PUBLISHED ON : செப் 05, 2016

ஒன்றாம் வகுப்பில் சேர என்னிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, “அஞ்சு வயசு ஆகிடுச்சா?” முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு, அழுதுகொண்டே வரும் என் போன்றவர்களைச் சமாளிப்பது கடினம். எங்களையும் சமாளித்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை தெய்வானை. அழுதால் மிட்டாய் தருவார் என்பதற்காக தினமும் அழுதுகொண்டே பள்ளிக்கூடம் வருவோம்.
அவரைச் சுற்றி எங்களை வட்டமாக அமர வைத்து சைகைகள் காட்டிக் கதை சொல்வார். நாங்கள் தூங்கி வழியும் போதெல்லாம் 'எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்குங்க' என்று சொல்லிப் பாடம் நடத்துவதை நிறுத்திவிடுவார்.
சிறு வயதில் மூக்கில் லேசாக அடிபட்டாலும் உடனே ரத்தம் வந்துவிடும். “அது சில்லு மூக்குடா, உடைஞ்சா நல்லது. பயப்படாத” என்று சொல்லி முகத்தையும் மூக்கையும் கழுவி விடுவார். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த உடனே சிலேட் கொடுத்து எழுதச்சொல்லவில்லை. புளியங்கொட்டைகளை வைத்து, தரையில் அ, ஆ.. வரைந்து பழகிய பிறகே,
சிலேட், நோட் எல்லாம் கையில் கொடுப்பார்.
இப்படி, ஒவ்வொரு வகுப்பிலும் பிடித்தமான ஆசிரியர் ஒருவர் அமைந்துவிடுவார். ஆனாலும், 'அ' எழுதும் போதெல்லாம் பள்ளி மைதானத்தில் வேப்பமரத்தடியில் என் கையைப் பிடித்து எழுதப் பழக்கிய தெய்வானை டீச்சரின் நினைவுகளும் அவர் சொன்ன கதைகளும்தான் முதலில் நினைவில் வருகின்றன!
- மனோ
