PUBLISHED ON : ஜூன் 05, 2017

'தி பேஷண்ட்ஸ் பேஷண்ட்ஸ்' (The Patients Patients) என்ற புத்தகத்தின் மூலம், பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறார் துஷார் ரிஷி என்ற மாணவன். 17 வயது நிரம்பிய துஷார், பிளஸ் 2 தேர்வில் பெற்றுள்ள 95 சதவீத மதிப்பெண் ஏன் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது?
2014ல் இவருக்கு எலும்பு புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. 10வது பொதுத்தேர்வை எழுத முடியவில்லை. படிப்புதான் எல்லாம் என்று நினைத்த துஷாருக்கு, புற்றுநோய் கொடுத்தது மிகப்பெரிய ஏமாற்றம், மனச்சோர்வு. அதிலிருந்து மீண்டு, பிளஸ் 2 தேர்வில் சாதித்தது எப்படி? துஷாரைக் கேட்டோம்...
புற்றுநோய் தெரிந்தவுடன் உங்கள் மனநிலை?
2014ல், 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எந்தத் தவறும் செய்யாத எனக்கு, ஏன் புற்றுநோய் வந்தது என பல மாதங்கள் அழுது, தனிமையில் இருந்தேன். என்னைக் காப்பாற்ற குடும்பம் எண்ணற்ற முயற்சிகளைச் செய்தது. அவர்களின் முயற்சிகள் என் துயரத்தை அதிகரித்தன.
தனிமையை எப்படி மாற்றி அமைத்தீர்கள்?
ஆரம்பத்தில், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்தேன். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். ஸ்டீவ் ஜாப்ஸ், ஜான் கிரீன் போன்றவர்களின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். என்னால் நோயிலிருந்து மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
பள்ளி செல்ல முடியாததால், டியூஷன் சென்று பாடங்களை கற்றுக்கொண்டீர்களா?
என் உடல்நிலை அதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை. 11 முறை கீமோதெரபி செய்துகொள்ள வேண்டும் என்பதால், ஒருநாள் போல, மறுநாள் உடல்நிலை சரியாக இருக்காது. மிகவும் சோர்வாக இருப்பேன். எனக்கு எப்போதுமே டியூஷன் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. எப்போது உடம்பு சரியாக இருக்குமோ, அப்போது, பாடங்களைப் படிப்பேன். என் குடும்பத்தினர், உறவினர்களுடைய உதவியால், சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன்.
10 வது தேர்வு எழுத முடியாமல் போனது, உங்களை பாதித்ததா?
நிச்சயமாக. ஏனெனில் படிப்புதான் எல்லாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். தேர்வு எழுத முடியாமல் போனதை நினைத்து மிகவும் வருந்தினேன். மதிப்பெண்கள்தான் எல்லாம் என நினைத்த எனக்கு, புற்றுநோய் பாதிப்பு வந்தபிறகு வாழ்க்கை என்பது மதிப்பெண் மட்டுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
'தி பேஷண்ட்ஸ், பேஷண்ட்ஸ்' புத்தகம் எழுத எது காரணம்?
தனிமையில் இருந்தபோது, எழுத்துதான் மிகப்பெரிய ஆறுதல். என் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதை டைரியில் எழுதினேன். மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது நடந்த சம்பவங்கள், என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, தவிப்பு என அனைத்தையும் எழுதினேன்.
உங்களுடைய வாழ்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்?
11 கீமோ இதுவரை முடிந்திருக்கிறது. மேலும், மூட்டில் ஓர் அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. என்னால் ஓடவோ, விளையாடவோ முடியாது. அதற்கு என்னை இப்போது பழக்கி வருகிறேன்.
அடுத்து என்ன செய்ய இருக்கிறீர்கள்?
தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. ஆங்கில இலக்கியம் அல்லது ஆர்ட்ஸ் பிரிவில் சேரலாம் என இருக்கிறேன். என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள, எது செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன், இனியும் அதையே செய்வேன்.

