PUBLISHED ON : அக் 15, 2018

வழக்கம்போல் என் மின்னஞ்சலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் பள்ளிப் பாடவேளையில் மாற்றங்கள், புதிய போட்டிகள், வொர்க்ஷீட்டுகள் ஆகியவை மின்னஞ்சலிலேயே வந்துவிடுகின்றன. பொதுவாக பார்த்துக்கொண்டு இருந்தபோது, வெங்கடேஷ் மாமாவிடம் இருந்து ஒரு கடிதம் பொட்டென்று வந்து விழுந்தது.
சமீபத்தில் ஜெர்மனி போயிருக்கிறார் மாமா. அவரை நான் விமான நிலையம் போய் வழியனுப்பி வைத்தேன். அவரது கடிதத்தைப் பார்த்தவுடன் மனம் குதூகலித்தது. என்னைப் போன்றவர்தான் வெங்கடேஷ் மாமாவும். எப்போது பார்த்தாலும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். அவரின் மின்னஞ்சலைப் படிக்கத் தொடங்கினேன்:
“அன்புநிறை கதிர், நவராத்திரி விடுமுறையில் வீட்டில்தான் இருப்பாய் என்று நினைக்கிறேன். ஜெர்மனி வந்ததில் இருந்து நான் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஒரு விஷயத்தை இன்றுதான் பார்க்க முடிந்தது.
மற்ற நாடுகளைவிட, ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியில் கல்வித் திட்டங்கள் மிகவும் வித்தியாசமானவை. இன்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, இங்கே வழக்கமான கல்வியோடு, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் உண்டு. அது எப்படி வழங்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். இன்று அறிந்துகொண்டேன்.
மழலையர் வகுப்புகள் 3ஆம் வயது முதல் 5ஆம் வயது வரை நடத்தப்படுகின்றன. அதன் பிறகு தொடக்கப் பள்ளி. தொடக்கப் பள்ளி முடிந்து, அதாவது 11 வயது ஆகும்போதே, இங்கே மாணவர்களைத் தரம் பிரித்துவிடுகிறார்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்தே, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள். ஒரு மாணவனின் கல்வித் தரம், குறிப்பாகப் புரிந்துகொள்ளும் சக்தி, காட்டக்கூடிய ஆர்வம், விருப்பமான துறை ஆகியவற்றைத் தெளிவாகக் கண்டறிந்து விடுகிறார்கள்.
அதற்குமேல் அம்மாணவனை எந்தத் திசையில் கொண்டுசெல்லவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். முழுமையான அறிவியல் கல்வி ஒருபுறம், வழக்கமான கல்வியோடு தொழிற்கல்வி மறுபுறம்; முழுமையான தொழிற்கல்வி இன்னொரு புறம். அதாவது எந்த மாணவன்/மாணவியாக இருந்தாலும், அவன்/அவள் நிச்சயம் ஏதேனும் ஒரு தொழிற்கல்வியில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும். 18 வயதில் பள்ளிப் பருவத்தை நிறைவு செய்யும்போது, சொந்தக் காலில் நிற்பதற்குத் தகுதியான ஒரு கைத்தொழில் அவரிடம் இருக்கும்.
அதற்கு மேல் அவர் பல்கலைக்கழகம் போனாலும் போகலாம். அல்லது நேரடியாக வேலைக்கும் போகலாம்.
இங்கேதான் சுவாரசியமே ஆரம்பிக்கிறது. சுமார் 350 தொழிற்கல்வியைப் போதிக்கும் எண்ணற்ற தொழிலகங்கள் இருக்கின்றன. தொழிலகங்கள்தான் இங்கே கல்வியையே மேம்படுத்துகின்றன என்று சொல்லலாம். அவர்கள் மாணவர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள். தியரிட்டிக்கலாக சொல்லிக்கொடுப்பது ஒருபுறம், நேரடிப் பயிற்சி கொடுப்பது இன்னொருபுறம்.
காலையில் வகுப்புகள், மாலையில் நேரடி செய்முறைப் பயிற்சிகள். அவன் 18 வயதில் தொழிற்கல்வியை முடிக்கும்போது, அதன் சூட்சுமங்கள் அத்தனையையும் கற்றுத் தேர்ந்து இருப்பான். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு, தொழிலகங்கள், உபகாரச் சம்பளம் கொடுத்து ஊக்குவிக்கின்றன. சாதாரண ஒரு தொழிற்பயிற்சியை கற்றுக்கொள்ளும் மாணவனுக்கு, மாதம் 795 யூரோ சம்பளம் கிடைக்கும். அதாவது 68 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். வேறு சில தொழிற்கல்விகளுக்கு இன்னும் கூடுதலான உபகாரச் சம்பளம் உண்டு. ஒவ்வோராண்டும் பயிற்சிகள் உயர உயர, சம்பளமும் உயரும்!
இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் என்பதே இல்லை என்று சொல்லிவிடலாம். காரணம், தொழிற்கல்விதான். எதிர்காலத்தையும் வேலைவாய்ப்புகளையும் வளர்ந்துவரும் தொழிற்துறைகளையும் மனத்தில் கொண்டே, இந்த நாட்டுக் கல்வித் துறையும், தொழிலகங்களும் பள்ளிக்கல்வியை வடிவமைத்துள்ளன.
இங்கே கல்வி கற்பது கட்டாயம். பள்ளிக்குச் செல்வது கட்டாயம். பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகள்தான் கோலோச்சுகின்றன. காலை 7.15 முதல் 8.15க்குள் பள்ளிகள் தொடங்கிவிடும். மதியம் வகுப்புகள் முடிந்துவிடும். இன்னும் கூடுதல் பயிற்சி கொடுக்கவேண்டும் என்று பள்ளி கருதுமேயானால், மாணவர்களுக்கு மதிய உணவு சுடச்சுட வழங்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.
இங்கே இத்தகைய முயற்சிகளை நேரே பார்க்கவேண்டும் என்று நினைத்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நம் தமிழகத்திலும் இதுபோன்ற சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி இருந்தது. இராஜாஜி முதல்வராக இருந்தபோது 'அரைநாள் வேலைத் திட்டம்' என்றொரு அற்புதத் திட்டத்தை அமல்படுத்தினார். எதிர்க்கட்சிகள் இதனை, 'குலக்கல்வித் திட்டம்' என்று வசைபாடி, மூடுவிழா காண வைத்தார்கள்.
அதன் அடிப்படை நோக்கமே, அரை நாள் பள்ளி, அரை நாள் தொழிற்கல்வி என்பதுதான்.
சமீபத்தில்கூட, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, தொழிற்கல்வியோடு சேர்ந்த பள்ளிக் கல்வி என்ற திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று யோசித்து வருவதாகக் கேள்விப்பட்டேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி சென்றபோது ஓர் ஆச்சரியத்தைப் பார்த்தேன். மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நடத்திவந்த பள்ளி அது. அங்கே அரைநாள் கல்வி, அரை நாள் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. அங்கே பயிற்சி பெறும் மாணவர்களை, அவர், தன்னுடைய பல்வேறு தொழிற்சாலைகளில் பணிக்கு அமர்த்திக்கொண்டார்.
அரசாங்கமும் தொழிலக முதலாளிகளும் இணைந்தால், அற்புத எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதற்கு நேரடி உதாரணம் ஜெர்மனி. அதனால்தான் இந்த ஊர் மக்கள் மிகமிக அமைதியாக இருக்கிறார்கள். பதற்றமோ, பரிதவிப்போ அவர்கள் முகங்களில் தெரியவில்லை. தங்களிடம் ஒரு தொழில் இருக்கிறது, அதில் மிகச் சிறந்த தேர்ச்சியும் இருக்கிறது. எங்கே போனாலும், பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே, இவர்கள் முகத்தில் பொலிவை ஏற்படுத்தியுள்ளது. சரியான படிப்பும் பயிற்சியும் இருக்குமேயானால், யாருக்கும் சேவகம் செய்யவேண்டிய அவசியமில்லை. திறமையின்மைதான் கூழைக்கும்பிடுக்கான ஆரம்பம். திறமையும் பயிற்சியுமே நம்பிக்கைக்கான முதுகுத் தண்டு.
நான் சென்னை வரும்போது உன் பெற்றோரிடம் பேசுகிறேன். பள்ளிப் படிப்போடு, நீ ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சியையும் கற்றுக்கொள்வது அவசியம். உனக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதை யோசித்து வை. வாழ்த்துகள்.”
என் எதிர்கால பயங்களுக்கு, வெங்கடேஷ் மாமாவின் மின்னஞ்சல் தெளிவான விடை சொன்னது. நான் என்ன செய்ய விரும்புகிறேன், என் கனவுகள் என்னென்ன என்பதை யோசிக்க ஆரம்பித்தேன்.
