PUBLISHED ON : அக் 15, 2018

கரியமிலவாயுவின் வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூமி சூடாக, கரியமிலவாயு அதிகரிப்பதுதான் முக்கிய காரணம். அதனால்தான் இது குறித்து, உலக அளவில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. தனிநபர்களும் புவி வெப்பமாதலைக் குறைக்க பங்களிப்பு செய்ய முடியும். ஆம், நாம் அனைவரும் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க முனைந்தோம் என்றால், புவி வெப்பமயமாதல் வேகத்தைக் குறைக்க முடியும்.
மின்சாரம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்று. இந்தியாவில், காற்றாலை, சூரிய சக்தி, அணுமின் நிலையம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரி சக்தி மூலம் மின் உற்பத்தி நடந்தாலும், அனல் மின்நிலையம் மூலம்தான், பெருமளவு மின் உற்பத்தி நடக்கிறது. மின்சாரத்தை எந்த அளவுக்கு அதிகம் பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு நிலக்கரியை எரித்தாக வேண்டும்.
அனல் மின்நிலையங்களில் இருந்து வெளிவரும் புகைதான் உலகை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்துகிறது. பல நாடுகளில் அனல் மின்நிலையங்களைத் தவிர்த்து, மாற்றுவழிகளை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில், உடனடி மாற்றங்கள் சாத்தியமில்லை. அதேபோல், அனல் மின்நிலையங்களை நம்மால் புறக்கணிக்கவும் முடியாது. அதேசமயம் அதனுடைய பயன்பாட்டில் சில தீர்மானங்களைக் கொண்டு வரமுடியும். அதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் மின்விளக்குகள், மின்விசிறி, பிரிட்ஜ், டிவி, கிரைண்டர் போன்ற அனைத்து மின்சாதனப் பொருட்களும் உள்ளன. ஆனால், நாம் தேவைக்கு மட்டும்தான் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. தேவைக்கும் அதிகமாக, அதாவது மின்சாரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வீணடிக்கிறோம்.
அறையில் யாருமே இருக்கமாட்டோம்; அங்கு மின்விளக்கு எரியும், மின்விசிறி ஓடும். அதனால் என்ன? மின் கட்டணம் கொஞ்சம் அதிகமாகும். அவ்வளவுதான் என்று நினைக்கிறோம். இது பணத்தோடு நின்றுபோகிற கதை இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் வீணடிக்கப்பட்டால், எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாக வேண்டும்? அதற்கு எவ்வளவு நிலக்கரி தேவைப்படும் என்று யோசித்துண்டா?
நாம் சிக்கனமாய் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், நிலக்கரி உபயோகத்தைக் குறைக்க முடியும்.
* மின்சாரத்தைச் சிக்கனமாய் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
* தேவைப்படாத சூழலில் மின்விளக்குகள், மின்விசிறிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
* மழைக்காலம், குளிர்காலத்தில் தேவையில்லாமல் மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டாம்.
* டிவியைப் பொறுத்தவரை, யாராவது பார்த்தால் மட்டும் பயன்படுத்தினால் போதும்.
* குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல்.ஈ.டி. போன்ற விளக்குகளைப் பயன்படுத்தலாம்.
