PUBLISHED ON : ஆக 20, 2018

சென்னையைச் சேர்ந்த பவித்ரா சீனிவாசன், சிறுவர் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். தமிழக வரலாற்றின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் இவர், 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', 'வந்தார்கள் வென்றார்கள்' போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வரலாற்றுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று ஆதங்கப்படுகிறார். குழந்தைகள், மாணவர்கள் விரும்பும் வகையில், சமூக அக்கறையுடனான வரலாற்றுச் சிறுகதைகளை எழுதி வருகிறார் பவித்ரா சீனிவாசன்.
வரலாறு ஏன் முக்கியத்துவம்?
இந்தியர்கள், தமிழர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட வேண்டும் எனப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தருகிறோம். நமது வரலாறுதான் அத்தகைய பெருமித உணர்வுக்கு அடிப்படை. பண்டைக் காலத்திலேயே தமிழகத்திலும், இந்தியாவிலும் சிறந்த ஆட்சி நிர்வாகம், வெளிநாட்டு வணிகத்தொடர்புகள், நவீன நகரங்கள் இருந்துள்ளன. ஆனால், இதுபற்றிய தகவல்கள் அடங்கிய பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு அயர்ச்சி ஊட்டுபவையாக உள்ளன. குழந்தைகளுக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்காமல் இருந்தால், இவற்றை அடுத்த தலைமுறைக்கு எப்படிச் சொல்லித்தரப் போகிறோம்? அதனால், கதை வடிவில் வரலாற்றைச் சொல்கிறேன்.
தமிழக வரலாறு மீதான ஆர்வம் எப்படி உண்டானது?
சிறுவயதில் வளைகுடா நாடுகளில் இருந்தேன். தமிழ் பேசத் தெரிந்தாலும், சரளமாக எழுதப் படிக்கத்தெரியாது. பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்கச்சொன்னார் அம்மா. அப்போதுதான், தமிழ் வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது.
வரலாற்றை கதை வடிவில் எழுத எப்போது முடிவெடுத்தீர்கள்?
வரலாற்றை எழுதினால் வாசகர்கள் படிப்பார்களா என்று, பல பத்திரிகை ஆசிரியர்களும் தயங்கினர். அதை நம்மோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, கதை வடிவில் சொல்லும்போது, படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எழுதிய சிறுகதை ஒன்றில், மழையும் காற்றுமான இரவு நேரத்தில் மலையில் தனியாக நடந்துபோவார் ஔவையார். அப்போது, மன்னர் அதியமானை திடீரெனப் பார்ப்பார். மன்னர், புலவர் என்ற பேதமற்று அங்கு நடக்கும் உரையாடலில், பாடல் ஒன்றைப் பாடுவார். அது குறுந்தொகைப் பாடலின் எளிமையான வடிவம் என்பது வாசகர்களுக்குக் கடைசியில்தான் தெரியவரும். கதை வடிவம், வரலாற்றுப் பாத்திரங்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்த வசதியாக உள்ளது.
வரலாற்றைப் புனைகதையாகச் சொல்லும்போது, உண்மைத் தகவல்கள் திரித்துக் கூறப்பட வாய்ப்புள்ளதே?
வரலாற்றை நேரடியாகச் சொல்லும்போதும் இப்பிரச்னை உள்ளது. உயர்வுநவிற்சிக்காக, கூடுதல் குறைவாகச் சொல்வது வரலாற்று இலக்கியங்களில் இயல்புதான். ஆனால், அப்படிச் செய்யக் கூடாது என்பது என் கொள்கை. விரிவான ஆராய்ச்சி, தர்க்க முரணற்ற, சரியான தகவல்களைச் சொல்ல எழுத்தாளர்கள் மெனக்கெட வேண்டும். நான், ஒரு வரலாற்றுச் சிறுகதையை எழுதவே ஒரு வாரம் எடுத்துக்கொள்வேன். பல சமயங்களில், நேரடியாகச் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் போய்ப் பார்ப்பேன்.
வாழ்க்கையுடன் வரலாறு எப்படித் தொடர்புபடுகிறது?
உதாரணத்துக்கு திருவண்ணாமலை தாமரைப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டில், விசித்திரமான வழக்கு பற்றிய தகவல்கள் உள்ளன. அண்ணனைக் கொன்றதற்காகத் தம்பிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். ஆனால், பெற்றோருக்கு இரண்டே மகன்கள்தான். தம்பியையும் சிறைக்கு அனுப்பிவிட்டால், பெற்றோரை யார் பார்ப்பார்கள்? எனவே, பெற்றோரைப் பார்த்துக்கொள்வதுதான் தம்பிக்கு தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சாதாரண மனிதர்களுக்கும் வரலாறு சென்றடைய, அதை நம் வாழ்க்கையுடன் தொடர்புள்ளதாக மாற்ற வேண்டும்.
