PUBLISHED ON : அக் 16, 2017

இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. புத்தாடைகள், பட்டாசுகள், திண்பண்டங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து தீபாவளியன்று கிடைப்பதால், சிறுவர், சிறுமியர்களுக்கு அதிக மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் கொடுக்கும் பண்டிகை தீபாவளி என்று சொல்லலாம்.
எப்படி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் எல்லாம் புத்தகத் திருவிழாவை எதிர்நோக்குகிறார்களோ, அதேபோல் தான் இனிப்புக் கடைகள், துணிக் கடைகள், பட்டாசு உற்பத்தியாளர்கள் என அனைவரும் தீபாவளிக்காகக் காத்திருப்பார்கள். இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலானோர் தீபாவளியைக் கொண்டாட முக்கிய காரணம் பட்டாசுகள்.
தீபாவளி சமயத்தில் அதிக அளவில் பட்டாசுகள் விற்பனையாகும். கடந்த பத்தாண்டுகளில் பட்டாசுகளின் வகைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, சமீப காலமாக அதிக ஒலியை எழுப்பும் பட்டாசுகளை மக்கள் வாங்குவதில்லை என பட்டாசு வணிகர்கள் கூறுகின்றனர். வானவேடிக்கைகள், அருவி போல எழும்பும் பட்டாசுகள், ஒளி நிறைந்த பட்டாசுகள், காகிதங்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் என, மக்கள் பட்டாசுகளை விழிப்புணர்வோடு தேர்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் தீபாவளியின்போது, சில விபத்துகளும் நடக்கத்தான் செய்கின்றன. விபத்துகளைத் தவிர்த்து, எச்சரிக்கையோடு பட்டாசுகளை வெடிப்பது எப்படி என பார்ப்போம்.
* சிறுவர், சிறுமியர் எப்போது பட்டாசு வெடிக்க விரும்பினாலும், வீட்டில் பெரியவர்கள் யாராவது ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பட்டாசுகளை முடிந்தவரை திறந்தவெளியில் வெடிப்பது நல்லது. எளிதாக நெருப்பு பிடிக்கும் இடங்களில் இருப்போர் கவனமாக இடத்தைத் தேர்வுசெய்து வெடிக்கவும்.
* பட்டாசுகள் வெடிக்கும்போது, உங்களுடைய ஆடைகள் தொள தொளவென்று காற்றில் பறக்காமல் இருக்க வேண்டும்.
* வேடிக்கைக்காகவோ, சாகசத்திற்காகவோ பட்டாசுகளை கையில் பற்றவைத்து வீசுவது போன்ற வேலைகளைச் செய்யக்கூடாது. ஒரு நேரத்தில் ஒரு பட்டாசு தான் வெடிக்க வேண்டும். திரில்லுக்காக செய்வதாக நினைத்தால், விளையாட்டு வினையாகும்.
* பட்டாசு வெடிக்கும்போது, நிச்சயமாக காலணிகள் அணிய வேண்டும். அதுவும் கால் முழுவதும் மூடியிருக்கும் வகையிலான காலணிகளை அணியுங்கள்.
* நீங்கள் வெடிக்கும் இடத்தில் இருக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் பக்கெட் தண்ணீர். ஏனெனில் ஆபத்து சிறியதோ, பெரியதோ எப்போது வரும் என, நம் யாருக்கும் தெரியாது. முடிந்தவரை ஆபத்தைத் தவிர்க்க முயற்சி செய்வோம். அதேபோல் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருப்போம். நாம் பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருக்க வேண்டிய முக்கிய முதலுதவி மருந்தும் கூட.
* அதேபோல் வெடிக்காத பட்டாசுகளைக் கையாள்வது மிகவும் முக்கியம். வெடிக்கவில்லை என்று தபதபவென்று அதை மீண்டும் பற்றவைக்கும் முன், அதில் தீப்பொறி இருக்கிறதா என கவனியுங்கள். அதன் பின், பத்து நிமிடம் கழித்து வெடிக்கவில்லை என்றால் தண்ணீரில் மூழ்கவிடுவது நல்லது.
* வீட்டில் செல்லப்பிராணிகள், தெருவில் இருக்கும் மற்ற நாய்கள், பூனைகளை விளையாட்டாக அச்சுறுத்த சத்தமான பட்டாசுகளை அதன்முன் வெடிப்பது தவறு.
* உங்கள் மீது தவறுதலாகத் தீப்பிடித்தால், ஓடாமல், தரையில் தீயை அணைக்க முற்பட வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தபின் வேலை முடிந்தது என, அப்படியே ஓடுவது நல்ல பழக்கம் கிடையாது. அதனால் முடிந்தவரை நம் வீட்டுமுன் இருக்கும் பட்டாசுக் குப்பைகளை ஒன்று திரட்டி வைப்பது நல்லது.
