தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொந்த முகம்!

சொந்த முகம்!

சொந்த முகம்!


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“காயத்ரி, காயத்ரீ...”

“இதோ வந்துட்டேம்மா…” எழுதிக் கொண்டிருந்த வீட்டுப் பாடத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வந்தாள்.

“இந்தா உன்னோட ஸ்கூல் கிராஃப்ட் வொர்க். எப்படி இருக்கு..? அம்மாவே உனக்காக செஞ்சு முடிச்சுட்டேன்” என்றாள் வள்ளி.

“அம்மா.... அது...”

“என்னடி, நல்லாருக்கா, இல்லையா?”

“ம்ம்… நல்லாருக்கும்மா.”

“நீயா செஞ்சிருந்தா கன்னாபின்னான்னு செஞ்சிருப்ப. இப்ப கொண்டு போய்க் கொடு ஸ்கூல்ல.”

“சரிம்மா.”

மறுநாள் காயத்ரியைப் பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, காயத்ரியின் அம்மாவிடம், கூட வந்த பெண் பேசிக்கொண்டிருந்தாள்.

“இந்த ஸ்கூல்ல ரொம்ப கஷ்டப்படுத்தறாங்க. எப்பப் பாரு அந்த கிராஃப்ட் பண்ணு, இதைப் பண்ணு, டிராயிங் வரை அது வரைன்னு... பாவம் இல்லைங்களா குழந்தைங்க…”

“கஷ்டம் பாத்தா ஆகுங்களா..? குழந்தைங்களாச் செய்ய முடியாதுல்ல. நாமதான் செஞ்சு குடுக்கணும்.”

இன்னொரு நாள்.. பள்ளியில், “காயத்ரி, நாளைக்குப் பேச்சுப் போட்டி. ஞாபகம் இருக்கா?”

“ஆமா டீச்சர், நெட்ல தேடி நிறைய பாயின்ட்ஸ் எடுத்து வச்சிருக்கேன்…”

“அதெல்லாம் கிடக்கட்டும்… இந்தா, இதை மனப்பாடம் பண்ணிக்கோ, எப்படி பேசணும், எங்கே நிறுத்தணும் எல்லாம் நான் சொல்லித்தரேன். அது மாதிரியே பண்ணு.”

“ஓ… வந்து… ஓகே டீச்சர்.”

பள்ளி ஆண்டு விழா. பரிசு வழங்கும் நிகழ்ச்சி.

“பேச்சுப் போட்டி முதல் பரிசு, காயத்ரி… ”

காயத்ரி மேடைக்குச் சென்று பரிசு வாங்கிக் கொண்டாள். “இரும்மா…” தலைமை ஆசிரியை அவளை நிறுத்தினார்.

“இன்னமும் ஒரு பரிசு உனக்கு இருக்கு.”

“க்ராஃப்ட் வொர்க்ல இரண்டாவது பரிசு, காயத்ரி”

மற்ற பரிசுகள் மாணவியருக்கு வழங்கப்பட்டன. கடைசியாக ஓவியப் போட்டிக்கான பரிசு.

தலைமை ஆசிரியை பேசினார்… “ஓவியப் போட்டியின் முதல் பரிசு காயத்ரிக்குப் போக வேண்டியது. ஆனால் அவள் வரைந்த பள்ளிச் சிறுமி ஓவியத்தில், ஏனோ முகத்தின் பாகங்களை வரையாமல் விட்டுவிட்டாள். இந்த ஒரு குறையால் அந்தப் படம், ஆறுதல் பரிசைப் பெறுகிறது…”

பரிசை வாங்கிக்கொண்ட காயத்ரி மைக் அருகே போனாள். “பேச்சுப் போட்டிக்கான இந்தப் பரிசை நான் கிளாஸ் மிஸ்ஸுக்குத் தரணும் மேம். அவங்கதான் எனக்கு ஸ்பீச் ரெடி பண்ணித் தந்தாங்க.”

“அட! குடேன்… உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்.'

“அப்புறம் மேம், நான் வேணும்னேதான் முகம் வரையல.”

“அப்பிடியா?”

“அது என்னை மாதிரி ஸ்டூடண்ட்டோட முகம் மிஸ்.”

“புரியலையே…”

“மிஸ், கிராஃப்ட் வொர்க் ரெண்டாவது பரிசு, பேச்சுப் போட்டில முதல் பரிசு நான் வாங்கினேன்தானே. அதெல்லாம் என் டேலன்ட் இல்லை. கிராஃப்ட் அம்மா செஞ்சு குடுத்தாங்க. பேச்சுப் போட்டிக்கு மிஸ் எழுதிக் குடுத்தாங்க.”

“....”

“நான் கிராஃப்ட் செஞ்சு அதுல தப்புன்னா கரெக்ட் பண்ணிருக்கலாம். மொத்தமே அவங்க செஞ்சா அது அவங்களோட ப்ராஜக்ட்தானே, அதே மாதிரி பேச்சும் மிஸ்ஸே எழுதிக் குடுத்தாங்க.”

“...”

“எப்பவும் அம்மா சொல்றது, மிஸ் சொல்றது, அப்படித்தான் செஞ்சுட்டு இருக்கேன். நானா எதுவும் செய்யறது இல்லை. அதான் முகத்தில் அடையாளம் இல்லாத இந்த டிராயிங். அந்தப் பொண்ணு பேருகூட காயத்ரின்னு எழுதியிருக்கேன் பாருங்க…”

தலைமை ஆசிரியை திகைத்தார். பின்பு, “சரி, போய் உட்காரு” என்றார்.

மைக் அருகே போன தலைமை ஆசிரியை, தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“காயத்ரி சொன்னது உங்களுக்கெல்லாம் கேட்டுதா? பிள்ளைகளின் திறனை மேம்படுத்துவதற்காக சில விஷயங்களைச் செய்யச் சொல்கிறோம். அதை மற்றவர்கள் செய்து கொடுப்பது சரியா? கூட்டத்தில் சலசலப்பு.

“சொந்த உழைப்பால் முன்னேறுவதுதான் நிலைக்கும்னு உணர்த்திய காயத்ரிக்கு ஓவியப் போட்டியில் சிறப்பு முதல் பரிசு வழங்குகிறேன்.”

அப்போது கூட்டத்தில் எழுந்த கைதட்டல் ரொம்ப நேரத்துக்கு ஒலித்தது.

- ஐயப்பன் கிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us