PUBLISHED ON : மார் 20, 2017

“அசோக் நகரிலிருந்து எண்ணூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டான் பாலு.
“நீ எப்போது போகப் போகிறாய் என்பதைப் பொறுத்தது.” என்றார் ஞாநி மாமா. “அதெப்படி தூரம் நேரத்துக்கு ஏற்ப மாறுமா என்ன?” என்று சிரித்தான் பாலு. “அந்த 30 கிலோமீட்டர் அப்படியேதான் இருக்கும். அது மாறாது. ஆனால் நீ காலையும் மாலையும் நெரிசல் நேரத்தில் சென்றால் இரண்டு மணி நேரமாகும். போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரங்களில் சென்றால் ஒரு மணி நேரம்தான் ஆகும். ஒரே தூரம். வெவ்வேறு நேரம். உனக்கு நேரம் முக்கியமா? தூரம் முக்கியமா?” என்றார் மாமா.
“நெரிசல் பிரச்னையெல்லாம் கார், பஸ், ஆட்டோவில் சாலையில் போனால்தானே, மாமா? சீக்கிரமே சென்னையில் ஹெலிகாப்டர் டாக்சி வந்துவிடும். வானத்தில் நெரிசல் இருக்காது இல்லையா?” என்றான் பாலு.
“வானத்திலும் நெரிசல் உண்டு. விமானங்கள் ஒரே நேரத்தில் வரும்போது இறங்க இடமில்லாமல் கொஞ்சம் நேரம் வானத்திலேயே வட்டமிட வேண்டியிருக்கும். தவிர விமானத்தில் நாள்கணக்கில் சென்ற கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் மாமா.
எப்போதுமே கதை கேட்க எங்களுக்குப் பிடிக்கும் என்பதால் ஆர்வமாகக் கேட்டோம்.
லண்டலினிருந்து தென் ஆப்ரிக்காவில் இருக்கும் கேப்- டவுனுக்கு சாலை வழியே சென்றால் சுமார் 13 ஆயிரம் மைல். காக்கா பறக்கிற மாதிரி நேர்க்கோட்டில் பறந்தால் 10 ஆயிரம் மைலுக்கும் கம்மி. காரிலோ பஸ்சிலோ போனால் ஏழெட்டு நாட்களாகும். விமானத்தில் பறந்தால் 10, 12 மணி நேரத்தில் போய்விடலாம் என்றுதானே நினைக்கிறோம்? விமானிகள் ரெனால்டுக்கும் குவிண்ட்டினுக்கும் மொத்தமாக 110 மணி நேரம், சுமாராக நான்கரை நாட்கள் ஆகியிருக்கிறது என்றார் மாமா. அதையும் துண்டு துண்டாக 45 நாட்களில் பறந்திருக்கிறார்கள்.
ஏன் அப்படி என்று கேட்டேன். அதுதான் லண்டனிலிருந்து கேப் டவுனுக்கு முதல் விமானப் பயணம். வருடம் 1920. அப்போது விமானங்கள் இப்போது உள்ள வேகத்தில் பறக்கத் தயாராகவில்லை. லண்டனிலிருந்து புறப்பட்டு 11 மணி நேரத்தில் வானிலை சரியில்லாததால் சூடானில் இறங்கினார்கள். விமானத்தில் ரேடியேட்டர் ஒழுக ஆரம்பித்தது. அதை ரிப்பேர் செய்ய 11 நாட்கள்! அடுத்து பறக்கத் தொடங்கியதும் புலாவயோ என்ற இடத்தில் விமானம் எடை தாங்காமல் கீழே இறங்கிவிட்டது. வேறு விமானத்தை வரவழைத்து பயணத்தை முடித்தபோது 45 நாட்களாகிவிட்டன.
“முதல் முயற்சி என்றால் எப்போதும் இப்படி எதிர்பாராத சிக்கல் இருக்கத்தான் செய்யும். அதை மீறி செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் அதில் கிடைத்த அனுபவத்திலிருந்து அடுத்த முறை இன்னும் சரியாகச் செய்வதற்கான அறிவு கிடைக்கும்.” என்றார் மாமா.
