண்டது.
அமர்ந்திருந்த செடியிலிருந்து மெல்லப் பறந்து, ஏரியின் கரையோரம் நீரில் இறங்கி நீந்தச் சென்றது.
'அய்யோ' என்ன இது… என் உடலை நீருக்குள் செலுத்த முடியவில்லையே!'
நீரின் மேல் விழுந்த பட்டு நனைந்து அலையால் கரைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
'என்னால் நீந்தவே முடியாதா?' என்று யோசித்த பட்டு, தூரத்தில் மீன்காரத் தாத்தா மீன் பிடிப்பதைப் பார்த்தது.
கையிலிருந்த கம்பின் முனையில், பிளாஸ்டிக் நூல் கட்டியிருக்க, முனையில் சிறு முள் கட்டி வீசிக் கொண்டிருந்தார். வீசியதும் நீரில் முள் உள்ளே சென்றது.
பட்டுவுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தானும் தன்னைவிட எடையுள்ள ஒரு பொருளை எடுத்துக் கொண்டு நீரில் குதித்தால் அதன் மூலம் நீரினுள் சென்று நீந்த முடியும் என்று நினைத்தது.
ஏரிக்கரையோரம் இருந்த செடியிலிருந்து விழுந்த ஒரு மலரைக் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு பறக்கத் தொடங்கியது.
ஏரியின் உள்ளே கொஞ்ச தூரம் வந்ததும், அப்படியே நீரில் குதித்தது. குதித்த வேகத்தில் நீரில் சற்று முழ்கியதும் கால்களால் பிடித்திருந்த மலரை விட்டு விட்டது.
இறக்கைகளில் நீர் பரவி, உடல் முழுவதும் நனைந்து போய் மறுபடி மேலே மிதந்து தண்ணீரால் அடித்துச் சென்று கரை ஒதுங்கியது.
பயத்தில் பட்டுவின் உடல் படபடத்தது. இறக்கைகளைச் சிறிது பரப்பிக் காயவைத்துக் கொண்டது.
தன்னால் நீந்த முடியாது என்பதும், தன் உடல் பறப்பதற்கான திறமையைக் கொண்டது என்பதும் பட்டுவுக்கு நன்றாகப் புரிந்தது.
பொன். வாசுதேவன்
