தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பட்டாசு வந்தது எப்படி ?

பட்டாசு வந்தது எப்படி ?

பட்டாசு வந்தது எப்படி ?


PUBLISHED ON : அக் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டாசு என்னும் பொருளுக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக உலகமெங்கும் பரவியது பட்டாசு.

பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன் வேதியியல் செயற்பாடு குறித்த விளக்கத்தை நவீன அறிவியல் கொடுக்கிறது. ஆனால், அறிவியல் பயன்பாட்டுக்கு முந்திய பழங்காலத்திலேயே சீனர்கள் பட்டாசைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்தார்கள் என்பது வியப்பூட்டும் செய்திதான்.

உலகிலுள்ள எல்லாரையும் போலவே தொடக்க காலச் சீனர்கள், தங்கள் சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு உப்பு நீரைக் காய்ச்சியும், உப்புச்சுவையுள்ள பாறைப் படிவுகளைச் சுரண்டி எடுத்தும் தங்களுக்குரிய உப்பைப் பெற்றனர். சீனர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி எரிந்து அணையக்கூடிய தன்மையைக் கொண்டது. பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்பைச் சமையலுக்குப் பயன்படுத்தியபோது, அந்த உப்புக்கற்கள் தவறி நெருப்புக்குள் விழுந்தன. நெருப்பில் விழுந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப்போல் பொறித்துகள்களை உதிர்த்தபடி எரிந்து அடங்கியது. இதுதான் பட்டாசுக்கான மூலப்பொருளைச் சீனர்கள் கண்டறியக் காரணமான முதல் வினை. ஒளியைத் தோற்றுவிப்பதற்காகத்தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது.

அந்த உப்பைக்கொண்டு பல்வேறு ஒளிரும் செயல்களை நிகழ்த்தினர். அந்த ஒளி விளக்கொளியைவிடவும் தகதகப்பாகவும் கண்ணைப் பறிக்கும்படியாகவும் இருக்கவே, தொடர்ந்து பயன்படுத்தலாயினர். பிறகு மூங்கில் குருத்துக்குள் அந்த வெடியுப்பை நிரப்பிப் பற்ற வைத்தனர். அது காதைப் பிளக்கும் சத்தத்தை எழுப்பியபடி வெடித்தது. பிற்பாடு கரியும் கந்தகத்தூளும் கலந்த கலவையும் இவ்வாறு வெடிக்கும் தன்மையுடையதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

வெடிக்கும் பொருளை இறுக்கமான மூங்கில் குருத்துக்குள் இட்டு நிரப்பி தீப்பற்ற வைத்தனர். அந்த வெடிமருந்து தீயினால் திடீரென்று விரிவடைவதால் தன்னைச் சூழ்ந்திருக்கும் மூங்கில் தடுப்பை நொடியின் பின்னத்திற்குள் தகர்க்கிறது. அந்தத் தகர்ப்பொலிதான் வெடியோசையாக 'பட் படார்' என்று நமக்குக் கேட்கிறது. மூங்கில் குருத்துக்குள் கீழ்ப்பகுதியை அடைக்காமல் விட்டு ஒரு வால்குச்சியைக் கட்டினால் அந்த வெடிமருந்து திறந்திருக்கும் பகுதியில் விரைந்து வெளியேறுகிறது. அதனால் பெறப்படும் உந்து விசையைக்கொண்டு எந்தத் திக்கிலும் ஏவலாம். அந்த முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் வாணம். வாணப்பட்டாசின் மேல்நுனியில் வெடிமருந்துக் கலவையை அடர்த்தியாய் அடைப்பதன் மூலம், வெடிக்கவும் வைக்கலாம். அம்முறைப்படிதான் வானில் ஏவப்படும் வாணங்கள் வெடித்துச் சிதறுகின்றன.

சீனர்கள் பட்டாசுப் பயன்பாட்டை அறிந்தவுடன், தீயசக்திகளை விரட்டுவதற்கு அதைப் பயன்படுத்தினர். சீனத்து பௌத்தத் துறவியொருவர் பட்டாசுச் சத்தத்தால் தீயவை அகல்கின்றன என்று கூறினார். அவர் கூறியவாறு சீன அரசர்கள் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. சீனத்திற்குப் பயணம் செய்த ஐரோப்பியப் பயணிகள் பட்டாசு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு, தத்தம் நாடுகளில் பரப்பினர். ஏழாம் நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்ட சீனக்குறிப்புகள் உள்ளன.

உலகின் எல்லா நாடுகளுமே பட்டாசுகளைப் பல்வேறு விழாக்களுக்குப் பயன்படுத்துகின்றன. ஒளிசார்ந்த பண்டிகை என்பதால், தீபாவளிக்கு ஒளிரும் பட்டாசுகளைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. தமிழகத்தின் சிவகாசியில் உலகின் மிகத்தரமான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us