PUBLISHED ON : ஜன 18, 2016

மாலு முதன்முதலில் என் கனவில் வந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது நான் ஒரு சிறுவர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தேன். முதல் இதழைத் தயாரிக்கும்போது அதில் நான் என்ன எழுதுவது என்று மண்டையை உடைத்து மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். அப்போது தான் கனவில் மாலு வந்தாள்.
மாலுவுக்கு பத்து வயது இருக்கலாம். “என்னைப் பத்தி எழுதுங்க மாமா” என்றாள். நிறைய சிறுமிகள் என்னை 'அங்கிள்' என்று கூப்பிடுவார்கள். இவள் 'மாமா' என்று தமிழில் கூப்பிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”இயன்றவரை தமிழிலே பேசு. இயன்றவரை தமிழிலேயே எழுது' என்று பாரதி மாமா சொல்லியிருக்கிறார்.” என்றாள் மாலு. எனக்கு மாலுவை மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனக்குப் பிடித்த பாரதியை அவளுக்கும் பிடித்திருப்பது ஒரு காரணம். ”தினமும் நான் கனவுல வந்து சொல்றதை நீங்க எழுதுங்க.” என்றாள் மாலு. சரி என்றேன். அடுத்த நாள் படுத்து தூங்க ஆரம்பிக்கும் வரை தூக்கம் வருவதற்காக 1,2,3... சொல்லும் என் வழக்கத்துக்கு பதிலாக, மாலு 1, மாலு 2 மாலு 3 என்று சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டேன். அப்போது தான் மாலு கனவில் தவறாமல் வருவாள் என்ற நம்பிக்கை!.
ஆனால் அன்றைக்கு மாலு வரவில்லை. வாலு தான் வந்தது!
வாலு ஒரு எலி! இல்லை. ஓர் எலி. (உயிரெழுத்துப் பெயருக்கு முன்னால் 'ஓர்'தானே வரும்.) இல்லை இல்லை, வாலு ஒரு மவுஸ். கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும்'மவுஸ்' சட்டென்று பார்த்தால் ஒரு வெள்ளெலி மாதிரியே இருந்தது. 'மாலு வரலியா?” என்று என்னை விசாரித்தது. அது மாலுவின் சிநேகி.....'தன்' போடுவதா, 'தி' போடுவதா என்று தெரியாமல் அதையே கேட்டேன். 'ஏய் அற்ப மானிடனே, நாங்களெல்லாம் ஜெண்டர், பாலினம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள்” என்றது. “சரி அப்படியே இருக்கட்டும்.” என்றேன்.
வாலு வந்த அடுத்த நாள் பாலு வந்தான். அவன் மாலுவை விட ஒரு வயது சின்னவன். இந்த மூன்று பேரும் ரொம்ப ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட்ஸாம். அப்புறம் அடிக்கடி என் கனவில் வந்து லூட்டி அடிப்பார்கள். எனக்கு எப்படா திரும்பவும் தூங்குவோம் என்று தோன்றும். தூங்கினால்தானே இவர்கள் வருவார்கள், அதனால்தான்!
அதற்குப் பிறகு பல வருடங்கள் ஓடிவிட்டன. பல ஊர்களுக்குப் போயிருக்கிறேன். பல பள்ளிக் கூடங்களில் ஏராளமான சிறுவர் சிறுமிகளை சந்தித்திருக்கிறேன். எந்த சிறுமியைப் பார்த்தாலும் எனக்கு இது மாலு மாதிரியே இருக்கிறதே என்று தோன்றும். சிறுவன்கள் எல்லாரும் பாலு ஜாடையிலேயே இருப்பார்கள். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்ததும் அருகே இருக்கும் கறுப்பு மவுஸ் திடீரென வெள்ளையாக மாறி வாலு போலத் தோன்றும்.
'பட்டம்' வரப் போகிறது என்ற அறிவிப்பு 'தினமலர்' நாளிதழில் இந்த வாரம் வெளியான அன்று இரவு மாலு, பாலு, வாலு மூவரும் என் கனவில் வந்துவிட்டார்கள். என்ன ஆச்சரியம்! மூன்று பேரும் அப்படியே இருக்கிறார்கள்! எனக்குதான் 16 வயசு அதிகமாகி முடி கொட்டி மீசை நரைத்துவிட்டது. ஆனால் அவர்கள் அப்டியே அதே இளமைத் துடிப்போடு இருக்கிறார்கள். எப்படி என்று கேட்டால், மாலு 'அது அப்படித்தான்' என்கிறாள்.
என்னைப் பார்த்ததுமே மூன்று பேரும் முதலில் விசாரித்தது சென்னை வெள்ளம் பற்றித்தான். என் வீடு முழுகியதா என்று கேட்டார்கள். மாலுவும் பாலுவும் முதல் மாடியில் இருந்து தப்பித்தார்களாம். வாலு கீழ் வீட்டில் வெள்ளம் புகுந்தபோதும், மேசையில் இருந்ததால் தப்பித்துக் கொண்டதாம்.
“ஏரியில் வீடு கட்டினால் இப்படித்தான் ஆகும்” என்றேன்.
“ஏரியில்தான் சென்னையே கட்டப்பட்டிருக்கிறது” என்றாள் மாலு. ”அதெல்லாம் போன பத்து இருபது வருஷமாகத்தான். ஏரியிலேயே லே-அவுட் போடுகிறார்கள்” என்றேன்.
