PUBLISHED ON : ஜூலை 16, 2018

எட்மண்ட் ஹிலாரி
20.7.1919 - 11.1.2008
ஆக்லாந்து, நியூசிலாந்து
மே 29, 1953: காலை 11.30 மணி, இந்தப் பூமியின் உச்சியில் கால்பதித்து வரலாற்றில் இடம் பிடித்தார் எட்மண்ட் ஹிலாரி. 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாக 8,848 மீட்டர் (29,029 அடி) உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு, உலகின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த வரலாற்று நிகழ்வில், நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கேவுக்கும் இடமுண்டு. அதுமட்டுமன்றி வட, தென் துருவங்களை அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் ஹிலாரிக்கே சொந்தம்!
அவரது குடும்பம், தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது. ஆரம்பப் பள்ளியில் மிக நன்றாகப் படித்ததால், இரட்டைத் தேர்ச்சியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆகவே, உடன் படித்தவர்களைவிடச் சிறுவனாக இருந்ததால், யாருடனும் சேராமல் புத்தகங்கள் படிப்பதிலும், சாகச நிகழ்வுகளைக் கற்பனை செய்வதிலும் காலம் கழித்தார்.
ஹிலாரிக்கு 16 வயது இருக்கும்போது, அருகிலுள்ள மலைக்குச் சுற்றுலா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து, மலை ஏற்றம் அவருக்கு மிகப்பிடித்தமான ஒன்றாகி விட்டது. கோடைக்காலத்தில் மலை ஏறித் தேன் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டது பயிற்சிக்கு உதவியாக இருந்தது.
மலை ஏறுவோருக்கான கழகத்தில் சேர்ந்து, அதன் உறுப்பினர்களுடன் மலைகள் ஏறுவதற்காகவே சுற்றுலா சென்றார். மலை ஏற்றம் குறித்த புத்தகங்களையும், உயரமான சிகரங்கள், மலைகள் பற்றியும் தெரிந்துகொண்டார்.
மொத்தத்தில் மலை ஏறும் பழக்கத்துக்கு அடிமையாகவே மாறி இருந்தார் சாதனை நாயகன் எட்மண்ட் ஹிலாரி!
சாதனைகள்:
* 1939: தெற்கு ஆல்ப்ஸ் மலையில் உள்ள 12,000 அடி உயர மவுன்ட் ஆலிவரில் தனது சகோதரர் உடன் ஏறினார்.
* 1956 - 1965: இமயமலையில் உள்ள 10 உயரமான சிகரங்களில் ஏறினார்.
* 1958: தென் துருவமான அண்டார்டிகாவுக்கு தரை வழியாகச் சென்றார்.
* 1977: செட் படகு மூலம், கங்கையில் எதிர்த் திசையில் பயணம் செய்து சாதனை படைத்தார்.
* 1985: வடதுருவமான ஆர்க்டிக் பகுதிக்குச் சென்றார்.
