தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'உம்' மால் என்ன பயன்?

'உம்' மால் என்ன பயன்?

'உம்' மால் என்ன பயன்?


PUBLISHED ON : அக் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

உம் என்ற சொல்லுருபு, பல்வேறு சொற்களோடு சேர்ந்து வரும். அமுதும் தமிழும் என்ற தொடரைப் பாருங்கள். அமுது, தமிழ் ஆகிய இரண்டு சொற்களுக்கு கடைசியில் உம் என்ற அச்சொல்லுருபு சேர்ந்ததால், இரண்டும் தொடராகிவிட்டன. இல்லாவிட்டால் இரண்டு சொற்களும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும்.

உம் என்பதை இடைச்சொல் என்றும் அறிந்து கொள்ளலாம். சொற்களை இணைத்துத் தொடராக்கும் இணைப்பு வேலையை இடைச்சொற்கள் செய்கின்றன. அவ்வாறு இணைக்கும்போது, கூடுதலாக ஒரு பொருளையும் சேர்த்துத் தருகின்றன.

அமுதும் தமிழும் என்னும்போது, இவ்விரண்டும் ஒரே தன்மையுடைய பொருளைத் தருகின்றன. சேரனும் சோழனும் பாண்டியனும் தமிழ் நிலத்தை ஆண்ட மூவேந்தர்கள். இத்தொடரில், மூவேந்தர்களும் ஆண்டார்கள் என்னும் ஒரே பொருளை உணர்த்துவதற்காக உம் சேர்க்கப்பட்டது. இப்படி உம் என்பது, பலவகைப் பொருள்களை வழங்கக் கூடியது.

பாட்டும் தெரியுமா? இந்தக் கேள்வியில் இணைந்துள்ள உம் என்பது, என்ன பொருள் தருகிறது? “என்னென்னவோ தெரிந்து வைத்திருக்கிறாய்; அதோடு பாட்டையும் தெரிந்து வைத்திருக்கிறாயா?” என்னும் பொருள் கிடைக்கிறது. இப்படி உம் என்ற உருபுக்கு, பல்வேறு பொருள்கள் உள்ளன. அப்பொருளின்படி சிறப்பும்மை என்ற வகைப்பாட்டைப் பெறுகிறது.

ஒன்றைச் சிறப்பித்துக் கூறுவதற்காக உம் வருகிறது. என்னென்னவோ தெரிந்தாலும் பாட்டும் தெரியுமா என்று கேட்பதன்மூலம் அவருக்குத் தெரிந்திருக்கும் பலவற்றில், பாட்டைச் சிறப்பித்துக் கேட்பது விளங்குகிறது. இங்கே அந்த உம் என்பது சிறப்பும்மை. பாட்டை உயர்வாக்கிக் கேட்டதால், 'உயர்வுச் சிறப்பும்மை' என்று பெயர்பெறும்.

ஒன்றை உயர்வாக்கிச் சிறப்பித்துக் காட்டுவதற்கு உம் சேர்த்தால், அது உயர்வுச் சிறப்பும்மை. 'அண்ணலும் நோக்கினான்', 'வள்ளுவரும் கூறுகிறார்' என்பது உயர்வுச் சிறப்பும்மை.

அதேபோல 'இழிவுச் சிறப்பும்மை' என்றும் ஒன்றுண்டு. ஒன்றை இழிவுக் குறிப்போடு சிறப்பித்துக் கூறுவது. 'நாயினும் கடையேன்' என்பதில் உள்ள உம் இழிவுக் குறிப்போடு சிறப்பித்துக் கூறிய உம்மை. நாய் என்பது இழிவு. அதைச் சிறப்பிக்க உம் சேர்க்கப்பட்டது. 'களவும் கற்றுமற' என்பது இழிவுச் சிறப்பும்மை. களவு என்பது இழிவுக்குறிப்பு.

- தமிழ் மலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us