PUBLISHED ON : மார் 20, 2017

பருவநிலை மாற்றத்தால், மக்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து, ஆய்வைச் செய்து முடித்திருக்கிறார் சலீம் கான். அலையாத்தி மரங்களை (Mangroves) பரவலாக்குவது மற்றும் கடல் நீர்மட்ட உயர்வால் ஏற்படப் போகும் பாதிப்புகளைத் தடுக்க, அறிவியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், இவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரின் இந்த முயற்சி, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கியமான சூழலியல் ஆய்வாளராக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இவரின் பணியைப் பார்த்து, நாசா ஆய்வு மையம், இவருக்கு அழைப்பு விடுத்தது. இதுதவிர, ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான அமைப்பும் இவரை கவுரவித்துள்ளது.
அவரிடம் பேசியதிலிருந்து...
“ஒருவேளை என்னோட முடிவுக்கு வீட்டுல சம்மதிக்கலைன்னா, நானும் ஏதோ ஒரு நிறுவனத்துல, கம்ப்யூட்டரைத் தட்டிக்கிட்டு 8 மணிநேரம் வேலை செஞ்சிருப்பேன். நாசாவோ, ஐ.நா.வோ என்னை கண்டுபிடிச்சே இருக்கமாட்டாங்க. பிளஸ் 2 முடிச்சதும், எல்லாரையும் போல பொறியியல் துறையிலதான் சேர்ந்தேன். முதல் ஆண்டில், கணக்குத் தேர்வு எழுதும்போது சட்டுன்னு, 'நாம என்ன செய்றோம்'ன்னு கேள்வி வந்துச்சு. பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திட்டேன். அப்பா, அம்மாவுக்கு கடிதம் போட்டேன்.
என்னோட முடிவால, எங்க வீட்டில் சண்டை வெடிச்சது. மீண்டும் படிப்பை தொடரச் சொல்லி வற்புறுத்தினாங்க. அவங்களுக்கு என் ஆசைகள், கனவுகள் பற்றி கடிதத்திற்கு மேல் கடிதமாக எழுதினேன். என் மனசுக்கும், மூளைக்கும் நடந்த போராட்டத்தில், மனசு ஜெயிச்சுடுச்சுன்னு சொல்லலாம்.
லயோலா கல்லூரியில தாவர உயிரியல் (பிளான்ட் பயாலஜி) சேர்ந்தேன். அந்தச் சமயத்துல நம்ம ஊருல சுனாமி வந்துச்சு. பலருடைய வாழ்க்கைய சுனாமி மாத்திடுச்சு.
சுனாமியால பாதிக்கப்பட்டவங்களுக்காக நிதி திரட்டினோம். ஒரு சுனாமியையே நம்மால தாங்க முடியல. இன்னொரு சுனாமி வந்தா? நினைச்சு பார்க்கவே முடியல. என்னோட வாழ்க்கையில எனக்கு அமைஞ்ச இன்னொரு திருப்புமுனை அது. என்னோட படிப்பையும், சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைச்சு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன்.
உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்யும் முனைவர் சுல்தான் இஸ்மாயிலைச் சந்திச்சேன். அவர்கிட்ட என்னோட கனவுகளைப் பத்தி சொன்னேன். முதுகலையில், பிளான்ட் பயோடெக்னாலஜி (தாவர உயிரி தொழில்நுட்பவியல்) படிச்சேன்.
சுல்தான்தான், என்னோட கனவுகளைப் புரிஞ்சுக்கிட்டு, ஆராய்ச்சிக்கான பாதையைக் காட்டினார். அவர் இல்லைன்னா நானும் எல்லார் மாதிரியும் ஏதோ ஒரு வேலையில சேர்ந்திருப்பேன்.
சரி, அது என்ன ஆரம்பத்திலிருந்து எல்லார் மாதிரியும் சொல்றேன்னு நினைக்கலாம். அதுக்கான காரணத்தையும் சொல்றேன். அறிவியல் ஆராய்ச்சி செய்றவங்க ஏராளமான பேர் இருக்காங்க. ஆனா, அவங்களோட ஆராய்ச்சிகள் மக்களோட வளர்ச்சிக்கு உதவுதா என்பதுதான் என்னோட கேள்வி.
சுனாமியைத் தடுக்கிறது குறித்து, ஆராய்ச்சிகள் செய்ய தொடங்கினேன். சென்னை அடையாறில் இருக்கும் ஊரூர் ஆல்காட் குப்பம் பகுதியில் இருக்கும் அலையாத்தி மரங்கள் என்னை பிரமிக்க வச்சது. அலையாத்தி மரங்கள் சுனாமியை தடுக்கும். ஆனா, அந்தப் பகுதி இளைஞர்களுக்கு இதைப் பத்தின விழிப்புணர்வு குறைவா இருந்துச்சு. சமூகத்தோட தேவையை என்னோட ஆராய்ச்சியில இணைச்சதோட பலன்தான், அண்ணா பல்கலைக்கழகம், நாசா, ஐ.நா.ன்னு என பலருக்கும் என்னை அடையாளம் காட்டுச்சு. என்னோட மனசு சொன்னதை கேட்டேன், அதுவே சாதனைகளா மாறிடுச்சு.
இளைஞர்களுக்கு? நாம் சரியாத்தான் செயல்படுறோமா என்று உங்களுக்குள்ள அடிக்கடி கேளுங்க. நீங்களும் உங்களுக்கு பிடிச்ச விஷயத்துல சாதனைகள் செய்யலாம்.
நாசா என் இலக்கு இல்ல, என் கனவை புரிஞ்சுகிட்டதால கூப்பிட்டாங்க' என்றார் சலீம் கான்.
சாதனைகள்:
• ஐநா அமைப்பின் சிறந்த இளைஞர் விருது (United Nations Youth Campaign Award - Climate Change)
• இந்திய இளைஞர்களுக்கான பருவநிலை மாற்றம் குறித்த பிரதிநிதிக்குழு உறுப்பினர் (Indian Youth Delegation Climate Change - COP 22)
• நாசாவின் அடுத்த தலைமுறை பருவநிலை இளம் ஆய்வாளர் (NASA- Next Generation Climate Change Scholars)
• தமிழக அரசின் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் உறுப்பினர்

