தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெற்றோரே ஆசிரியர்!

பெற்றோரே ஆசிரியர்!

பெற்றோரே ஆசிரியர்!


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழக்கமான பள்ளிக்கூட கற்பித்தல் முறையிலிருந்து வித்தியாசமானது, 'ஹோம் ஸ்கூலிங்'. இதில் பெற்றோரே ஆசிரியர்; வீடும் சுற்றுப்புறமும்தான் கல்விக்கூடம். இயற்கையோடு இணைந்து கற்பதே இதன் அடிப்படை. வீட்டுப் பாடத்துக்கும், வீட்டுக் கல்விக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடங்களை, வீட்டில் ஒருமுறை படித்துப் பார்ப்பது என்பது வேறு. முழுக்க முழுக்க வீட்டுச் சூழலிலேயே, பள்ளி செல்லாமல் இயல்பான போக்கில் கற்றுக் கொள்வது என்பது வேறு. இந்த இரண்டாவது முறை கற்றல், 'ஹோம் ஸ்கூலிங்' என்ற பெயரில் இன்று பெருகி வருகிறது. ஏராளமான பெற்றோர் இந்த முறையில் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்து வருகின்றனர்.

தன்னுடைய குழந்தையை, 'ஹோம் ஸ்கூலிங்' முறையில் படிக்க வைக்கும் சங்கீதா ஸ்ரீராமிடம் பேசினோம். புதுச்சேரி ஆரோவில்லில் வசிக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...

“என் மகள் ஈஷாவை, 'ஹோம் ஸ்கூலிங்' முறையில்தான் வளர்க்கிறேன். இப்படிப்பட்ட கற்பித்தல் முறையால் என்ன பயன் என பலரும் கேட்கிறார்கள். என் குழந்தைக்கு எது தேவை என்பதை அவளாகவே தெரிந்து கொள்கிறாள். இப்போது 8 வயதாகிறது. என்ன செய்ய விரும்புகிறாளோ அதை உணர்ந்து செய்கிறாள். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாகவே புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறாள். அவளுடைய நாளை, அவளே தீர்மானிக்கிறாள். அதுவே மிகப்பெரிய விஷயம் தானே?

எல்லா குழந்தைகளுக்கும் இயல்பான சிந்தனைத் திறன் உண்டு. ஆனால், வழக்கமான கல்வி முறையால் அவை வெளிப்படுவதில்லை. புதிய விஷயங்களைப் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு ஊக்கம் வழங்கப்படுவதில்லை. மதிப்பெண்கள் மட்டுமே இன்றைய கல்வி முறையில் முக்கிய பொருள். 'விளையாட்டு மூலம் கல்வி' என்றொரு மாற்றுச் சிந்தனையும் உண்டு. அதிலும் குழந்தைகளின் திறன்கள் முழுவதுமாக வெளிப்படுவதில்லை.

இதுபோன்ற காரணங்கள்தான், நான் ஹோம் ஸ்கூலிங் முறைக்குச் சென்றேன். என் வீட்டில் இதைப்பற்றி புரியவைப்பதற்கு, கொஞ்சம் காலம் ஆனது. மற்ற குழந்தைகளுக்கும், என் குழந்தைக்கும் இருக்கும் வித்தியாசத்தை, என் பெற்றோர்கள் உணர்ந்தபின் தான், அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அதேபோல், இந்த முறை கல்விக்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. என் கணவரும் ஒத்துழைத்ததால் தான், எங்கள் குழந்தைக்கு வேறு ஒரு பாதையை காட்ட முடிந்தது.

குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு, பயமற்ற சூழல் மிகவும் தேவை. அதன் மூலம் அவர்கள் பல விஷயங்களை முயற்சிசெய்து கண்டுபிடிப்பார்கள். குழந்தைகளுக்கு எழுதுவதையும், வாசிப்பதையும் கற்றுக்கொடுப்பது மட்டுமே முக்கியம் இல்லை. அதைத் தாண்டி, தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உலகில் ஏராளம் உண்டு.

இந்தக் கல்விமுறை, குழந்தைகளை தனித்தன்மையுடன் இருக்க வைக்கும். அவர்களாகவே நிறைய புதிய விளையாட்டுகளை உருவாக்குவார்கள். விளையாட்டு என்றவுடன் நாம் அதை மறுப்போம். ஆனால், விளையாட்டுகள் மூலம்தான், அறிவை வளர்க்க முடியும். குழந்தைகள் அழுதவுடன் பொம்மைகளையும், இதர பொருட்களையும் கையில் கொடுத்துவிட்டு, அவர்களுடைய திறனை வளரவிடாமல், தேவையைத் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். விளையாட்டு என்பது பொம்மைகளோடு மட்டுமே தொடர்புடையது இல்லை. என் குழந்தையை தனித்துவமாக வளர்ப்பதில், நான் புரிந்துகொண்ட விஷயம் இது.

இந்தக் கல்விமுறையால், என் குழந்தை பொதுவெளியில், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறாள். பின்னர், அதைப் பற்றி அவளுக்கு என்ன கேள்விகள் தோன்றுகிறதோ அதை அப்படியே கேட்பாள். இது அவர்களுடைய சிந்தனைத் திறனை வளர்க்க உதவும். ஒரே மாதிரியாக சிந்திக்காமல், புதிய வகையில் சிந்திக்க வைக்கவும் முடியும்.

குழந்தைகளுக்கு பல்வேறு சூழல்களை அறிமுகம் செய்வதன் மூலமும், வெவ்வேறு மனிதர்களை அறிமுகம் செய்வதன் மூலமும் அனைவரிடமும் அன்பாகவும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டுடன் வளர பழகுவார்கள்.

மற்ற குழந்தைகளைப் போல, இவளும் அறிவியல், கணிதம், மொழி போன்றவற்றைக் கற்றுக்கொள்கிறாள். ஆனால், அதை அவளுக்குப் பிடித்த நேரத்தில், பிடித்த முறையில் கற்றுக்கொள்கிறாள். அவளுடைய எண்ணங்களுக்கு சுதந்திரம் கொடுப்பதாக உணர்கிறேன். என்னுடைய சிறுவயதில் சுதந்திரம் வேண்டும் என ஆசைப்பட்டேன், அதைப் பெறுவதற்கு நிறைய பயணங்கள் தேவைப்பட்டன. ஆனால், என் குழந்தைக்கு அதை கொடுக்க முடிந்ததாக உணர்கிறேன்.''

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us