PUBLISHED ON : பிப் 01, 2016

வெப்பத்தினால் பொருட்களின் நிலைமாற்றம் உட்பட பல செயல்கள் நடைபெறுகின்றன. அதில், வெப்ப விரிவும் ஒன்று.
'வெப்ப விரிவு' என்றால் என்ன என்பதை சாலையோர மின் கம்பிகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். மற்ற நாட்களில் இறுக்கமாக இருக்கும்.
அது வெய்யில் காலத்தில் தொய்வடைந்து காட்சியளிக்கும். வெப்பம் காரணமாக கம்பி விரிவுஅடைவதால் வழக்கத்தைவிட அதிக நீளமாகிவிடுகிறது.
கம்பி மட்டுமல்ல, இரும்புத் துண்டுகள் கூட வெப்ப விரிவுக்குத் தப்பமுடியாது. ஆகவேதான் ரயில் பாதை அமைக்கும்போது,
தண்டவாளத் துண்டுகளுக்குஇடையில் சிறியதாக ஓர் இடைவெளி விடுகிறார்கள். இந்த இடைவெளி இல்லை என்றால் என்ன ஆகும்? சாதாரண காலங்களில் கச்சிதமாக இருக்கும் தண்டவாளம், கோடைக் காலத்தில் வெப்ப விரிவு அடையும்போது, நீளமும் அகலமும் அதிகமாகி ஒழுங்கு இல்லாமல் நெளிந்துவிடும். இதனால் ரயிலே கவிழ்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.
வெப்ப விரிவுக்கு, தண்டவாளமே தப்ப முடியாதென்றால் கண்ணாடிப் பொருட்கள் எப்படித் தப்பிக்கும்?
கண்ணாடிக் குவளைகளில் மிகச் சூடான நீரை ஊற்றும்போது அதன் உட்பகுதி விரிவடையும். ஆனால், அதற்கேற்ப வெளிப்பகுதி விரிவுஅடையாது. இதனால், குவளையில் விரிசல் உண்டாகிறது. எனவே, கண்ணாடிக் குவளையில் மிகச் சூடான திரவத்தை ஊற்றாதீர்கள். உடைந்துவிடும்.
