PUBLISHED ON : அக் 16, 2017

“மேலை நாடுகளில் ஜாதி உண்டா?” என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன்.
“ஏழை பணக்காரர் பாகுபாடு உண்டு. பாலின, நிற பாரபட்சம் உண்டு. வட்டாரப் பாசம் உண்டு. ஆனால், நம் ஊரில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி முறை இருப்பது போல அங்கே பெரும்பாலும் இப்போது இல்லை. தொழில் அடிப்படையில் குடும்பங்கள் வழிவழியாக இருந்து வந்ததுகூட மறைந்துவிட்டது. ஏன் திடீரென்று இந்தக் கேள்வியைக் கேட்டாய்?” என்றார் மாமா.
“உலக அனஸ்தீஷியா தினம் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்து தோன்றியது கேள்வி.” என்றேன். மாமா சிரித்தார். “அனஸ்தீஷியா வலியை மரக்கச் செய்வது; மறக்கச் செய்வது. ஜாதியைக்கூட மர(ற)க்கச் செய்ய ஏதாவது அனஸ்தீஷியா கண்டுபிடித்தால் நன்றாகத்தான் இருக்கும்.” என்றார்.
“ஆனால், அனஸ்தீஷியா என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர்தான் மேலை நாட்டில் ஒரு புது ஜாதியையும் வர்ணித்திருக்கிறார்.” என்றது வாலு. அவர் பெயர் ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ். அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், மருத்துவர், சட்ட அறிஞர் என்று பல முகங்கள் அவருக்கு. அறுவை சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்க, மருத்துவர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன், ஈதரை (Ether) பயன்படுத்தி வெற்றி கண்டபோது, எழுத்தாளர் வெண்டல் அதற்கு 'உணர்வற்ற நிலை' என்று பொருள்படும் அனஸ்தீஷியா என்ற பெயரைச் சூட்டினார்.
“இதே எழுத்தாளர் 'பாஸ்டன் பிராமின்ஸ்' என்ற வர்ணனையை பிரபலமாக்கினார் என்று படித்தேன். அமெரிக்காவில் பாஸ்டன் துறைமுகத்தில் கப்பல்களிலிருந்து தேயிலைப் பெட்டிகளைக் கடலில் தூக்கிப்போட்டு நடந்த பாஸ்டன் டீ பார்ட்டி புரட்சி எனக்குத் தெரியும். ஆனால், பாஸ்டனில் ஏது பிராமின்ஸ்?” என்று மாமாவிடம் கேட்டேன்.
“பாஸ்டனில் இப்போது இந்தியாவிலிருந்து போன பிராமின்ஸ் இருப்பார்கள். ஆனால், வெண்டல் அவர்களைக் குறிப்பிடவில்லை. அவர் வாழ்ந்தது 1809 லிருந்து 1894 வரையில். வழக்கமாக அவர் எழுதி வந்த அட்லாண்டா என்ற பத்திரிகையில் 1860ல் 'பாஸ்டன் பிராமின்ஸ்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். அதாவது, பிராமின் என்றால் என்ன அர்த்தம் என்று அவர் புரிந்து வைத்திருந்தாரோ அந்த அடிப்படையில் பாஸ்டனில் இருந்த 53 குடும்பங்களைக் குறிப்பிட அவர் இதைப் பயன்படுத்தினார். அவர்கள் எல்லாரும் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்த பூர்வ அகதிகள். அவர்களுடைய வாழ்க்கை முறைதான் மேலானது. நாசூக்கானது. ரசனை மிக்கது. அவர்கள் ஒரே மாதிரி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குத் தான் செல்வார்கள். பேசுகிற பாணி தனித்துத் தெரியும். வாழும் விதம் பல நெறிமுறைகளை உடையது. மற்றவர்களுக்கு வழிகாட்டும் உரிமை அவர்களுக்கே உடையது. சுருக்கமாகச் சொன்னால் பிரிட்டிஷ் நாகரிகத்தை அமெரிக்காவில் செயற்படுத்தத் தகுதியானவர்கள் இவர்கள்தான் என்றெல்லாம் வெண்டல் கருதினார். உண்மையில் வெண்டலே ஒரு பாஸ்டன் பிராமின் தான் என்று அவரது விமர்சகர்கள் சொன்னார்கள்.” என்று விளக்கினார் மாமா.