“ஹைப்பர் லூப் வந்துவிட்டால் தரையிலேயே படுவேகமாகப் போய்விடலாம்” என்றது வாலு. ஹைப்பர் லூப் என்பது ஒரு பிரும்மாண்டமான குழாய் கட்டி அதற்குள் ரயிலைச் செலுத்துவது. குழாய்க்குள் காற்றை உறிஞ்சி எடுத்து வெற்றிடமாக்கி விடுவார்களாம். அதனால் மின் காந்தத்தால் இயங்கும் ரயில் படுவேகமாகப் போக முடியுமாம். சென்னையிலிருந்து டில்லிக்கு இப்போது விமானத்தில் இரண்டு மணி நேரமாகிறது. ஹைப்பர் லூப்பில் அரை மணி நேரம்தான் ஆகுமாம்.
“உலகத்தில் எங்கேயாவது இதை செய்து பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்டேன். “எல்லாமே இன்னும் ஆராய்ச்சிக் கட்டத்தில்தான் இருக்கிறது. ஹைப்பர் லூப்புக்கான ரயில் மாதிரிகளை உருவாக்க உலகம் முழுக்க மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ அருகே சோதனை ஓட்டத்துக்காக 30 கிலோமீட்டர் பாதையை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.” என்றது வாலு.
“இவ்வளவு வேகமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போய் என்ன செய்யப்போகிறோம்? இருக்கும் இடத்திலேயே செய்ய நிறைய வேலை இருக்கிறதே!” என்றேன்.
“வேலை இருக்கிறது. ஆனால் ஆட்கள்தான் தகுதியோடு இல்லை. இந்தியாவில் பொறியியல் படித்து முடித்து வருபவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லையாம். அதாவது இவர்களில் பெரும்பாலோருக்கு வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கு போதுமான அறிவும் திறமையும் இல்லையாம். ஏதோ மனப்பாடம் செய்து படித்து முடித்துவிட்டு ஜஸ்ட் பாசில் வந்துவிடுகிறார்கள். ஆளுமைத் திறன், குழுவுடன் பணியாற்றும் திறன், புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறன் எதுவும் இல்லை என்று ஆய்வில் சொல்லப்பட்டிருக்கிறது.” என்றார் மாமா.
“அதையெல்லாம் எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டாம் என்று நாங்களா சொல்லுகிறோம்? பாடத் திட்டத்தை உருவாக்கிய பெரியவர்களான நீங்கள்தானே அதற்குப் பொறுப்பு?” என்று மாமாவைக் கேட்டேன். “நாங்கள்தான் பொறுப்பு. சந்தேகமே இல்லை. ஆனால் சூழல் இப்படி பற்றாக்குறையாக இருக்கும்போது நீங்கள் உஷாராக இருந்து உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்களே தேடிப் பிடித்து அடைய முயற்சிக்க வேண்டும். வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும். ஆசிரியர்களிடம், பெற்றோரிடம் ஓயாமல் கேள்வி கேளுங்கள். படிப்பைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேளுங்கள். அவர்களோடு சேர்ந்து பதில்களைத் தேடுங்கள்.” என்றார் மாமா.
“எல்லாம் ஒரே நாளில் மாறிவிடுகிற மாதிரி மந்திரக்கோல் எதுவும் கிடையாதா?” என்று விளையாட்டாகக் கேட்டான் பாலு. “அந்த மாதிரி மந்திரக்கோல் கதையில்தான் இருக்கும். படித்து ரசிக்கலாம். வாழ்க்கையில் மேஜிக் எதுவும் நடக்காது. நம்முடைய முயற்சி, உழைப்பு, ஆர்வம் இதெல்லாம்தான் எதையும் சாதிக்கும். மேடையில் மேஜிக் செய்யக் கூட கடும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும். கடுமையாக உழைத்ததால்தான் ஹூடினி பிரபலமான மேஜிக் நிபுணர் ஆனார்.” என்றார் மாமா.
