
செங்குதச் சின்னான்
ஆங்கிலப் பெயர்: 'ரெட் வென்டட் புல்புல்' (Red Vented Bulbul)
உயிரியல் பெயர்: 'பைக்நோநோடஸ் கேஃபர்' (Pycnonotus Cafer)
வேறு பெயர்கள்: செங்குதக் கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு, கொண்டலாத்தி
மைனாவை விடச் சிறிய பறவை. மரங்களில் அடையும் 'பாசரைன்' (Passerine) பறவைகளுள் ஒன்றாகும். சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றுகளிலும் அதிகமாகக் காணக் கிடைக்கும். மலைப்பகுதிகளில் காணப்படும் நீண்ட கருங்கொண்டையைக் கொண்ட செம்மீசைச் சின்னான்களைப் போலன்றி, இவற்றின் கொண்டைகள் சற்றே சிறிய அளவில் இருக்கும். தலையும் கழுத்துப் பாகமும் கருப்பு. விழிகள், அலகு மற்றும் கால்கள் எண்ணெய்க் கருப்பு. உடலும் உடலை மூடும் இறகுகளும் பழுப்பு நிறம். சிறகுகளின் ஓரங்களில் இருக்கும் வெண்மை சிதைத்தது போன்றதொரு தோற்றத்தை இறகுகளுக்குக் கொடுக்கும். வயிற்றுப்பகுதியும் மேல் வாலின் மறைவுப்பகுதியும் நல்ல வெண்ணிறமாக இருக்கும். நீண்ட கரும் வாலின் விளிம்பு மட்டும் வெண்ணிறத்தில் கோடு போலத் தெரியும்.
இந்தப் பறவையின் முக்கிய அடையாளம், வாலின் அடிப்பாகம் செக்கச் செவேலென ரத்தச் சிவப்பாகக் காட்சியளிப்பதே. இதனாலேயே செங்குதச் சின்னான் எனும் பெயரைப் பெற்றது. ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒரே மாதிரியாகத் தெரியும் என்றாலும்
முழு வளர்ச்சியடையாத பறவைகளின் இறகு வண்ணம் சற்று மங்கலாக இருக்கும். ஆண்டு முழுவதுமே உற்சாகமான குரலில் பரபரப்பாகக் கூவும். வெவ்வேறு விதமான ஒலிகளில் பாடும்.
பழங்கள், பூக்களின் மடல்கள், தேன், சிறு புழு பூச்சிகள் போன்றவையே இவற்றின் உணவு. கூடுகளைத் தட்டையாகக் கிண்ண வடிவில் மெல்லிய குச்சிகள், காய்ந்த வேர்கள், புற்கள் மற்றும் கிடைக்கிற உலோகக் கம்பிகளையும் கூட உபயோகித்துக் கட்டுகின்றன. பெரும்பாலும் 6 முதல் 9 அடி உயரத்திலான தாழ்ந்த கிளைகள் மற்றும் வீடுகளின் மேற்புறங்களில் கட்டிக்கொள்கின்றன. 2 முதல் 3 முட்டைகளை இடும். 14 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகளை ஒரு வார காலம் வளர்த்து பிறகு பறக்கவிட்டு விடும். நாம் அழைக்கும்போது அருகே வந்து கொடுக்கும் உணவைப் பிரியமாக வாங்கிக்கொள்ளும்.
இந்தியா முழுவதிலும், குறிப்பாகத் தென்னிந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படும் பறவை. தெற்கு ஆசியாவில் இந்தியாவில் தொடங்கி இலங்கை, கிழக்கில் மியான்மர், தென்மேற்கு சீனா வரை பரவலாகக் காணப்படுவதோடு, உள்ளூர்ப் பறவையாகவே கருதப்படுகிறது.
உயரம்: 20 செ.மீ.
ஆயுள்: 10 ஆண்டுகள்

