sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கவின்மிகு கன்னியாகுமரி!

/

கவின்மிகு கன்னியாகுமரி!

கவின்மிகு கன்னியாகுமரி!

கவின்மிகு கன்னியாகுமரி!


PUBLISHED ON : மார் 20, 2017

Google News

PUBLISHED ON : மார் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எவ்வித சலிப்பும் இல்லாமல், கடலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வரும் அலையை, கால் நனைத்துப்போகும் நுரையை, தலையை சிலுப்பும் குளிர்காற்றை என்று, கடல் சார்ந்த அனுபவங்கள், எப்போதுமே மகிழ்வைக் கொடுக்கும். ஒரு கடலுக்கே இப்படியென்றால், மூன்று கடல்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதுதானே!

அப்படி ஒரு விவரிக்க இயலாத கடல் அழகை கொண்டிருக்கும் ஊர்தான், கன்னியாகுமரி. தமிழகத்தின் தென்முனையான குமரியில், அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. கன்னியாகுமரி கடலில், சூரிய உதயம், அஸ்தமனம் என இரண்டையுமே பார்க்கலாம்.

விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் இந்தப்பாறை உள்ளது.

விவேகானந்தர், 1892ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்தார். கடலில் எழுந்த பேரலைகளையும் பொருட்படுத்தாமல், கடலுக்குள் அமைந்திருந்த பாறைக்கு நீந்திச் சென்றார். அந்தப் பாறையில் மூன்று நாட்கள் தங்கி தியானம் செய்தார்.

விவேகானந்தரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது மறைவுக்குப் பின், 1972ல் அந்தப் பாறையில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தப் பாறை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கப்படுகிறது.

விவேகானந்தர் பாறைக்குச் செல்ல, படகுப் போக்குவரத்து உண்டு.

காற்று பலமாக அடிக்க, அதனை அனுபவித்தபடி நிதானமாகப் பாறையில் ஏறி நடந்தால், விவேகானந்தர் சிலையோடு ஒரு நினைவு மண்டபத்தைக் காணலாம். அதன் எதிரே 'பாத மண்டபம்' என்ற வழிபாட்டுத்தலமும் உள்ளது.

நினைவுமண்டபத்துக்கு அருகே, ஒரு தியான மண்டபம் இருக்கிறது. விவேகானந்தரைப்போல் நாமும் அலைகளுக்கு மத்தியில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை

திருவள்ளுவர் சிலை

விவேகானந்தர் பாறைக்குச் சற்று தொலைவிலுள்ள இன்னொரு பாறையில், திருக்குறளைத் தந்த அய்யன் திருவள்ளுவருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதனை விவேகானந்தர் பாறையிலிருந்தே பார்க்கலாம்.

இந்தச் சிலையின் மொத்த உயரம், 133 அடி. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில், இச்சிலையின் உயரம் அமைந்துள்ளது.

திருவள்ளுவர் சிலை அருகே, மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றுவர விவேகானந்தர் பாறையிலிருந்து படகுப் போக்குவரத்து உண்டு.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

காந்தி மண்டபம்

கன்னியாகுமரியின் கடற்கரைக் கடைகளிலிருந்து சற்றே விலகி, பரபரப்பான கடைகளுக்கு மத்தியில் நடந்துசென்றால், 'காந்தி மண்டப'த்தைக் காணலாம். அழகிய, விசாலமான அடுக்குமாடிக் கட்டடம் இது.

காந்தியடிகள் இறந்த பின்னர், அவருடைய அஸ்தியைக் கரைப்பதற்காக, கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த அஸ்திக்கலசம், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இடத்தில்தான், இந்த நினைவு மண்டபம் அமைந்திருக்கிறது. இன்றும் காந்தியின் நினைவைப் போற்றும் வகையில், ஏராளமான மக்கள் இங்கே வந்துசெல்கிறார்கள்.

நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

வட்டக்கோட்டை

கன்னியாகுமரியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள அருமையான கோட்டை இது. பதினெட்டாம் நூற்றாண்டில், திருவாங்கூர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.

வட்டவடிவில் அமைந்த கோட்டை என்பதாலேயே, இதற்கு இந்தப்பெயர் அமைந்திருக்கிறது. கோட்டையினுள் நுழைந்து, படிகளில் ஏறிச்சென்றால், விரிந்துநிற்கும் கடலைப் பார்த்தபடி நடக்கலாம். கீழே புல்வெளிகள் மத்தியில், ஓர் அழகிய குளமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

வட்டக்கோட்டை அருகே, விளையாடி மகிழ கடற்கரையொன்றும் இருக்கிறது.

நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை

கன்னியாகுமரி சிறிய நகரம்தான். ஆனால், அங்கே பார்ப்பதற்குப் பல அருமையான இடங்கள் உள்ளன. மேலே நாம் பார்த்த இடங்களுடன், கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் குமரியம்மன் கோவில், தேவாலயங்கள், சுனாமி பூங்கா, கலைப்பொருள் கடைகள் போன்றவையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.

கன்னியாகுமரிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில் மூலம் செல்லலாம். பேருந்து வசதியும் உண்டு. விமானப்பயணத்தை விரும்புவோர், திருவனந்தபுரத்துக்கு வந்து, அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலம் கன்னியாகுமரி வரலாம்.

தங்கும் விடுதிக் கட்டணம்: சாதாரண அறைகள் ரூ. 1000ல் தொடங்குகின்றன. சீசன் நேரங்களில் கூடுதலாக இருக்கும்.

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us