
எட்வர்ட் ஜென்னர்
17.5.1749 - 26.1.1823
பெர்க்லே, இங்கிலாந்து.
18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பரவிய அம்மை நோய் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது. இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்த முடியாமல் உலகமே பரிதவித்தது. அச்சமயத்தில் அம்மைத் தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்து, மனித குலத்தைக் காப்பாற்றினார் டாக்டர் எட்வர்ட் ஜென்னர்.
பதினான்கு வயதிலேயே அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் சேர்ந்து பயிற்சி பெற்றார். உயிரியல் துறை மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவம் படித்தார். தான் பயின்ற கல்லூரியோடு இணைந்த மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பயிற்சி பெற்றார். ஒரு நாள் அந்த மருத்துவமனைக்கு பால் விநியோகம் செய்யும் பெண் ஒருவர் வந்தார். அவர் மூலமாக மாட்டம்மை (Cow pox) நோய் தாக்கியவர்களுக்கு, பெரியம்மை வராது என்ற கருத்தைத் தெரிந்து கொண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடங்கினார் ஜென்னர்.
1796இல் மாட்டம்மை நோய் தாக்கிய பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து சிறுவனுக்குச் செலுத்தினார். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால் தாக்கப்பட்டவரின் உடலில் இருந்து கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்தச் சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.
ஜென்னர், இதே சோதனையைப் பலரிடம் நடத்தி வெற்றி பெற்றார். மாட்டம்மை கிருமிகளை வலிமை குறைத்து ஒருவரது உடலில் செலுத்தினால், அவரைப் பெரியம்மை தாக்காது என்பதை ஜென்னர் நிரூபித்தார். தனது அரிய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறாமல் இலவசமாக வழங்கினார். மேலும், தனக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு 1808இல் தேசிய தடுப்பூசிக் கழகத்தையும் நிறுவினார். கொடிய நோயிலிருந்து மனித குலம் காத்த எட்வர்ட் ஜென்னர் 'நோய்த் தடுப்பூசிகளின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.