PUBLISHED ON : டிச 09, 2019

இந்திய ஜனநாயகத்தில், மத்திய, மாநில அரசுகளைப் போலவே ஒவ்வொரு ஊரிலும் ஓர் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காக, இந்திய அரசியல் சட்டத்திலேயே கொண்டு வரப்பட்டது புதிய பஞ்சாயத்து அரசாங்கம்.
1993ஆம் ஆண்டு நம் சட்டத்தைத் திருத்தி, இந்தப் புதிய சட்டம் வந்தது. அண்மையில், நூற்று மூன்றாவது முறையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
அதைப்போல 73வது சட்டத்திருத்தம் வந்து ஒவ்வோர் ஊராட்சியிலும் கிராமப் பஞ்சாயத்துகள் என்று அரசாங்கம் அமைய வேண்டும் என்பதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி 9 பஞ்சாயத்துகள் அமைய வழிவகுக்கிறது.
புதிய பஞ்சாயத்துச் சட்டத்தில் வந்ததுதான் 'கிராமசபை.' கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அந்தப் பஞ்சாயத்து நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும்.
அதற்காக, கிராமத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளன, என்னென்ன வரவு செலவுகள் நடக்கின்றன என்று அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஓட்டுப் போடுவதைத் தாண்டி, ஊர் மக்கள் நேரடியாகப் பங்கெடுத்து, அந்த ஊர் வளர்ச்சிக்கு சட்ட ரீதியாக வேலை செய்வதற்கான இடம்தான் 'கிராமசபை.'
'கிராமசபை' என்கிற சக்தி வாய்ந்த அமைப்பில், வாக்குரிமை பெற்ற அனைவரும் (18 வயதை எட்டியவர்கள்) கலந்துகொள்ளலாம். தங்களுக்குத் தேவைப்படுபவை என்ன, அவற்றைப் பெறுவதற்கான திட்டங்கள் என்ன, திட்டங்களை எந்த விதத்தில் செயற்படுத்தலாம், அவற்றுக்கான நிதி ஆதாரங்களைப் பெறுவது எப்படி என்றெல்லாம் ஊர் மக்களே முடிவெடுக்க முடியும்.
ஊராட்சியின் வரவு- செலவுக் கணக்குகளையும் 'கிராமசபை'யில் விவாதிக்கலாம். இந்தச் சபை அங்கீகரித்தால்தான், வரவு- செலவுக் கணக்கு அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
ஊராட்சியையும் கிராமசபையையும் ஊர் மக்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும்?
உதாரணத்துக்குச் சில: ஆறு, குளம், போன்ற நீர்நிலைகளை மேம்படுத்தலாம். கால்நடை வளர்ப்பு, மரபு சாரா எரிசக்தி, மரம் வளர்ப்பு, வேளாண் வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தலாம். கல்வி, மருத்துவம், குடிநீர் விநியோகத்துக்கான திட்டங்களைத் தீட்டி, ஊரை மேம்படுத்தலாம்.
இது பற்றிய விழிப்புணர்வுதான் இப்போதைய தேவை. இந்தப் புரிதல் இருந்தால், ஒரு கிராமம் எளிதாகத் தன்னிறைவு பெற்றுவிட முடியும்.
இந்தக் குறிக்கோளோடு தான் 'தன்னாட்சி அமைப்பு' தமிழ்நாட்டின் கிராமங்களில், உள்ளாட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