“அந்த 53 குடும்பங்கள் யார்? இப்போதும் இருக்கிறார்களா?” என்றான் பாலு.
“இருக்கிறார்கள். வாரிசுகள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயேதான் திருமண உறவுகள் வைத்துக்கொள்கிறார்கள்.” என்று மாமா சொன்னதும், வாலு ஏ முதல் இசட் வரை ஒரு நீண்ட பட்டியலையே நீட்டியது.
அடுத்து மாமா சொன்னதுதான் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. 'பாஸ்டன் பிராமின்ஸ்' என்ற சொற்கள் ஆக்ஸ்போர்டு அகராதியிலேயே இருக்கிறதாம். அது மட்டுமல்ல. 'பறையா' என்ற சொல்லும் அந்த அகராதியில் இன்றும் இருக்கிறதாம். அதற்கு அகராதிப்படி அர்த்தம் “சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்” என்றது வாலு. “அந்தச் சொல்லை அகராதியிலிருந்து நீக்கவேண்டும்” என்று இந்தியாவில் பல தலித் அமைப்புகள் முன்னர் குரல் எழுப்பியிருப்பதாக மாமா சொன்னார்.
“எதையாவது எதிர்த்துக் குரல் எழுப்புவதென்றால், பலமாக எழுப்ப வேண்டும். அப்போதுதான் கவனிப்பார்கள். திக்கித் திக்கி எழுப்பக் கூடாது.” என்றான் பாலு.
“திக்கித் திக்கிப் பேசுவதற்கும், பலமாக எதிர்ப்பைக் காட்டுவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பிரிட்டனை வழிநடத்தி வீராவேசமாகப் பேசிய வின்ஸ்டன் சர்ச்சில், திக்குவாய் பிரச்னை உடையவர்தான். இந்தியாவில் மிகப் பெரிய இடதுசாரி தலைவராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் திக்கித் திக்கித்தான் பேசுவார். ஹிந்தி திரைப்பட கதாநாயகன் ஹ்ரிதிக் ரோஷனுக்கும் அந்த பிரச்னை உண்டு. திக்கிப் பேசும் சிக்கல் உடைய பிரபலங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.” என்றார் மாமா.
“ஏன் திக்குவாய் ஏற்படுகிறது? அதைச் சரி செய்ய முடியாதா?” என்று கேட்டான் பாலு. “இதுதான் காரணம் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறு வயதிலேயே கவனித்தால் கட்டுப்படுத்திவிடலாம். அடிக்கடி திக்காமல் எப்போதாவது திக்குகிற நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை, பயம் எல்லாம் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. அதனால், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை அதிகப்படுத்துவதன் மூலம், பயத்தைப் போக்கித் திக்குவதைக் குறைக்கலாம். தவிர மூச்சுப் பயிற்சிகளும் நிறைய உதவுகின்றன.” என்றார் மாமா.
“பயம்தான் பல சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. ஜாதி இரண்டொழிய வேறில்லை. பயப்படுகிறவர்கள் ஒரு ஜாதி, பயமில்லாதவர்கள் ஒரு ஜாதி. அதனால்தான் பாரதி 'அச்சம் தவிர்' என்று ஆத்திசூடி எழுதியிருக்கிறார்.” என்றேன்.
வாலுபீடியா 1:
உலக அனஸ்தீஷியா தினம் : அக்டோபர் 16
உலக புள்ளிவிவர தினம் : அக்டோபர் 19
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் : அக்டோபர் 22
வாலுபீடியா 2
திக்கிப் பேசும் சிக்கல் இருந்த பிரபலங்கள் சிலர்:
கிரேக்க அறிஞர் டெமாஸ்தனஸ், ஏசுவின் சீடர் மோசஸ், அறிஞர் டார்வின், நடிகை மர்லின் மன்றோ, நடிகர் மிஸ்டர் பீன் அட்கின்சன், நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், எழுத்தாளர்கள் லூயி கரோல், ஜான் அப்டைக், சாமர்செட் மாம், விளையாட்டு வீரர் பென் ஜான்சன். பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ். இவர் தன் திக்குச் சிக்கலை கடந்து யுத்த சமயத்தில் வானொலி மூலம் எழுச்சி உரைகள் நிகழ்த்திய கதை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
