PUBLISHED ON : செப் 19, 2016

நாம் ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில், கார், விமானம் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துகிறோம். அதுவே நம் தாத்தா பாட்டி காலத்தில், போக்குவரத்து அவ்வளவாக முன்னேற்றம் அடையவில்லை. அவர்கள் வெளியூர் போகவும், பொதிகளைச் சுமந்து செல்லவும் மாட்டு வண்டிகளையே பெரிதும் பயன்படுத்தினார்கள்.
மாட்டு வண்டிகளில் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என இரண்டு விதம் உண்டு. நிலங்களில் விளையும் காய்கறி, தானிய மூட்டைகளை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று வர வண்டிகள் பயன்பட்டன. சில வண்டிகளில் நிழல் தரக்கூடிய குடை இருக்கும். சில வண்டிகளுக்கு அது இருக்காது. மாறாக இருபுறமும் மரக் கொம்புகள் நட்டு வைத்திருப்பார்கள். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது மூட்டைகள் சரிந்து விழாமல் இருக்க கொம்புகள் உதவின.
நீண்ட தூரப் பயணங்களுக்கும் மாட்டு வண்டிகளையே பயன்படுத்தினார்கள். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, நாட்டுப் புறப் பாடல்களைப் பாடிச்செல்வார்கள். மாடுகளுக்கு களைப்புத் தீர ஆங்காங்கே வண்டியை நிறுத்தி தீனி போட்டு ஓய்வு கொடுப்பார்கள்.
மாட்டு வண்டியின் குடையில் ஒரு லாந்தர் விளக்கு தொங்க விட்டு இருப்பார்கள். அது இருட்டில் வழி தெரிய உதவும். மாடுகளின் கழுத்தில் சலங்கை அல்லது மணி கட்டப்பட்டிருக்கும். சாலையில் மாடுகள் செல்லும்போது மணி ஓசை, காற்றில் இசை எழுப்பியபடி செல்லும்.
சங்க காலத்திலும் வணிகம் செய்ய மாட்டு வண்டிகள் பயன்பட்டன. குறிப்பாக, உப்பு விற்கும் உமணப் பெண்கள் கடற்கரைக்கு அப்பாலுள்ள உள்நாடுகளுக்கும், மலைநாடுகளுக்கும் எருதுகள் பூட்டிய வண்டிகளில் உப்பை ஏற்றிச் சென்று விற்று வந்திருக்கிறார்கள். பண்டமாற்றாய் நெல் வாங்கி வந்தார்கள் என்பதை அகநானூறு (191: 1-4), புறநானூறு (60: 7-9), நற்றிணை (138: 1-3) போன்ற பாடல்கள் வழியாக அறிய முடிகிறது.
ஒரு காலத்தில் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும் மாட்டு வண்டிகளே உதவின.
காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றதில், மாட்டு வண்டிகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது.
