தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/சினிமாவை கண்டுபிடித்தவர் எப்படி இறந்தார்?

சினிமாவை கண்டுபிடித்தவர் எப்படி இறந்தார்?

சினிமாவை கண்டுபிடித்தவர் எப்படி இறந்தார்?


PUBLISHED ON : அக் 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலு கோபமாக இருந்தான். அவன் சரியாக பதில் சொன்னதற்கு மதிப்பெண் கொடுக்காமல் க்விஸ் மாஸ்டர் அவனைத் தோற்கச் செய்துவிட்டாராம்.

“சினிமாவின் தந்தை என்று பாராட்டப்படும் சினிமா கண்டுபிடிப்பாளர்கள் யார்? இதுதான் கேள்வி” என்றான் பாலு.

“லூமியர் பிரதர்ஸ்” என்றேன்.

“அதைத்தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா அது தப்பு. அவங்க 1895லதான் பொதுமக்களுக்குப் படம் போட்டுக் காட்டினாங்க. ஆனா அதுக்கு மூணு வருஷம் முன்னாடியே சார்லஸ் எமிலி ரெனாட் படம் போட்டுக் காட்டியிருக்காரு. அவரைத்தான் நியாயமா சொல்லணும்னு நான் பதில் சொன்னேன். அதை க்விஸ் மாஸ்டர் ஏத்துக்கல.”

உடனே ஞாநி மாமா, “மிக அதிகமான மழை பெய்யற இடம் எது?” என்றார். பாலுவும் நானும் ஒரே குரலில் “மேகாலயாவில் சிரபுஞ்சி” என்றோம். “இல்லை அது இரண்டாவது இடத்துக்கு போயிடுச்சு. இப்ப முதல் இடம் அதே மேகாலயால மாசின்ராம் கிராமத்துக்குத்தான். இந்த மாதிரி சில தகவல் மாறிகிட்டே இருக்கும். ஒரு க்விஸ் மாஸ்டர் தன் அறிவையும் புதுப்பிச்சுகிட்டே இருக்கணும்” என்றார் மாமா.

“புவி வெப்பமயமாகறதுனால, மழை மாறக்கூடிய விஷயம். ஆனா சினிமாவைக் கண்டுபிடிச்சது யாருங்கறது எப்பிடி மாறும்? யார் இந்த சார்லஸ் எமிலி ரெனாட்?” என்று கேட்டேன்.

வாலு தகவல்களை அள்ளி வீசியது. ரெனாட் 1844ல பிரான்சுல பிறந்தவர். இவர் 1877லயே தன்னோட கருவிக்கு உரிமை வாங்கிட்டார். 1892ல பொதுமக்களுக்கு சினிமா போட்டுக் காட்டத் தொடங்கிட்டார். உண்மையில இவரை கார்ட்டூன் சினிமாவோட தாய்ன்னு (ஏன் தந்தைன்னுதான் சொல்லணுமா?) சொல்லலாம். இவர் காண்பிச்ச படங்கள் எல்லாம் இவரே உருவாக்கின கார்ட்டூன்கள். ஒவ்வொரு ஃபிரேமா ஒரு தகட்டுல வரைஞ்சு அதை ஒரு கண்ணாடில பிரதிபலிக்க வெச்சு அந்தக் கண்ணாடிலருந்து திரைக்கு பெரிசுபடுத்திக் காட்டறதுதான் இவர் கண்டுபிடிச்ச முறை.

லூமியர் பிரதர்ஸ், ரயில் ஸ்டேஷனுக்கு வர்றது, ஜனங்க கூட்டமா நிக்கறது, இந்த மாதிரி துண்டுப் படங்களைத்தான் காட்டினாங்க. ஆனா ரெனாட்தான் இப்ப நாம பார்க்கற சினிமால இருக்கற பல விஷயங்களை லூமியருக்கும் முன்னாலயே செஞ்சு காட்டியிருக்காரு. கார்ட்டூன் படங்கள் மூலம் 15 நிமிடத்துக்குக் கதை சொல்லியிருக்காரு. திரையில படம் ஓடறப்ப, அவங்க சவுண்ட் எஃபெக்ட் வர்றதுக்கும் அவர் தன் ப்ரொஜெக்ஷன்ல ஒலிக் கருவியை இணைச்சிருக்காரு. அது தவிர படம் ஓடறப்ப கூடவே வசனம் பேச ரெண்டு பேரையும் பின்னணி இசை வாசிக்க ஒரு இசைக் கலைஞரையும் ஏற்பாடு செஞ்சிருக்காரு. இதெல்லாம் லூமியர் ஷோல கிடையாது. ஃபிலிமை ப்ரொஜெக்டர்ல ஓட்டறதுக்காக அதுல சீரா ஓரத்துல துளை போடற முறையையே ரெனாட்தான் உருவாக்கினார்.

அக்டோபர் 28, 1892லருந்து 1900 வரைக்கும் எட்டு வருடத்துல ஐந்து லட்சம் பார்வையாளர்களுக்கு ரெனாட் தன்னோட கார்ட்டூன் சினிமாவைக் காட்டியிருக்காரு. ஆனா 1895ல லூமியர் பிரதர்சோட புகைப்பட சினிமா வந்ததும் ரெனாடுக்கு மவுசு குறைஞ்சிடுச்சு. பண நெருக்கடி ஏற்பட்டு ரொம்ப கஷ்டப்பட்டார். கடைசியில நொந்து போய் தன்னோட கருவி, படம் எல்லாத்தையும் சீன் நதியில தூக்கிப் போட்டுட்டு தானும் குதிச்சுட்டார். காப்பாத்தி மருத்துவமனையில சேர்த்தாங்க. ஆனா அங்கே இறந்துபோயிட்டார்.

