PUBLISHED ON : அக் 14, 2024

விஜயநகரப் பேரரசு கி.பி.1336இல் ஹரிஹரர், புக்கர் என்னும் இரண்டு சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கி.பி. 1646 வரை, இந்தப் பரம்பரையில் வந்த அரசர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். பேரரசின் தலைநகர் ஹம்பியாக இருந்தது. தென்னிந்தியாவில் கலைக்கோயில்களை எழுப்பியவர்கள் இந்த அரசர்கள். கோயில்களின் முன்வாசலில், பிரமாண்ட கோபுரங்களை எழுப்பியவர்களும் இவர்கள்தான்.
விஜய நகரத்தின் தலைநகரான ஹம்பி, போரில் அழிந்தது. அழிவுக்குப் பின்னும், அந்த நகரம் ஒரு வரலாற்றுக் கண்காட்சிச் சாலையாக விளங்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காணும் இடமெங்கும் மதிற்சுவர்கள், இடிபட்ட அரண்மனைகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், சைவ, வைணவக் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள், மன்னர்கள் மகுடம் சூடிய மண்டபங்கள் எனப் பேரரசின் மிச்சங்கள் இன்னும் இருப்பதால், அந்தக் கூற்று மெய்யானதாகவே தோன்றுகிறது.
படத்தில் இருப்பது, ஹம்பியில் உள்ள விருபாக் ஷா கோயில். இந்தக் கோயில் மண்டபத்தில்தான் கிருஷ்ணதேவராயர் முடி சூட்டிக்கொண்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கோயிலின் முன்வாசல் கோபுரத்தைக் கடந்து 200 அடிகள் முன்னோக்கிச் சென்றால், சற்றே மேடானப் பகுதியில், ஓர் அறை இருக்கிறது.
அந்த அறையின் சுவரில் சிறு துவாரம் உள்ளது. துவாரத்தின் வழியாகச் சூரிய ஒளி, உள்ளே இருக்கும் ஒரு சுவரில் பிரதிபலிக்கிறது. அது கோபுரத்தைத் தலைகீழாகக் காட்டுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தக் கோயில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஹொய்சாளர், சாளுக்கியர், விஜயநகர அரசர்கள் எனப் பலரும் இந்தக் கோயிலை விரிவாக்கம் செய்துள்ளனர். எந்த மன்னரின் நுண்ணிய அறிவு இப்படி நிழலாகப் பிரதிபலிக்கிறது என்று தெரியவில்லை!