தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மா எழுதும் மாயக்கண்ணாடி

மா எழுதும் மாயக்கண்ணாடி

மா எழுதும் மாயக்கண்ணாடி


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலையோரத்தில் கிடந்த கல்லை காலால் எட்டித் தள்ளியபடி போய்க் கொண்டிருந்த முரளியின் மனதில் ஒரே குழப்பம்.

பள்ளி விளையாட்டு விழாவில், முகம் பார்க்கும் கண்ணாடி பரிசாக வந்தது.

அந்தக் கண்ணாடி அவன் முகத்தை, அவன் பாவனைகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை. பெரும்பாலும் அவன் முகம், சோகமாகவோ, கோபப்படும்பொழுது கோணிப் போவது போலவோ

காட்டுகிறது.

நேற்றுதான் கொஞ்சம் சிரித்த முகமாக காண்பித்தது. ஆனால் முரளிக்கு அதுவும் குழப்பமாகவே இருந்தது. ஏனென்றால் அவன் அப்போது சிரிக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அம்மா மேல் ஏகக் கடுப்பில் இருந்தான். அவன் சுவாரசியமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபொழுது, அம்மா அவசரமாக கடைக்குப் போகச் சொன்னாள்.

வழக்கமாக மறுக்கும் முரளி ஏதோ ஒரு மூடில் சரி என்று போனான். திரும்ப வருவதற்குள், அவன் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியே முடிந்து விட்டிருந்தது.

டி.வி.யை அணைத்து விட்டு கதைப் புத்தகம் எடுக்க அவன் அறைக்குப் போனான்.

திடீரென்று, அவன் டேபிள் மேலிருந்த அந்த வினோத கண்ணாடியில் முகம் பார்க்கத் தோன்றியது.

அவன் சிரித்தபடி பார்க்கும் பொழுது, சிரிக்காத முகமாக காட்டும் கண்ணாடி, இப்போது எப்படி காட்டும்?

எரிச்சலோடு கண்ணாடி முன் போய் நின்றான். ஆனால் அவன் முகம் அதில் சிரித்த முகமாகத் தெரிந்தது.

இது வரை யாரிடமும் அவன் இது பற்றி பேசவில்லை. ஆனால் இன்றைக்குத்தான் 'லஞ்ச்'சின் பொழுது, அவன் நண்பர்களிடம் சொன்னான்.

ஆச்சர்யம் என்னவென்றால், அவர்களுக்கும் இது மாதிரி கண்ணாடி பரிசாக கிடைத்திருந்தது. எல்லோருக்கும் ஏதோ ஓரிரு சமயங்களில் சிரித்த முகமாக இருந்திருக்கிறது. பல சமயங்களில் கடுப்பாக, சோகமாகவே தோன்றி இருந்திருக்கிறது.

காலால் தட்டி வந்த கல், ஓரத்தில் போய் சாக்கடையில் விழுந்து விட்டது. இன்னும் நாலடி வைத்தால் மெயின் ரோடு. பஸ், ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா, கார் என ஒரே சத்தமாக இருந்தது. பார்த்து நடக்காவிட்டால் காலிதான் என்று குழப்பத்தை தள்ளிவிட்டு ரோட்டில் கவனம் செலுத்தினான்.

ரோடை கிராஸ் பண்ண நிற்கும் பொழுதுதான் கவனித்தான். அவனைவிட சின்னப் பெண் ஒரு பாட்டியின் கையைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

ஓரடி முன் வைப்பது, பிறகு வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பின்னே வருவது என்று, இருவரும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அருகில் போய், இருவர் கைகளையும் நடுவில் நின்று பிடித்துக் கொண்டான்.

இன்னும் கொஞ்சம் பேர் சேர்ந்து கொண்டார்கள். ஒரு பெரிய ஆள், வண்டிகளை நிறுத்தும்படி கைகாட்டி, ரோடை எல்லோரும் கடக்க உதவினார்.

முரளி, பாட்டி, சின்னப்பையன் மூவரும் கை கோர்த்தபடி ரோடைக் கடந்தார்கள்.

''தாங்ஸ் அண்ணா'!”' என்று சொன்ன அந்தச் சின்னப் பெண்ணின் சிரிப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. கண், வாய், மூக்கு என அந்தக் குட்டிப் பெண்ணின் முகம் முழுவதும் சிரிப்பாக இருந்தது.

அந்தப் பெண்ணின் சிரித்த முகம் முரளிக்கும் தொற்றிக்கொண்டது. உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தான். ஏனோ, தானோவென்று ஷூவை உதறாமல், கழற்றி, அதற்குரிய இடத்தில் வைத்தான்.

