PUBLISHED ON : டிச 05, 2016

கல்லூரிகளில், இளநிலை கணித பட்டப்படிப்பு, மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்படுகிறது. இது கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை ஆழமாக கற்க உதவும். ஆனால், உலக அலவில் கணிதத்தில் நடக்கும் ஆய்வுகளைப் பற்றி தெரிந்துகொண்டு, சர்வதேச தரத்திலான ஆய்வுகள் செய்ய வாய்ப்பு வழங்காது.
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், ஐ.ஐ.எஸ்.சி., (IISc - Indian Institute of Science) நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்குகிறது. உலக அளவில், ஆராய்ச்சியில் 35வது தரவரிசையில் உள்ளது.
இந்த நிறுவனம், 1909ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், இதன், முதல் இயக்குனராக பொறுப்பு வகித்துள்ளார். ஹோமி பாபா, சதிஷ் தவான், சி.என்.ஆர். ராவ், ஹரிஷ்சந்திரா ஆகிய அறிவியல் மேதைகள், இங்கு படித்தவர்களில் முக்கியமானவர்கள். வேதியியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான 2 துறைகளுடன் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இப்போது, 39 அறிவியல் துறைகளைக் கொண்டுள்ளது. வளாகம், 372 ஏக்கரில் உள்ளது. 3,500 பேர் படிக்கின்றனர்; இதில் 2,200 பேர் ஆய்வு மாணவர்கள்.
இளங்கலை படிப்புகள் என்ன?
பி.எஸ்., இளங்கலை: இந்த நிறுவனம், 2011ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. முதல் மூன்று பருவங்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படைக் கல்வி கற்பிக்கப்படுகிறது. நான்காவது பருவத்தில், மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப, இயற்பியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து படிக்கலாம். இறுதி ஆண்டில், ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இளங்கலை பட்டத்துக்கு தகுதிபெறும் மாணவர்கள் விரும்பினால், மேலும் ஓராண்டு படிப்பை நீட்டித்து, முதுகலை பட்டப் படிப்பை முடிக்கலாம்.
எப்படி சேரலாம்?
இந்த படிப்புகளில் சேர, 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மையாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மத்திய அரசு நடத்தும் நான்கு நுழைவுத் தேர்வுகளில், ஒன்றில் தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுகள் விவரம்:
1) கிஷோர் வைக்யனிக் ப்ரோத்சஹான் யோஜனா (Kishore Vaigyanik Prothsahan Yojana - KVPY). இதை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்துகிறது.
2) 'ஜாயின்ட் எண்ட்ரென்ஸ் மெயின் தேர்வு' (JEE (Main) - Joint entrance exam). இதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்துகிறது.
3) 'ஜே.இ.இ. அட்வான்ஸ்டு' (JEE - Advanced) தேர்வு. இதை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்கள் நடத்துகின்றன.
4) 'நீட்' (National Eligibility- cum- Entrance Test - NEET) தேர்வு.
இந்த தேர்வுகள் எழுத, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஆன்லைனில் www.iisc.ernet.in/ug விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இடஒதுக்கீடு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
- இரா. செங்கோதை, ஆசிரியர், பை கணித மன்றம்
