PUBLISHED ON : டிச 02, 2019

பெயர்: ஆரஞ்சு
தாவரவியல் பெயர்:
ருடேசியாய் (Rutaceae)
குடும்பம்: சிட்ரிக்
தாயகம்: சீனா
வளர்வதற்கு ஏதுவான சூழல்: வெப்பமண்டலம், குறைவான குளிர்
இரயில், பேருந்து, வீடு, வீதி என்று எந்த இடமாக இருந்தாலும், ஆரஞ்சுப் பழம் இருப்பதை கமகமவென்று வீசும் நறுமணத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இனிப்பும், புளிப்பும் கலந்த அற்புத சுவைகொண்ட பழம் ஆரஞ்சு.
கி.மு.314ஆ-ம் ஆண்டில் வெளிவந்த சீன இலக்கியங்களில் ஸ்வீட் ஆரஞ்சு எனப்படும் இனிப்புச் சுவையுள்ள ஆரஞ்சு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்தியா அல்லது வியட்நாம் ஆகிய நாடுகள் ஆரஞ்சுக் கனியின் தாயகம் என்கிற கருத்தும் நிலவுகிறது.
சத்துகளின் சுரங்கம் ஆரஞ்சு. குறிப்பாக, வைட்டமின் சி அதிக அளவில் இதில் உள்ளது. ஓர் ஆரஞ்சுப் பழத்தில் 100 மில்லிகிராம் வைட்டமின் -சி இருக்கிறது. இதுதவிர, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என்று உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் கொண்டிருக்கிறது.
உலகிலேயே பிரேசில் நாட்டில்தான் ஆரஞ்சு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த ஆரஞ்சுத் தேவையில் முப்பது சதவீதத்தை இந்த நாடு பூர்த்தி செய்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், அசாம், இராஜஸ்தான், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு அதிகமாக விளைகிறது. தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் கொடை ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதியான நாக்பூர், ஆரஞ்சுப் பழத்திற்குப் பெயர்பெற்ற ஓர் இடமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த ஆரஞ்சு உற்பத்தியில் பெரும்பான்மையானவை நாக்பூரிலிருந்தே கிடைப்பதால், நாக்பூர், ஆரஞ்சு நகரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நாக்பூரில் விளைவிக்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் ஊட்டச்சத்து மிகுந்திருப்பதால், உலகின் மிக முக்கியப் பெரு நகரங்களுக்கு இந்தப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தனித்துவமான ஆரஞ்சுப் பழம் என்பதற்கான புவிசார் குறியீடும் நாக்பூர் ஆரஞ்சிற்குக் கிடைத்திருக்கிறது.
இந்தியா முழுக்க ஆரஞ்சு உற்பத்தி செய்யப்பட்டாலும், ஒவ்வொரு பகுதியில் விளையும் ஆரஞ்சிற்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கிறது. உதாரணத்திற்கு, கூர்க் மற்றும் வயநாடு போன்ற பகுதிகளில் இருக்கும் மண்ணின் தன்மை, காலநிலைக்கு ஏற்ப விளையும் கூர்க் ஆரஞ்சு வேறு பகுதிகளில் கிடைக்காது. அதேபோல, மகாராஷ்டிரத்தின் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே பிரத்யேகமாக விளைபவை நாக்பூர் ஆரஞ்சு. இவைதவிர, டார்ஜிலிங் ஆரஞ்சு, சுமத்திரா ஆரஞ்சு போன்றவை டார்ஜிலிங், அசாம் மாநிலங்களில் மட்டுமே விளையக்கூடியவை.
- காரா
