வரலாற்றுத்தடம்: மனிதர்களை விழுங்கிய வேலூர் கோட்டை முதலைகள்
வரலாற்றுத்தடம்: மனிதர்களை விழுங்கிய வேலூர் கோட்டை முதலைகள்
PUBLISHED ON : ஆக 28, 2023

இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து, 1653இல் இந்தியாவிற்கு வந்தவர் நிக்கொலா மனுச்சி. மொகலாயரின் அரசவை மருத்துவராக இருந்தவர். மொகலாய அரசர்கள் பலரிடமும் செல்வாக்குப் பெற்ற மருத்துவராக இருந்தார். அதே காலகட்டத்தில் சென்னையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களிடமும் நட்பாக இருந்துள்ளார்.
அவர், சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், கடப்பா என்று இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.
மனுச்சி தன்னுடைய 'மொகலாய இந்தியாவில் என் பயணக் குறிப்புகள்' என்னும் நூலில், வேலூர் கோட்டைப் பற்றியும் கூறியுள்ளார். 'வேலூர் கோட்டை (1702இல்) மிகவும் பெரியதாக நல்லமுறையில் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் பக்கச் சுவர்கள் பெரியதாக இருந்தன. அகழியும் 50 அடி சுற்றளவுக் கொண்டு பெரியதாக இருந்தது. அகழியில் தண்ணீர் இருந்ததுடன் அதிக எண்ணிக்கையிலான முதலைகளும் இருந்தன.
இந்த அகழியில் யாராவது தவறி விழுந்துவிட்டால், உடனே முதலைகள் இறையாக்கிக் கொள்ளும். தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டு தாடைகளை அகல விரித்தபடி முதலைகள் காத்திருக்கும். நான் ஆடுகளைத் துண்டு துண்டாக வெட்டி, முதலைகளுக்குப் போட்டேன். அதை முதலைகள் ஒரே விழுங்காக விழுங்கிவிட்டன. சில நேரங்களில் மனிதர்கள் சுயபலியிட்டுக் கொள்வதற்காகவும் இந்த அகழியில் விழுந்து இறந்ததுண்டு.
மொகலாயர்கள்
ஆடு, மாடு, எருமைகளை முதலைகளுக்கு
உணவாக கொடுப்பதுண்டு. மொகலாயரின் படைத்தளபதி தாவூத்கானின் கட்டுப்பாட்டிற்குள், இந்தக் கோட்டை வந்த
பிறகு, படையில் இருந்த சந்தேகத்திற்கு
இடமான ஆட்களை இந்த முதலைகளுக்கு
இரையாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்' என்றும் மனுச்சி தன்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
