PUBLISHED ON : செப் 05, 2016

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, புனித வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நான் படித்தேன். ஏழாம் வகுப்பு முடித்து, 8ஆம் வகுப்பு தொடங்கிய நாள் அது. பக்கத்து வகுப்புப் பிள்ளைகள், கமலா என்ற ஆங்கில ஆசிரியரைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தார்கள். 'அவர் தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசுவார்' என்பதுதான் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு.
வகுப்புக்குச் சென்றபோது, 'இந்த வருடம் நான்தான் உங்களுக்கு வகுப்பாசிரியர்; என் பெயர் கமலா' என்றார், அந்த ஆசிரியர். 'அவ்வளவுதான் முடிந்தது கதை' என்று நினைத்தேன். ஒரு வினாடிவினா போட்டி நடத்தி வகுப்பைத் துவங்கினார். கேள்விகள் கடினமாக இருந்தும், நிறைய பேரால் பதில் சொல்ல முடிந்தது. அவர் 'க்ளூ' நிறைய கொடுத்ததால், விடுகதைக்கு விடை கண்டுபிடிப்பது மாதிரி மாணவர்கள் விடையளித்தார்கள். அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும், முந்தைய வருடம் நாங்கள் படித்த பாடத்தில் இருந்தவை என்பதை உணர்ந்தோம். நான் நிறைய கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். 'சென்ற வருடம், நீ என்ன ரேங்க் எடுத்தாய்' என்று கேட்டார். '16ஆவது ராங்க்' என்றேன் தயக்கத்துடன். 'பாடத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொது அறிவு விஷயங்கள்தான்; விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காகப் படிக்க வேண்டும். மதிப்பெண் தானாக வரும்!' என்றார். அதிலிருந்து ஒரு போதும் நான் மதிப்பெண்ணுக்காகப் படிக்கவில்லை. 10ஆம் வகுப்பில் பள்ளியில் 2ஆம் இடம், 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றேன்.
இன்றைக்கு எந்தத் துறை சார்ந்த விஷயமானாலும் என்னால் எளிதாகப் படித்து உள்வாங்கிக்கொள்ள முடியும் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் கமலா டீச்சர்தான். அவர் என் வாழ்வில் ஒரு சிறந்த வழிகாட்டி, தோழி.
- நர்மதா தேவி
