PUBLISHED ON : செப் 15, 2025

கும்பகோணம் அருகே காவிரியின் கிளை ஆறான, அரசலாற்றின் கரையில் அமைந்திருக்கும் கோயில் இது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் கண்ட கனவு, உளியின் ஓசையால், உயிர்ப் பெற்று, ஒரு மாபெரும் சிற்பக் கோயிலாக நிற்கிறது.
கண்கவர் சிற்பங்களால், சுவர் ஓவியங்களால், இந்தச் சிவன் கோயில், கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கலைக் கோயில்களை விடவும், இந்தக் கோயில் அழகானது, நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்தது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும், ஒரு கதை சொல்கிறது; ஒவ்வொரு சிற்பமும், காண்போரைச் சில நொடிகளேனும் தன்னைப் போலேயே சிலையாக்கி மகிழ்கிறது.
கோயிலுக்கு வெளியே உள்ள 'சங்கீதப் படிக்கட்டுகள்' (Singing Steps) அல்லது 'இசைப் படிக்கட்டுகளைத்' தட்டினால், விதவிதமான இசை ஒலிகள் எழுந்து, கேட்போரை வியப்பில் ஆழ்த்தும். சிற்பக் கலையில், இசையை இணைத்த சோழக் கலைஞர்களின் அற்புதம் இது. இன்று, பாதுகாப்புக் கருதி அவை பூட்டப்பட்டிருந்தாலும், அங்கு நின்று பார்ப்பவர்களுக்கு, செவிகளில் இசை ஒலிப்பது போன்ற ஓர் உணர்வையே ஏற்படுத்தும்.
கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் இரண்டாம் ராஜராஜன் மண்டபத்தில் உள்ள தேர்ச்சக்கரங்கள், குதிரைகள், யானைச் சிற்பங்கள் என அனைத்தும், உயிருடன் உறைந்திருப்பது போன்றே தோன்றுகின்றன. கோயிலின் தூண்கள், சுவர்கள், விமானம் என எல்லாமே, புராண, இதிகாசக் கதைச் சிற்பங்களால் பெரியதும் சிறியதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கும் ஒரு சிற்பம் கூட, அந்தக் கால மக்களின் வாழ்க்கையை நமக்குச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.
கோயிலைச் சுற்றியுள்ள அகல் விளக்கு வடிவ அமைப்பு, ஒரு வியப்பு. இதில் நீர் நிரப்பி, நடுவில் விளக்கை வைக்கும் போது, அந்த ஒளி நீரில் பிரதிபலித்து, கோயில் ஒளி வெள்ளத்தால் பிரகாசிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோயிலில் உள்ள கல்வெட்டுகள், ராராசுரம் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகின்றன. காலத்தின் மாற்றத்தால், அந்த ஊர் இன்று வேறொரு பெயரைத் தாங்கி நிற்கிறது.
அந்த ஊர் எது?
விடை: தாராசுரம் (ஐராவதேசுவரர் கோயில்)

