தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முத்து, பவளங்கள் நிறைந்த அகவல் பா

முத்து, பவளங்கள் நிறைந்த அகவல் பா

முத்து, பவளங்கள் நிறைந்த அகவல் பா


PUBLISHED ON : அக் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதோ, யானைக்கூட்டம்.

வரிசையாக ஆண் யானைகள் வருகின்றன. அவற்றின் கம்பீரமே தனி அழகு.

அதுவும் ஒன்றிரண்டு அல்ல; 120 ஆண் யானைகளின் வரிசை அது!

அவற்றுக்குப் பின்னால், விலையுயர்ந்த நீலமணிகளையும் சிவப்பு பவளங்களையும் சேர்த்துக்கோத்த ஒரு மாலை வருகிறது. அதில் மொத்தம் 180 மணிகளும் பவளங்களும் உள்ளன.

நிறைவாக, ஒரு முத்துமாலை வருகிறது. அதில் மிகச்சிறந்த 100 முத்துகள் உள்ளன.

இந்தக் கற்பனைக்காட்சி, உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு சங்க இலக்கிய நூலைக் குறிக்கிறது: அகநானூறு.

120 யானைகள், 180 மணிகள், பவளங்கள், 100 முத்துகள், கூட்டிப்பார்த்தால் 400 வருகிறதல்லவா? அதுதான் இந்த நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

இவற்றுள் முதல் 120 பாடல்களைக் 'களிற்றியானைநிரை' என்று அழைத்தார்கள். 'களிறு' என்றால் ஆண் யானை, 'நிரை' என்றால் வரிசை. கணிதத்தில் நிரல், நிரை என்று வாசித்திருப்பீர்கள். அதுபோல, ஆண் யானைகள் இங்கே வரிசையாக வருகின்றன. அதுபோன்ற கம்பீரத்தைக் கொண்ட பாடல்கள் இவை.

அடுத்து வரும் 180 பாடல்களை (121 முதல் 300 வரை) 'மணிமிடைபவளம்' என்று அழைத்தார்கள். அதாவது, மணிகளோடு பவளங்களையும் சேர்த்துக் கட்டியதைப் போன்ற அழகுடன் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

நிறைவாக வரும் 100 பாடல்களை (301 முதல் 400 வரை) 'நித்திலக்கோவை' என்றார்கள். 'நித்திலம்' என்றால் முத்து, 'கோவை' என்றால் மாலை. முத்துமாலையைப்போன்ற பாடல்கள் இவை.

இந்தப் பகுப்பைக் குறிப்பிடும் ஒரு பழம்பாடல் இது:

'நானூறு எடுத்து நூல்நவில் புலவர்

களித்த மும்மதக் 'களிற்றியானைநிரை',

மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்,

மேவிய நித்திலக்கோவை என்று ஆங்கு

அத்தகு மரபின் முத்திறமாக...'

தனித்தனியே பல புலவர்கள் எழுதிய பாடல்கள்தான், 'அகநானூறு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கும்போது, அவற்றை முத்திறமாக, மூன்று வகைகளாக, யானைகளின் அணிவகுப்பாக, விலையுயர்ந்த கற்கள், முத்துகளைக் கோத்த மாலைகளாக மனக்கண்ணில் கண்டிருக்கிறார்கள் அறிஞர்கள். நூலின் பெயரிலும் பகுப்பிலுமே எத்துணை நயம்!

அகநானூற்றுப் பாடல்கள் அனைத்தும், 'அகவற்பா' என்னும் வகையைச் சேர்ந்தவை. அகவல் + பா, அதாவது, 'அகவல்' என்னும் ஓசை அமைந்த பாடல்கள் இவை.

'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல், கூவுதல், இசைத்தல், பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. மயிலின் ஓசையையும் 'அகவல்' என்பார்கள்.

அகநானூற்றுப் பாடல்கள் ஒருவரிடம் ஒன்றைச் சொல்வதுபோன்ற ஓசையமைப்பைக் கொண்டவை. ஆகவே, அவற்றை 'அகவற்பா' என்றார்கள். இதை 'ஆசிரியப்பா' என்றும் அழைக்கலாம்.

யானைகளும், மணி, பவள, முத்து மாலைகளும் உங்களை அழைக்கின்றன. அகநானூற்றை வாசித்து மகிழுங்கள்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us