“இவ்வளவு முக்கியமான ஆளுக்கு உலகம் ஒரு பெரிய அங்கீகாரத்தையே கொடுக்கலியே?”என்று மாமாவிடம் கேட்டேன். “மொத்தமா கொடுக்கலைன்னு சொல்ல முடியாது. அவர் கார்ட்டூன் படம் காட்டத் தொடங்கின அக்டோபர் 28ஐ உலக அனிமேஷன் தினமா கொண்டாடறாங்க.” என்றார் மாமா.

“அதற்கு முன் தினம் கூட ஒலி ஒளிக் காட்சி மரபுக்கான தினம்தான்” என்றது வாலு. ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஒலிப் பதிவுகள், ஒளிப்பதிவுகள் நடந்துகிட்டே இருக்கு. இதுல பாதுகாத்து வைக்க வேண்டியது நிறைய இருக்கு. ஆனா நாம அதுல போதுமான அக்கறை காட்டறது இல்ல.

“காந்தி, பெரியார், நேரு, அம்பேத்கர் இவங்க பேசின பேச்சு பதிவெல்லாம் இருக்கு இல்லியா?” என்று கேட்டேன். “இருக்கு. இல்லாதது பாரதியார். அவர் குரல் எப்பிடி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.” என்றார் மாமா. “ஏன் பாரதி குரல் பதிவு இல்ல? அவரும் காந்தி காலத்துலதானே இருந்தார்?” என்றேன். “காந்தி அப்பவே ஒரு முக்கியமான தலைவரா இருந்தார். ஆனா பாரதி வாழ்ந்த காலத்துல அவரை முக்கியமானவரா நினைச்ச மாதிரி தெரியல. அவர் இறந்த பிறகுதான் அவருக்கு புகழ் அதிகமாச்சு.” என்றார் மாமா.

“எங்கம்மா நான் அஞ்சு வயசுல 'அம்மா இங்கே வாவா' பாடினதை ரிகார்ட் பண்ணி வெச்சிருக்காங்க” என்றான் பாலு. “ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிடி ரிகார்ட் பண்ணனும். குழந்தையோட ஒவ்வொரு வருடத்தையும் ஒலியா, ஒளியா பதிவு செய்யணும். பெரியவங்க ஆனதும் அதையெல்லாம் திரும்பிப் பார்க்கறது எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா?”என்றார் மாமா.

“ஆனா, பாலு பாடினதை இப்ப கேக்க முடியாதே மாமா. அந்த டேப் இருக்கு. டேப் ரிகார்டர் இல்ல.” என்றேன்.

“நம்ம சேமிச்சு வெச்சிருக்கறதையெல்லாம் புது டெக்னாலஜி வரும்போது அதுக்கு மாத்திடணும். இப்ப எல்லாத்தையும் ஒரு ஹார்ட் டிஸ்க்ல போட்டு வெக்கறதுதான் நல்லது. சாரி, ஒரு ஹார்ட் டிஸ்க் இல்ல. ரெண்டு டிஸ்க்ல காபி பண்ணனும். ஏன்னா ஒரு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆச்சுன்னா அவ்வளவுதான். அதுலருந்து ரிகவர் செய்ய லட்சக்கணக்குல செலவாகும்.” என்றார் மாமா.

“சிறந்த ஹார்ட் டிஸ்க் நம்ம தலைதான் மாமா. எல்லாத்தையும் நினைவுல வெச்சுகிட்டா போதும். ஒரு பாட்டை விட அதைப் பத்தின நினைவுதான் உண்மையில இனிமையானது.” என்றேன்.

“நினைவு ஒழுங்கா இருக்கணும்னா உடல்நலத்தை ஒழுங்கா பார்த்துக்கணும். மூளைக்கு சரியா ரத்தம் போகாட்டி, ரத்தம் கசிஞ்சா, ஸ்ட்ரோக் ஏற்பட்டு, பல நினைவுகள் காணாம போயிடும்.” என்றார் மாமா.

ஸ்ட்ரோக் வராம தடுக்க என்னென்ன உணவு, மருந்தெல்லாம் வேணும்னு நாலு பேரும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சிருக்கோம்.

வாலுபீடியா 1

அக்டோபர் 24: உலக வளர்ச்சிக்கான தகவல் தினம்

அக்டோபர் 27: ஒலி, ஒளி மரபைப் போற்றும் தினம்.

அக்டோபர் 28: உலக அனிமேஷன் தினம்

அக்டோபர் 29: உலக ஸ்ட்ரோக் விழிப்புணர்வு தினம்.

வாலுபீடியா 2

இந்திய, தமிழ் சினிமாவின் ஆரம்ப கால மௌனப் படங்களில் பெரும்பாலானவை பாதுகாக்கப்படாமல் அழிந்துவிட்டன. அவற்றின் பெயர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், திரைப்படங்கள், வீடியோ படங்கள் முதலியவற்றைப் பாதுகாக்கும் முறை, தனிப் பாடமாக இன்று உலகெங்கும் கற்பிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us