தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சம்பா தாடா குள்ளண்ணா...

சம்பா தாடா குள்ளண்ணா...

சம்பா தாடா குள்ளண்ணா...


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுமுறைக் காலங்களில், கிராமத்தில் விதவிதமான விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுவார்கள். ஒரே மாதிரியான விளையாட்டு சலித்து விடும். ஓடித் திரிந்து விளையாடுவது ஒருவகை. வீட்டிலேயே அமர்ந்து விளையாடுவது மற்றொரு வகை. சம்பா என்பது வீட்டில் அமர்ந்து விளையாடும் ஆட்டம்.

இந்த விளையாட்டை, நான்கு பேர் விளையாடலாம். இரண்டு புளிய முத்துகளை இரண்டாகப் பிளந்து கொள்ள வேண்டும். அது ஒருபுறம் வெள்ளையாகவும், மறுபுறம் கறுப்பாகவும் இருக்கும். மொத்தம் நான்கு சில்லுகள் இருக்க வேண்டும்.

படத்தில் காட்டியபடி, கட்டம் வரைந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கத்தின் நீளம், ஒரு அடிக்கும் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் வரைந்து கொள்ள வேண்டும்.

நான்கு மூலைகளையும் மலை என வைத்துக் கொள்வோம். ஆளுக்கு ஒரு மலை. அங்கிருந்துதான் ஆட்டம் தொடங்க வேண்டும். மலையில் முழு புளியமுத்து அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறு காயை வைத்துக் கொள்ள வேண்டும்.

உடைத்த முத்துகள் நான்கு இருக்கும் அல்லவா, அதை குலுக்கிப் போட வேண்டும். அதாவது தாயக்கட்டை உருட்டுவதைப் போல.

குலுக்கிப் போட்டால் விழும் வெள்ளைப் பக்கங்களைக் கொண்டு, கணக்கிட வேண்டும். மூன்று கருப்பு ஒரு வெள்ளை என்றால் ஓந்தி; இரண்டு வெள்ளை என்றால் சம்பா; மூன்று வெள்ளை என்றால் முக்கட்டை; நான்கு வெள்ளை என்றால் பால்; நான்கும் கறுப்பு என்றால் காட்டேரி.

கடிகாரச் சுற்றுப்படி காயை நகர்த்திச் செல்ல வேண்டும். நான்கு புளியங்கொட்டை சில்லுகளைக் குலுக்கிப் போட்டு, ஓந்தி விழுந்தால், கட்டை விரல் அளவுக்கு தங்கள் காயை நகர்த்திக் கொள்ளலாம்.

சம்பா விழுந்தால், 5 விரல் அளவுக்கு, அதாவது உள்ளங்கையின் அகலத்துக்கு நகர்த்திக் கொள்ளலாம்.

முக்கட்டை என்றால், மூன்று விரல்; பால் என்றால் ஒரு சாண்; காட்டேரி என்றால் இரண்டு சாண்கள் நகர்த்திக் கொள்ளலாம்.

இதில், ஓந்தி அல்லது முக்கட்டை விழுந்தால், அதோடு குலுக்கிப் போடும் வாய்ப்பு அவருக்கு முடிந்து விட்டது. அடுத்த நபர் குலுக்கிப் போட்டு காயை நகர்த்தலாம். ஓந்தி/முக்கட்டை விழும்வரை, அவர் தொடர்ந்து குலுக்கிப் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

இப்படி காய்களை நகர்த்தி, ஒரு சுற்று முடிந்து, தங்கள் மலைக்கு வந்ததும், அதன்பின் உள்நோக்கி நகர்த்த வேண்டும்.

உள்ளே இருக்கும் சிறு சதுரத்தை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும், மையத்துக்குச் சென்றுவிட்டால் அவர் பழம்; வென்று விட்டார். இப்படியே அனைவரும் பழுக்க வேண்டும்.

ஒருவர் காயை நகர்த்திச் செல்லும்போது, வழியில் மற்றவரின் காயைத் தாண்டினால், தாண்டப்பட்ட காய் வெட்டுப்பட்டதாகப் பொருள். அவ்வாறு வெட்டப்பட்ட காய், பின்பக்கத்தில் உள்ள மலைக்குத் திரும்பிவிட வேண்டும். அங்கிருந்துதான் அவர் மீண்டும் சுற்றி வர வேண்டும். முதலில் ஆரம்பித்த மலைக்குச் செல்லத் தேவையில்லை. அந்தக் காய்க்குப் பின்பக்கமாக இருக்கும் மலை எதுவோ அங்கு சென்றால் போதுமானது. மலையில் இருந்தால் வெட்ட முடியாது.

காயைக் குலுக்கிப் போடுபவர், ஒரு பாடலைப் பாடிக் கொண்டே குலுக்கிப் போடலாம்.

சம்பா வேண்டும் எனில், ஒரு சம்பா தாடா குள்ளண்ணா

என்று பாடிக் கொண்டே குலுக்கிப் போடலாம்.

சம்பா விழுந்து விட்டால்,

சம்பாவும் பத்தாது, காட்டேரி தாடா குள்ளண்ணா என்று பாடலாம்.

அடுத்தவரால் வெட்டுப்படாமல் இருக்க, மலைக்குச் செல்வதற்கு வசதியாக

ஓந்தி தாடா குள்ளண்ணா என்று கூட பாடலாம்.

அதேபோன்று, உள்ளே உள்ள சதுரத்தின் மையப் பகுதிக்குச் செல்ல, ஐந்து விரல் (சம்பா) அளவு போதும் என்றால் சம்பா அளவு விழுந்தால்தான் உள்ளே செல்ல முடியும். காட்டேரி அல்லது பால் விழுந்து விட்டால், அதைப் பயன்படுத்த முடியாது. சம்பா அல்லது அதற்குக் குறைவான முக்கட்டை, ஓந்தி என்று விழுந்தால்தான், உள்ளே சென்று பழுக்க முடியும்.

யார் முதலில் பழுக்கிறார்கள், யார் கடைசி நபராக வந்து தோற்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், விளையாட்டு மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.

- திரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us