ஹூடினி பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன். பிரபலமான அமெரிக்க தந்திரக் கலைஞர். வெறுமே சீட்டுக் கட்டு, தொப்பியிலிருந்து முயல் வரவழைப்பது மாதிரி மேஜிக் மட்டும் செய்தவர் அல்ல அவர். அவர் கைகளைக் கட்டி பலமாக விலங்கு போட்டுவிட்டால், தானே விடுவித்துக் கொண்டு வந்துவிடுவார். கையையும் காலையும் கட்டி தலைகீழாக தண்ணீர் தொட்டிக்குள் தொங்கவிட்டாலும், மூச்சையடக்கிக் கொண்டு தப்பித்து வெளியே வருவார். பேய்கள், ஆவிகள் உதவியுடன்தான் நாங்கள் மேஜிக் செய்கிறோம் என்று சொல்லி ஏமாற்றியவர்களையெல்லாம் அவர் அம்பலப்படுத்தினார்.
“ஹூடினியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன?” என்று கேட்டார் மாமா. “மேஜிக்” என்றான் பாலு. “இல்லை. நம்மை யார், எது, எவ்வளவு கட்டுப் படுத்தினாலும், அதிலிருந்து தப்பித்து வருவது நம் கையிலேயேதான் இருக்கிறது என்பதுதான் அவருடைய மேஜிக்கிலிருந்து வாழ்க்கைக்கு நாம் அறியவேண்டிய பாடம்.” என்றார் மாமா.
“அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மாதிரி. தங்களைத் தாங்களேதானே அவர்கள் போராடிப் போராடி விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்றேன். “உண்மைதான். அப்படி விடுதலை பெறுவதற்கு எங்கிருந்து என்ன உதவி வந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும் வேண்டும்.” என்ற மாமா, ஹேரியட் எலிசபெத் பீச்சர் எழுதிய அங்கிள் டாம்'ஸ் கேபின் நாவலைப் பற்றிச் சொன்னார்.
அடிமைகளாக இருந்த கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலை, மனநிலை எல்லாவற்றையும் அந்த நாவல் விவரித்திருக்கிறது. ஒரே வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகள் விற்றன. அதன் விளைவாக அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்குமான உள்நாட்டுப் போரே தொடங்கியிருக்கிறது.
“ஒரு புத்தகம் அப்படியெல்லாம் செய்யுமா?” என்றான் பாலு.
“ஒவ்வொரு நல்ல புத்தகமும் ஒரு ஆயுதம் மாதிரி. அதனால்தான் சர்வாதிகாரிகள் எப்போதும் புத்தகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். மனத்தில் மாற்றத்தையும் சமூகத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்த சிறந்த ஆயுதம் புத்தகம்தான். பாரதி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?” என்றார் மாமா.
“ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம்” என்றது வாலு.
“ஆயுதம் புத்தகம்தான். அதனால்தான் அடுத்த வரியிலேயே அந்த ஆயுதம் செய்ய தேவையான காகிதத்தைச் சொல்லியிருக்கிறார்” என்றார் மாமா.
“நீ புத்தகம் எழுது. நான் காகிதம் தயாரிக்கிறேன்.” என்றான் பாலு.
வாலுபீடியா 1: தந்திரக் கலைஞர் ஹூடினி ( 24.3.1874 - - 31.10.1926)யை கடுமையாக எதிர்த்த மதவாதிகளில் ஒருவன் “கடவுளும் ஆவியும் இல்லையென்றால், என் குத்தை உன்னால் தாங்க முடியுமா?” என்று கேட்டு அடி வயிற்றில் தொடர்ந்து குத்திய குத்துகளினால் பாதிக்கப்பட்டு ஹூடினி இறந்தார்.
வாலுபீடியா 2: அங்கிள் டாம்ஸ் கேபின் நாவல் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் மட்டும் 15 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.