சமையல் அறையில் அம்மா பூரி செய்து கொண்டிருந்தாள். இன்னும் சந்தோஷமாகி விட்டது. ஓடிப்போய் பின்னால் இருந்து அம்மாவைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தான்.

''சரி, சரி! கொஞ்சினது போதும். கை கால் கழுவிட்டு சாப்பிட வா!”

அறையில் கொண்டு போய்

ஸ்கூல் பையை வைத்தபோது, கண்ணாடியைப் பார்த்தான். அவன் முகம் சந்தோஷமான முகமாக தெரிந்தது. அந்தக் குட்டிப் பெண்ணின் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது போல், அவன் கண், காது, மூக்கு, வாய், எல்லாவற்றிலும் புன்னகை பூத்திருந்தது.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்த்தானே தவிர, அவன் சிரிக்கவில்லை. ஆனால் கண்ணாடிக்குள் தெரியும் முகம் எப்படி புன்னகையோடு இருக்கிறது?

அம்மா, தட்டில் மூன்று பூரியும், கிழங்கும் வைத்துக் கொடுத்தாள். டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டான்.

''அம்மா எனக்கு இன்னும் ரெண்டு பூரி வேணும்.''

''போதும்டா. அப்புறம் ராத்திரி சாப்பிட மாட்டே…''

''இல்லை. நான் சாப்பிடுவேன்.”

''நான் ஆளுக்கு மூணு பூரின்னு, எனக்கு, உனக்கு, அப்பாவுக்கு, அக்காவுக்குன்னு பனிரெண்டுதான் செஞ்சேன்''.

''அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இன்னும் வேணும்.”

''அப்புறம் அம்மாவுக்கு பூரி இல்லாம போயிடும். பரவாயில்லையா?”

''போம்மா, எனக்கு ராத்திரி சாப்பாடும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்.”

கோபமாக, டி.வி.யை அணைத்துவிட்டு, ரூமுக்குச் சென்றான்.

கண்ணாடியில் எதேச்சையாக பார்த்த பொழுது, அவன் முகம் கோணலாக இருந்தது.

இதென்ன மாயமந்திரமாக இருக்கே.'சே இந்தக் கண்ணாடியே வேண்டாம்' என்று அட்டைப்பெட்டியில் வைக்கப் போனான். கண்ணாடி இருந்த அட்டைப்பெட்டியில் இருந்து புகை போல் உருவம் வந்தது.

சுடிதார், குதிரைக் கொண்டையோடு ஒரு பெண் உருவத்தை திடீரென்று பார்த்தும் பதற்றம் வரவில்லை. ஏனோ ஆச்சரியமாக மட்டுமே இருந்தது.

''என்ன கண்ணாடி பிடிக்கலையா?”

''ஓ... நீங்க பேசுவீங்களா..?” அக்கா என்று சொல்வதா, ஆன்ட்டி என்று சொல்வதா தெரியவில்லை.

''எது வேணும்னாலும் சொல்லு!''

''அட, நான் மனசில் நினைச்சதை எப்படி கண்டு பிடிச்சீங்க? உங்க பேர் என்ன?”

''நான் மாயா. அக்கா, அத்தை, டீச்சர்… உனக்கு எந்த உறவு பிடிக்குமோ அப்படி கூப்பிடு.”

''நீங்க பாக்கறதுக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச, எங்க மேகலா டீச்சர் மாதிரி இருக்கீங்க. உங்களை டீச்சர்னே கூப்பிடலாமா?”

''ஓ...கே. சரி. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, கண்ணாடி பிடிக்கலையா?”

''இல்லை, ஆனா அது ஏன் ஒவ்வொரு தடவையும் என் முகத்தை வெவ்வேறு விதமாக காண்பிக்குது?”

''என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறே?”

''எனக்குப் புரியலை. உங்களுக்குத் தெரியுமா?”

''நான் கேட்கிற சில கேள்விகளை யோசிச்சுப் பாரு, நாளைக்கு உன் ஃப்ரண்ட்ஸ் கிட்டவும் கேளு...முதல் கேள்வி, உங்க முகம் எப்ப, எப்ப எப்படி தெரிஞ்சுது? ரெண்டாவது, அதுக்கு முன்னாடி நீ என்ன காரியம் செஞ்சே? அல்லது என்ன யோசிச்சே? மூன்றாவது, உன் செயலுக்கும், சிந்தனைக்கும், கண்ணாடியில் தெரியற முகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கா? யோசிக்கிறயா? உன் ஃப்ரண்ட்ஸ் கிட்டேயும் யோசிக்க சொல்றியா?”

''ஓகே...டீச்சர்.”

''இதைப் படிக்கிற நீங்க எல்லோரும் கூட யோசிங்க''

மாயா டீச்சர், ஜன்னல் வழியே புகை ஒளியாய் மறைந்து போனார்.

- தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us