PUBLISHED ON : ஆக 20, 2018

இரண்டு, மூன்று நாட்களாக, நான் உமா மிஸ் வீட்டுக்கே போய் பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். சந்தேகம் என்றில்லை, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால்கூட, உமா மிஸ் உதவுவார். தெளிவுபடுத்துவார். செப்டம்பரில் பருவத் தேர்வுகள் தொடங்கவிருப்பதால்தான் இத்தனை பயம். பள்ளி முடிந்தவுடன் நேரே மிஸ் வீட்டுக்கே போய்விடுவேன். அம்மா, அப்பாவுக்கு இது தெரியும்.
ஆனால், ஓவியாவுக்குத் தெரிந்தபோது, முகம் சுருங்கிவிட்டது. அதிகம் பேசவில்லை. சட்டென ஒருவிதமான ஒதுங்கல். எதைக் கேட்டாலும் விட்டேத்தியான பதில். மதியம் சாப்பிடும்போது, இதைச் சரிசெய்தே தீரவேண்டும் என்று யோசித்தேன். வலியப் போய் ஓவியாவோடு பேசத் தொடங்கினேன்.
அவள் முகம்கொடுக்கவில்லை. பிடிகொடுக்கவில்லை. ஏன் இப்படி விலகிப் போகிறாய் என்று கேட்டபோது, உடனே 'நீ செல்ஃபிஷ்' என்று சொல்லிவிட்டாள். என்னவோ போல் ஆகிவிட்டது. 'சுயநலக்காரன்' என்று திட்டும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?
“உமா மிஸ் வீட்டுக்கு நீ மட்டும் போய் படிக்கிறாயே? என்னைக் கூப்பிட்டியா? கூப்பிட்டிருந்தா நானும் வரமாட்டேனா? நீ மட்டும் படிக்கணும்னுதானே என்கிட்ட சொல்லலை…”
எனக்கு இப்படி யோசிக்கமுடியாது. அல்லது தெரியாது. அப்படி நினைக்கவும் இல்லை. தற்செயலாக மிஸ்ஸிடம் சந்தேகங்கள் கேட்கப் போய், வீட்டுக்கே வாயேன், உட்கார்ந்து படியேன் என்று அழைத்தார்கள். இதில், ஓவியாவிடம் சொல்லக்கூடாது என்றெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் என் மனசை, அவளது வார்த்தைகள் அறுத்துக்கொண்டே இருந்தன. உமா மிஸ்ஸிடமே சொல்லிவிட்டேன். அடுத்த நாள், ஓவியாவை அழைத்துக்கொண்டு, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார். எனக்கு ஒருபக்கம் மனத்தில் காயம். அதேசமயம், ஓவியா என்னைத் தப்பாக எடுத்துக்கொண்டுவிட்டாளே என்ற வருத்தம்.
“ஓவியா, நீ போன மாசம் என்கிட்டே வந்து மேத்ஸ் ஒலிம்பியாடுக்கு பயிற்சி எடுத்துக்கிட்டியே, அதை கதிர்கிட்ட சொன்னியா?”
உமா மிஸ் நேரடியாக ஓவியாவைக் கேட்டார். ஓ! அப்படியா விஷயம். எனக்குத் தெரியாதே! இல்லை என்பதுபோல், ஓவியா தலையாட்டினாள்.
“ஏன் சொல்லணும்னு தோணலை?”
“தெரியலை மிஸ். சொல்லலை.”
இப்போது எனக்கு இன்னும் வருத்தம் அதிகமானது. என்னிடமும் சொல்லியிருந்தால், நானும் அந்தத் தேர்வை எழுதியிருப்பேனே!
“எல்லார்கிட்டயும் எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது. எது தேவையோ அதை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதாதா?”
ஓவியா நிமிர்ந்து உட்கார்ந்தாள். 'போதும்' என்பதுபோல் தலையசைத்தாள்.
“அடிப்படையில சகிப்புத்தன்மை வேணும். ஒரு விஷயத்தைச் சொல்றதுக்கும் சொல்லாமப் போறதுக்கும் நிறைய காரணங்கள் இருக்கலாம். அதுக்காக, கதிரைப் போய் நீ 'செல்ஃபிஷ்'னு சொல்லலாமா? அவன் அப்படித்தான் நடந்துக்கிட்டு வரானா? இல்லையே?” என்ற உமா மிஸ், பொறுமையாக ஓவியா முகத்தையும் என் முகத்தையும் பார்த்தார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உமா மிஸ் பேசத் தொடங்கினார்,
“இன்னிக்கு பிரச்னையே சகிப்புத்தன்மை இல்லாமல் போறதுதான். எல்லாமே என்னை மையமா வெச்சு நடக்கணும்னு எதிர்பார்க்கறதுதான். அப்படி எதுவுமே நடக்காது. இவ்வளவு பேர் வாழக்கூடிய உலகத்துல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கு. அதைச் செஞ்சுக்கிட்டு ஓடறாங்க. அடுத்தவங்களோட உணர்வுகளை மதிச்சு நடந்துக்கணும்னு எதிர்பார்க்கலாமே தவிர, அது நடக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையிலதான் சகிப்புத்தன்மை வேண்டும்.”
