sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நெஞ்சை அள்ளும் நாஞ்சில்

/

நெஞ்சை அள்ளும் நாஞ்சில்

நெஞ்சை அள்ளும் நாஞ்சில்

நெஞ்சை அள்ளும் நாஞ்சில்


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரி இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் நிறைந்தது. கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ள தமிழக, கேரள பண்பாடு இணைந்து, மொழி, வழிபாடு, உணவு என, அனைத்து கலாசார கூறுகளிலும் தனித்துவமான அடையாளத்துடன் திகழ்கிறது.

வனம், சிற்றாறுகள், நீரோடைகள், ஏரிகள், அருவிகள் என, இயற்கையின் அனைத்து அம்சங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம். பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்டது இப்பகுதி. பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தலைநகர் நாகர்கோவிலில் உள்ளது.

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரி தவிர, சுசீந்திரம், தாணுமாலயன் ஆலயம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிக்கோட்டை, முட்டம் கடற்கரை என, சுற்றுலா செல்ல உகந்த இடங்கள் ஏராளமாக உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில், தக்கலைக்கு அருகில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கி.பி. 1600ல் கட்டப்பட்டுள்ள இவ்வரண்மனை, மரவேலைப்பாடுகள் நிறைந்த, பல அடுக்குகளைக் கொண்ட கேரள கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் தலைநகராக விளங்கியபோது, இந்த அரண்மனை கட்டப்பட்டது. தற்போதும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. அரச குடும்பத்தினர் பயன்படுத்திய வாள், கவசங்கள், ஈட்டி போன்ற போர்க்கருவிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தினுள் இருந்தாலும், கேரள தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அரண்மனையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளது. அரண்மனையில் உள்ள சாளரங்கள் (ஜன்னல்) வழியாக வெளியில் நடப்பதைப் பார்க்க முடியும். ஆனால், அதே சாளரங்கள் வழியாக, உள்ளே நடப்பதைப் பார்க்க முடியாத அளவுக்கு கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதும், மின்விளக்குகள் இந்த அரண்மனையில் இல்லை. இயற்கையான முறையில் சூரிய வெளிச்சத்தை அதிக அளவு உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. எனவே, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையே, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில், பொதுமக்களின் பார்வைக்காக அரண்மனை திறந்திருக்கும்.

திற்பரப்பு அருவி

கோதை ஆற்றில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி. கோடை காலத்திலும் வற்றாத அருவி இது. இதன் அருகில் திற்பரப்பு மகாதேவர் ஆலயம் உள்ளது. குமரிக்குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவியைப் பார்வையிட, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து 40 கி.மீ. தொலைவில் திருவட்டாறு அருகே உள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். ஆசியாவிலேயே மிக பெரிய தொட்டிப்பாலம் இதுவாகும். 115 அடி உயரம், ஒரு கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம், 1962ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. தண்ணீர் செல்லும் வாய்க்காலையும், மனிதர்கள் நடந்து செல்லும் சிறு பாலத்தையும் ஒன்றாக இணைத்து கட்டப்பட்டுள்ள இப்பாலத்தைச் சுற்றி, இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகள் காணக்கிடைக்கும்.

108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில், பிரசித்தி பெற்ற கோவில்களுள் ஒன்று. திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், திருவட்டாறு ஊர் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கட்டடக்கலை, கேரள கோவில்களைப்போல், மரத்தால் ஆன தூண்கள், கதவுகள் மற்றும் கூரைகள் கொண்டது. இங்கு பெருமாள் சயனநிலையில் காட்சியளிக்கிறார். மூன்று கருவறைகளாகப் பிரிக்கப்பட்டு, வழிபாடு நடக்கிறது. கேரள அரசால் நிர்வகிக்கப்படும் இக்கோவிலில், ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.

உதயகிரிக்கோட்டை

திருவட்டாறுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு சுற்றுலா தலம் உதயகிரிக்கோட்டை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்டவர்மாவின் ஆட்சிகாலத்தில், அவரது படைத்தளபதி டி லனாய் என்பவரால் கட்டப்பட்டது உதயகிரிக்கோட்டை. திருவிதாங்கூர் அரசின் போர் நடவடிக்கைகளுக்கு, முக்கிய கேந்திரமாகப் பயன்பட்டுள்ளது. கோட்டையினுள்ளேயே பலவகை ஆயுதங்கள் தயாரிப்பதற்கான கூடங்கள் இருந்துள்ளன. கோட்டையைக் கட்டிய டி லனாயின் கல்லறையும் உள்ளேயே உள்ளது. வேறுபல ஆங்கிலேயர்களின் கல்லறை இருப்பினும், அவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

சுற்றுலா பயணிகளைக் கவர, தற்போது இதன் அருகில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இவை தவிர, நாகராஜா ஆலயம், பேச்சிப்பாறை அணை, சிதறால் மலைக்கோவில், முட்டம் கடற்கரை என, நிறைய இடங்கள் உள்ளன. நாஞ்சில் நாடு சுற்றுலாவை, கன்னியாகுமரியையும் இணைத்தே திட்டமிடலாம். குறைந்தது மூன்று நாட்கள் பயணத் திட்டத்துடன் வந்தால், நாஞ்சில் நாடு சிறப்பான சுற்றுலா அனுபவத்தைக் கொடுக்கும்.

கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலிலும் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. கன்னியாகுமரிக்கும், நாகர்கோவிலுக்கும் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் ரயில் மற்றும் சாலை வசதி உள்ளது. நாகர்கோவிலில் தங்கி, அங்கிருந்து வாடகைக்கு வாகனத்தை அமர்த்திக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றுவரலாம்.

- அரசு பழனிச்சாமி






      Dinamalar
      Follow us