“இல்லை மாமா. சுமார் 100 வருஷம் முன்னால் சென்னையின் மிகப் பெரிய ஏரியில்தான் தென் சென்னையின் முக்கியமான ஒரு இடமே உருவாகியிருக்கிறது” என்றான் பாலு. '1924க்கு முன்னால் தியாகராய நகரே கிடையாது தெரியுமா? அங்கே ஏரிதான் இருந்தது' என்று பாலு சொல்லும்போதே, மாலு வாலுவைக் கூப்பிட்டு கூகிளில் 'லாங் டேங்க்' என்று அடிக்கச் சொன்னாள்.
'இந்த மேப்பைப் பாருங்க. இது 1909ம் வருட மேப். இந்த லாங் டேங்க்குங்கற மயிலாப்பூர் ஏரி சேத்துப்பட்டிலருந்து சைதாப்பேட்டை வரைக்கும் இருக்கு. ஒரு கரை அண்ணா சாலை. இன்னொரு கரை மாம்பலத்துல இருக்கற ஏரிக்கரை சாலை. நடுவுல இருந்த ஏரியைத்தான் இப்ப காணோம். அதுலதான் மொத்த தியாகராய நகரும், பனகல் பார்க்கும் நுங்கம்பாக்கமும் வள்ளுவர் கோட்டமும் இப்ப இருக்கு” என்று விவரித்தான் பாலு.
“ஆனா இந்த எடம்லாம் பெரிசா முழுகலியே, அது எப்படி?” என்று கேட்டேன்.
'அதுக்குக் காரணம் 1920-24ல இதக் கட்டறப்பவே ஒழுங்கா பாதாள சாக்கடை, மழை நீர் கால்வாய் எல்லாம் கட்டி வெச்சிருக்காங்க. இப்ப புதுசா கட்டற எடத்துல எல்லாம் இதை ஒழுங்கா செய்யறதில்ல. ரோடு மட்டும்தான் இருக்கு. சாக்கடையே கெடையாது” என்று விளக்கினாள் மாலு.
“அப்ப ஏரியில வீடு கட்டினா பரவாயில்லையா?”
“இல்ல மாமா. அன்னிக்கு அஞ்சு லட்சம் பேர் இருந்த சென்னையை விரிவு படுத்த அந்த ஏரியைப் பயன்படுத்தியிருக்காங்க. இப்ப 80 லட்சம் பேருக்கு மேலே இருக்கோம். இவ்வளவு பேருக்கும் நிறைய தண்ணி வேணும். அதனால் ஏரியை இனிமே எடுக்க முடியாது. இனிமே ஊரை அகலப்படுத்தக் கூடாது. ஒசரப்படுத்தணும்” என்றாள் மாலு.
“ஒசரப்படுத்தறதா? தமிழ்ல அப்பிடி ஒரு வார்த்தையே நான் கேட்டது இல்லியே?”
“மும்பைல ரொம்ப ரொம்பப் பணக்காரங்க கூட தனி வீட்டுல இல்ல. அபார்ட்மென்ட் மாதிரி அடுக்கு மாடி கட்டடத்துலதான் இருக்காங்க. நாமும் சென்னையில ஒசரக் கட்டிக்கிட்டு வாழப் பழகணும்” என்றான் பாலு.
“மனுஷங்க அகலமா, குண்டா இருந்தா அழகாவா இருக்கு? ஒல்லியா, உயரமா இருந்தாதானே நல்லா இருக்கு… அதேதான் பில்டிங்குக்கும். ஊருக்கும்” என்றது வாலு.
'நீ அகலமா குண்டாதானே இருக்கே” என்றேன். 'நான் மனுஷனோ பில்டிங்கோ ஊரோ இல்லியே” என்றது வாலு. எல்லாரும் சிரித்தோம். வாலுவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. துள்ளித் துள்ளிக் குதித்து சிரித்தது. அந்த அதிர்ச்சியில் மேசையில் இருந்த என் நோட்டுகள் எல்லாம் சரிந்து விழுந்தன. 'என்ன இதெல்லாம்?” என்றாள் மாலு. 'எல்லாம் புத்தம் புது டயரி. விதவிதமான சைசுல பல பேர் எனக்கு குடுத்துருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் வருது. ஆனா நான் டயரி எழுதறதே இல்ல' என்றேன்.
“அப்ப எனக்குக் குடுங்க மாமா. நான் எழுதறேனே” என்றாள் மாலு. “எல்லாத்தையும்.”
“அவ்வளவுலயும் எழுதுவியா ?”
'ஒவ்வொண்ணுலயும் கொஞ்சம் கொஞ்சம் நான் எழுதுவேன். கொஞ்சம் பாலு. கொஞ்சம் வாலு. மொத்தமா எல்லாத்துலயும் எல்லாரும் எழுதுவோம்.”
“சரி இந்தாங்க. ஆனா ஒரு கண்டிஷன். எல்லா டயரியையும் நான் படிப்பேன்.”
மாலு சிரித்தாள். “நீங்க மட்டும் இல்ல. யார் வேணா படிக்கலாம் மாமா. எங்க வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.” மூன்று பேரும் எல்லா டயரிகளையும் அள்ளிக் கொண்டு மாயமாய் மறைந்தார்கள்.
(இன்னும் கொஞ்சம் பக்கம் இருக்கு….)