“சகிப்புத்தன்மையை வளர்த்துக்க என்ன செய்யணும் மிஸ்?”
“முதல்ல அடுத்தவங்ககிட்ட அன்போட இருக்கணும். எல்லோருமே நமக்கு எதிரிகள், நம்மைக் குறை சொல்லவோ, குற்றம் கண்டுபிடிக்கவோ தான் இருக்காங்கன்னு நினைக்க வேண்டாம். இரண்டாவது, உங்களுக்குள்ளேயே இருக்கிற மதிப்பீடுகள் என்னென்ன அப்படின்னு புரிஞ்சுக்கணும். உங்களுக்குத் தெரியாமலேயே பல விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கும். சில விஷயங்கள் பிடிக்காது. அருவருப்பா உணர்வீங்க. அது சரியான்னு கேள்வி கேட்கக் கத்துக்கணும். உங்கப்பா, அம்மா பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க. அதெல்லாம் சரியான்னும் கேள்வி கேட்கணும். நண்பர்கள் சொல்லியிருப்பாங்க. அதைக் கேள்வி கேட்கணும்.
இதெல்லாவற்றுக்கும் அடிப்படைதான் வேற்றுமைங்கறது. நான் இருக்கிறா மாதிரி ஓவியா இருக்க முடியாது. ஓவியா மாதிரி நீ இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியா வளர்ந்திருக்கோம். அப்படின்னா இந்த வேற்றுமை இயல்பானது. என் கருத்தை ஒத்துக்கலைன்னா, நீ விரோதின்னு நினைக்கக்கூடாது.
வேறவேற கருத்துகளோட இருந்தாலும் நாமெல்லோரும் நண்பர்கள், நம்மால இணைஞ்சு பள்ளிக்கூடம் வரமுடியும், படிக்க முடியும், பழக முடியும்னு புரிஞ்சுக்கணும். அதேபோல, அந்த வேற்றுமைகளையும் குறை சொல்லக் கூடாது. மதிக்கணும். உனக்கு ஒரு ஹீரோ பிடிச்சா, அது உனக்கு மகிழ்ச்சி தந்தா, அதை நான் அப்படியே ஏத்துக்கணுமே தவிர, அந்த ஹீரோவை நான் கிண்டல் பண்ணக்கூடாது. அப்படி பண்ணினா, தேவையில்லாமல் உன்னுடைய மனசை நான் காயப்படுத்துறேன்னு அர்த்தம். அப்படிச் செய்யக்கூடாது.
நாம் பேசும்போதும், பழகும்போதும் பல விதமான சார்புகளோட இருக்கிறோம். விருப்புவெறுப்புகளோட இருக்கிறோம். முன்னெல்லாம், 'ஊனம்'னு சொல்வோம். இப்போ, அதையே 'மாற்றுத்திறனாளி'ன்னு சொல்றோம். ஏன், அவங்களோட மனசு கஷ்டப்படக்கூடாது, அவங்களையும் அரவணைச்சுப் பேசணும்னு நினைக்கறதால தான். அப்படின்னா, சகிப்புத்தன்மைங்கறது அனைவரையும் அரவணைக்கிறதுக்கு அடிப்படை.
முதல்ல இப்படிக் கேட்டுக்குங்க. என்னோட பேச்சு அடுத்தவரை நோக அடிக்கிறதா? காயப்படுத்துகிறதா? அடுத்தவரோட பேச்சு என்னைக் காயப்படுத்துகிறதா? நோக அடிக்கிறதா?
அடுத்தவருடைய பேச்சு உங்களை நோக அடித்தால், அதைத் தாங்கிக்கொள்ள முயற்சி செய்யுங்க. அதுக்காக, அந்த நபரை மீண்டும் நோக அடிக்க முயற்சி செய்வதும் தவறு. அடுத்தவருக்கு அன்பைத் தரலாம், பாசத்தைக் கொடுக்கலாம். ஆனால், வலியையோ, வேதனையையோ கொடுக்கக்கூடாது. அதைத் தடுப்பதற்கான வழிமுறைதான் சகிப்புத்தன்மை. அன்பைக் கொடுத்தால், அன்பு பெருகும், வலியைக் கொடுத்தால் வேதனைதான் பெருகும்.”
ஓவியா என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் பார்வையில் ஒருவித கெஞ்சலும் மன்னிப்புக்கோரும் பாவனையும் தெரிந்தது. சட்டென அவளை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது. வெறுமனே கைகுலுக்கி என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
