PUBLISHED ON : செப் 19, 2016

எண்கள் ஏராளம். ஆனால் ஏழு என்ற எண்ணிற்கு மட்டும் உலகில் நிறைய சிறப்பிடம் உண்டு. உலக அதிசயங்கள் ஏழு, வாரத்தின் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு என்பதில் இருந்து இந்த ௭ஐ மக்கள் செல்லமாகக் கொண்டாடுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அத்துடன் கடையேழு வள்ளல்கள் ஏழு, இசையில் ஸ்வரங்கள் ஏழு, திருவள்ளுவர் குறளில் தந்த சீர்கள் ஏழு எனவும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறுவர்களுக்கான கதைகளில் கூட ஏழு கடல், ஏழுமலை தாண்டி என்றுதான் ஏழு என்ற எண்ணை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏழ் பிறப்பு உண்டு என்ற சமய நம்பிக்கை நம்முன்னோர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் ஔவையார் தன் 'நல்வழி' நூலில் 'எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்' என்று பாடியிருக்கிறார். இது தவிர, அகநானூறு, குறுந்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் ஏழு எண்ணை சிறப்பிக்கும் பாடல்கள் நிறைய உண்டு.
நாம் மட்டுமல்ல, உலகில் உள்ள வேறு சில நாடுகளும் ஏழு என்ற எண்ணை செல்லம் கொஞ்சுகின்றன. குறிப்பாக கிரேக்க மக்களிடம் இந்த நம்பிக்கை அதிகம் இருந்துள்ளது. அவர்களுக்கு ஏழு புனித எண். ஆனால் ஜப்பான் மக்கள் மட்டும் ஏழை நன்மை, தீமை இரண்டும் கலந்த எண்ணாகப் பார்க்கிறார்கள்.
